அதிர வைத்த நடிகை ராஷ்மிகாவின் டீப் ஃபேக் ஆபாச வீடியோ.. 5 பிரிவுகளின் கீழ் டெல்லி போலீஸ் வழக்கு
டெல்லி: பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை வைத்து டீப் ஃபேக் என்ற தொழில்நுட்பம் மூலம் ஆபாச வீடியோ எடிட் செய்து பரப்பப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் டெல்லி போலீஸ் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. விஜய் நடித்த வாரிசு, கார்த்தி நடித்த சுல்தான் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்த இவருக்கு நாடு முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ராஷ்மிகா மந்தனாவின் வீடியோ ஒன்று ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களில் வெளியாகி அதிகளவில் பகிரப்பட்டு வந்தது.

லண்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளி இன்ஸ்டாகிராம் பிரபலமான ஜாரா பட்டேலின் வீடியோவை எடுத்து அதில் ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை மட்டும் வைத்து எடிட் செய்து வீடியோ வெளியிட்டு உள்ளார்கள். டீப் ஃபேக் என்று அழைக்கப்படும் ஏஐ தொழில்நுட்பம் மூலம் எடிட் செய்யப்பட்ட இந்த வீடியோ, உண்மை போன்றே தெரியும் போலியாகும். தொடக்கத்தில் போட்டோஷாப் போன்ற செயலிகள் மூலம் புகைப்பட முகத்தை மாற்றி எடிட் செய்து வெளியிடப்பட்டு வந்த நிலையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சியால் இதுபோன்ற போலி ஆபாக வீடியோக்களை தயாரித்து வெளியிட்டு விடுகிறார்கள்.
இப்படி பல போலி வீடியோக்கள் உண்மை போன்றே சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அப்படிதான் ராஷ்மிகா மந்தனாவின் வீடியோவையும் எடிட் செய்து பரப்பி இருக்கிறார்கள். இந்த வீடியோவை சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலர் ட்விட்டரில் பகிர்ந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். எக்ஸ் சமூக வளைதள பக்கத்தில் பகிர்ந்த நடிகர் அபிஷேக் பச்சன், "இந்தியாவில் டீப் பேக் வீடியோக்களை தடுக்க உடனடியாக சட்டம் கொண்டுவர வேண்டும். நீங்கள் இன்ஸ்டாகிராமில் பார்த்த இந்த ராஷ்மிகா மந்தனாவின் வீடியோ, ஜாரா பட்டேலின் டீப் பேக் வீடியோவாகும்." என்று குறிப்பிட்டு இருந்தார்.
அபிஷேக் பச்சனினின் இந்த ட்வீட்டை அவரது தந்தையும் பாலிவுட் சூப்பர் ஸ்டாருமான அமிதாப் பச்சனும் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரும் கருத்து தெரிவித்து இருந்தார். அதில் " டீப் ஃபேக் வீடியோக்கள் மிகவும் மோசமானவை. பிரதமர் மோடி தலைமையிலான அரசு இணைய பயன்பாட்டாளர்கள் பாதுகாப்பை உறுதிபடுத்தி வருகிறது. ஐடி விதிகளின் அடிப்படையில் சமூக வலைதளங்களில் உண்மையான பதிவுகள் பகிரப்படுகிறதா என்பதை உறுதிபடுத்த வேண்டும்.
36 மணி நேரத்திற்குள் தவறான தகவல்களை நீக்கம் செய்ய வேண்டும். இந்த விதிகளின் கீழ் நிறுவனங்கள் செயல்படாவிட்டால் ஐபிசி விதிகளின்படி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்." என்று குறிப்பிட்டு உள்ளார். இது தொடர்பாக நடிகை ராஷ்மிகா மந்தனாவும் தன்னுடைய வேதனையை சமூக வலைதளத்தில் வெளிப்படுத்தி இருந்தார்.
தான் ஒரு சாதாரண பெண்ணாக இருந்தால் இதிலிருந்து மீண்டு வந்திருக்க முடியாது என்றும், திரைப்பிரபலமாக இருப்பதால் இதிலிருந்து விடுபட முடிந்ததாகவும், இதுபோன்ற வீடியோ பகிரப்பட்டது வருத்தமளிப்பதாகவும் கூறினார். இது தொடர்பாக டெல்லி போலீஸ் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து தேசிய மகளிர் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில் இது தொடர்பாக டெல்லி போலீஸ் தற்போது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications