அபராதம் + கைது.. வருமான வரி ITR தாக்கல்.. பொய்யான refund கேட்பவர்களுக்கு.. எதிராக கடும் நடவடிக்கை
டெல்லி: வருமான வரிக் கணக்குகளில் மோசடியான விலக்குகள் மற்றும் சலுகைகளை கோருபவர்களை குறிவைத்து, நாடு தழுவிய சரிபார்ப்பு நடவடிக்கையை வருமான வரித்துறை நேற்று தொடங்கியது.
இந்த நடவடிக்கை, சிறிய அரசியல் கட்சிகள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளிப்பதற்கான விலக்குகளுக்கு மட்டுமல்லாமல், உடல்நலக் காப்பீடு மற்றும் மருத்துவச் செலவுகள் (வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80D மற்றும் 80DDB), HRA (பிரிவு 10(13A), கல்வி மற்றும் வீட்டுக் கடன்களுக்கான வட்டி மற்றும் வாகனங்கள் வாங்குவதற்கான விலக்குகளையும் உள்ளடக்கியது (பிரிவு 80E, 80EE மற்றும் 80EEB) என்று CBDT தெரிவித்துள்ளது. மேற்கண்ட விலக்குகளை பயன்படுத்தி பொய்யாக ரிட்டர்ன் தாக்கல் செய்தவர்களை சோதனை செய்ய, அவர்களுக்கு refund வழங்காமல் கடுமையான சோதனைகளை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கடுமையான ஆய்வு
அதிக விலக்கு கோரிய MNC ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் ஆகியோர் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசடியான உரிமைகோரல்களுக்கு எதிராக அபராதம் மற்றும் வழக்குத் தொடருவது உட்பட கடுமையான நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறை தயாராகி வருகிறது. 150 இடங்களில் நடந்து வரும் சரிபார்ப்பு நடவடிக்கையானது, இந்த திட்டங்களுக்குப் பின்னால் உள்ள நெட்வொர்க்குகளை அகற்றுவதற்கும், பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கும் உதவும் என்று அரசு தரப்பு கூறுகிறது. சிஏக்களை வைத்து பொய்யாக வருமான வரி தாக்கல் செய்வதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. டிஜிட்டல் பதிவுகள் உட்பட முக்கியமான ஆதாரங்களை கேட்டு விசாரணை செய்ய உள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
சில ITR தாக்கல் செய்பவர்கள் சிஏக்கள் மற்றும் இடைத்தரகர்களால் மூலம் மோசடி செய்வது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பல மோசடி கும்பல்கள், போலியான விலக்குகள் மற்றும் சலுகைகளை கோரி கணக்குகளை தாக்கல் செய்து வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது.
வருமான வரிக் கணக்குகளில் சான்றுகள் இல்லாமல் தவறான விவரங்களை அளிப்பவர்களுக்கு இந்த நடவடிக்கை ஒரு எச்சரிக்கை சமிக்ஞையாகும். தவறான தகவல்களை அளித்தவர்களை கண்டறிய வருமான வரித்துறை பல்வேறு தரவு தளங்களை பயன்படுத்த தொடங்கி உள்ளது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, குஜராத், பஞ்சாப் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சோதனை நடத்தியதில், மோசடியான உரிமைகோரல்களுக்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
குறைபாடுகள் ஏதேனும் இருந்தால், வரி செலுத்துவோர் தங்கள் கணக்குகளை திருத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதன் விளைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, கடந்த நான்கு மாதங்களில் சுமார் 40,000 வரி செலுத்துவோர் தாமாக முன்வந்து ரூ.1,045 கோடி மதிப்பிலான தவறான உரிமைகோரல்களை திரும்பப் பெற்றுள்ளனர். இருப்பினும், பலர் இன்னும் இணங்கவில்லை, ஒருவேளை இந்த மோசடி கும்பல்களின் பின்னணியில் பெரிய கும்பல் இருக்கிறதா என்றும் விசாரணைகள் செய்யப்பட உள்ளன.
சோதனை செய்த பின்பே ரீபண்ட்
நாடு முழுவதும் உள்ள தனியார் மற்றும் அரசு ஊழியர்கள் தாக்கல் செய்த வருமான வரி ரிட்டர்ன்களை வருமான வரித்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது. வருமான வரி ரிட்டர்ன்களை முழுமையாக ஆய்வு செய்த பின்னரே ரீஃபண்ட் வழங்கப்படும் என வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாக பலருக்கு ரீஃபண்ட் வழங்கிய பின், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். சில விளக்கங்கள் ஒரு வருடம் கழித்து கூட மின்னஞ்சல் மூலம் கேட்கப்படும். ஆனால் இனி, சந்தேகங்கள் முழுமையாக தீர்க்கப்பட்ட பின்னரே ரீஃபண்ட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரித்துறையானது 2025 மதிப்பீட்டு ஆண்டுக்கான சுமார் 1.65 லட்சம் ரிட்டர்ன்களை தீவிரமாக ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கான நோட்டீஸ்களை அனுப்புவதற்கான கடைசி தேதி செப்டம்பர் 15 ஆகும். 2024-25 நிதியாண்டில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரிக் கணக்குகளை ஆய்வு செய்வதற்கான அறிவிப்புகள் செப்டம்பர் 15-க்குள் அனுப்பப்பட வேண்டும்.












Click it and Unblock the Notifications