பண்டுக்கு சான்ஸ்.. சாம்சனுக்கு பென்ச்.. கடுப்பான கேரள எம்பி! நறுக் பாய்ண்ட் - நெருக்கடியில் பிசிசிஐ
டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியில் தொடர்ந்து சொதப்பி வரும் ரிஷப் பண்டுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகளை வழங்கிவிட்டு, சிறப்பாக ஆடி வரும் சஞ்சு சாம்சனுக்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்படுவது பற்றி தற்போது காங்கிரஸ் எம்.பி சசி தரூர் குரல் எழுப்பி இருக்கிறார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு இருந்து வரும் கேரளாவை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன், தொடர்ந்து ஐபிஎல் மற்றும் முதல் தர போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.
ஆனாலும் இந்திய அணியில் அவருக்கு விளையாடும் வாய்ப்பு என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. ஒரு சில ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் கூட இந்திய அணிக்காக தேர்வு செய்யப்படும் நிலையில் சஞ்சு சாம்சன் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறார்.
தென் கொரியாவின் வான் எல்லைக்குள் நுழைந்த.. சீன, ரஷ்ய விமானங்கள்.. பதறிய அமெரிக்கா.. என்ன நடந்தது?

வாய்ப்பு மறுப்பு
சஞ்சு சாம்சன் கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணிக்காக ஒரு சில தொடர்களில் விளையாட தேர்வு செய்யப்பட்டாலும், மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்டிற்கே விளையாட வாய்ப்பு அளிக்கப்பட்டு வந்தது. சஞ்சு சாம்சன் பெஞ்சில்தான் அமர வைக்கப்படுகிறார். ஒரே ஒரு போட்டியில் மட்டும் வாய்ப்பு அளித்துவிட்டு அவர் சிறப்பாக செயல்படவில்லை என்று கூறி தொடர்ந்து நீக்கப்பட்டு வருகிறார்.

நியூசிலாந்து தொடர்
இதே நிலையில்தான் டி20 உலகக்கோப்பையை தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்த சஞ்சு சாம்சனுக்கு விளையாட வாய்ப்பு தரப்படவில்லை. இதனை தொடர்ந்து வெளியான வங்கதேச தொடரில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் பட்டியலில் சஞ்சு சாம்சன் பெயர் இடம்பெறாதது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனை கண்டித்து #CastiestBCCI என்ற ஹேஷ்டேக்கை கிரிக்கெட் ரசிகர்கள் டிரெண்ட் செய்தனர்.

ரசிகர்கள் ஆதரவு
அதே நேரம் கடந்த வாரம் நியூசிலாந்து அணிக்கு ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் சேர்க்கப்பட்ட சஞ்சு சாம்சன், ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இருந்தாலும், லோயர் ஆர்டரிலேயே களமிறக்கப்பட்டார். இந்த நிலையில் 2 வது ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்படாமல் அவரை விட குறைவான ரன்களை அடித்த ரிஷப் பண்ட் உள்ளிட்ட வீரர்கள் தேர்வு செய்யப்பட்டதை கண்டித்து சாம்சனின் ரசிகர்கள் #SupportSanjuSamson என டிரெண்ட் செய்தனர்.

பிபா உலகக்கோப்பை
அதே நாளில் கத்தாரில் நடைபெற்று வரும் பிபா கால்பந்து உலகக்கோப்பை போட்டியை காண சென்ற இந்திய கிரிக்கெட் ரசிகர்கள், சஞ்சு சாம்சனை ஆதரித்து பேனர்களை உயர்த்திப் பிடித்ததும் டிரெண்டானது. இதனை அவர் கேப்டனாக பொறுப்பு வகிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தது.

3 வது போட்டி
இந்த நிலையில் இன்று 3 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதிலும் சாம்சன் சேர்க்கப்படாததால் ரசிகர்கள் மீண்டும் தங்களின் கண்டனங்களை பதிவு செய்தார்கள். இதிலும் ரிஷப் பண்ட் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த நிலையில் இப்போட்டி தொடங்கும் முன் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி சசி தரூர் கருத்து தெரிவித்து உள்ளார்.

சசி தரூர் கருத்து
அதில், "பயிற்சியாளர் விவிஎஸ் லட்சுமணன், பண்ட் 4 வது இடத்தில் சிறப்பாக விளையாடக்கூடியவர். அவரை ஆதரிப்பது கடமை" என்கிறார். அவர் பார்மில் இல்லாத நல்ல வீரர். கடைசியாக ஆடிய 11 போட்டிகளில் 10ல் அவர் சொதப்பி உள்ளார். சாம்சன் ஒருநாள் போட்டிகளில் 66 என்ற சராசரியுடன் உள்ளார். கடந்த 5 போட்டிகளிலும் சிறப்பாக ரன் குவித்தவர் தற்போது பெஞ்சில் உள்ளார்." என்று பதிவிட்டார்.

பண்டுக்கு ஓய்வு வேண்டும்
இந்த போட்டியில் பண்ட் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தவுடன் ட்விட்டரில் பதிவிட்ட சசி தரூர், "பண்டின் மேலும் ஒரு சொதப்பல். வெள்ளை பந்து கிரிக்கெட்டில் பண்டுக்கு தற்போது ஓய்வு தேவை. சஞ்சு சாம்சனுக்கு மேலும் ஒரு வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது. அவர் திறமையை மீண்டும் நிரூபிக்க ஐபிஎல் போட்டிகள் வரை காத்திருக்க வேண்டும். இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர்." என்று பதிவிட்டு உள்ளார்.