மகனைக் காப்பாற்ற முயன்ற தந்தை.. 23-வது மாடியில் இருந்து தவறி விழுந்து இருவரும் உயிரிழப்பு
டெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டா வெஸ்ட் பகுதியில் மகனைக் காப்பாற்ற முயன்ற தந்தையும், 11 வயது மகனும் மகாகுன் மைவுட்ஸ் குடியிருப்பின் 23-வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தனர்.
பூஜைக்காக பால்கனியில் இருந்து பூக்களைப் பறிக்க முயன்றபோது சிறுவன் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது மகனைக் காப்பாற்ற முயன்ற 40 வயதான தந்தை ரந்தீப் பத்ராவும் தவறி விழுந்து உயிரிழந்தார்.
ரந்தீப் பத்ரா என அடையாளம் காணப்பட்ட அந்தத் தந்தையும், அவரது மகனும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், இருவரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சம்பவம் நடந்தது எப்படி?
ரந்தீப் பத்ராவின் மனைவி போலீசாரிடம் கூறுகையில், குடும்பத்தினர் அதிகாலையில் காட்டு ஷியாம் கோயிலுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தனர். இதற்காகப் பூஜை செய்யத் தேவையான பூக்களைப் பறிப்பதற்காக ரந்தீப்பும் அவரது மகனும் பால்கனிக்குச் சென்றுள்ளனர்.
அப்போது சிறுவன் எதிர்பாராதவிதமாகத் தவறி, நிலைதடுமாறியதாகக் கூறப்படுகிறது. இதனால் அவன் பால்கனியில் தொங்கிய நிலையில் இருந்ததாகத் தெரிகிறது.
தொங்கிக்கொண்டிருந்த மகனைக் காப்பாற்றுவதற்காகத் தந்தை ரந்தீப் பத்ரா முயன்றுள்ளார். அந்த முயற்சியின்போது அவரும் 23-வது மாடியில் இருந்து தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழந்தனர்.
மேலும், மழையின் காரணமாக பால்கனியின் தரைப்பகுதி வழுக்கும் தன்மையுடன் இருந்திருக்கலாம் என்றும், இதுவே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் சம்பவம் தொடர்பான ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போலீசார் விசாரணை
இன்று நடந்த இந்த துயர் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு இந்தச் சம்பவம் குறித்த தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணையைத் தொடங்கினர்.
தற்போது, உயிரிழந்த இருவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்படுவதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், சம்பவம் தொடர்பாக சட்டப்படியான நடவடிக்கைகளையும் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.



Click it and Unblock the Notifications
