அமெரிக்கா முதல் இந்தியா வரை.. ஒரே நேரத்தில் உலகெங்கும் வெடிக்கும் போராட்டம்! எல்லாம் ஒரே காரணம் தான்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உலக வரைபடத்தை நாம் எடுத்து பார்த்தால்.. கடந்த சில மாதங்களில் உலகின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன. பிரான்ஸ் தொடங்கி அமெரிக்கா, அல்பேனியா வரை பெரும்பாலான நாடுகளில் இதுபோல போராட்டங்கள் வெடித்துள்ளன. இதற்கான காரணம் மற்றும் பின்னணி தொடர்பாக நாம் பார்க்கலாம்!

உலகின் பல்வேறு நாடுகளில் அரசுகளுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. பிரான்ஸ், பெல்ஜியம், போர்ச்சுகல், இத்தாலி, அல்பேனியா, அர்ஜென்டினா எனப் பல நாடுகளில் விலைவாசி உயர்வு, வீட்டு வாடகை சுமை, கல்விக்கான நிதி குறைப்பு, வேலையின்மை உள்ளிட்ட பிரச்சனைகள் மக்களை வீதிக்கு அழைத்து வந்துள்ளன.

Global Protests

பிரான்ஸ்

பிரான்ஸில் கல்வி நிதி ஒதுக்கீடு மற்றும் பள்ளிகளின் நிலை தொடர்பாக மாணவர்கள், ஆசிரியர்கள் கடந்த மாதம் தொடங்கிய போராட்டம் தற்போது பெரிதாக வெடித்துள்ளது. விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை மற்றும் மக்களின் வாங்கும் திறன் குறைவது உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து இப்போது போராட்டங்கள் தொடர்கிறது. பல இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல்களும் ஏற்பட்டன.

பிரான்ஸ் நாட்டில் விலைவாசி உயர்வை கண்டித்து நடந்த போராட்டங்களில் நாடு முழுவதும் 5.5 லட்சம் பேர் பங்கேற்றதாகவும், பாரிஸில் மட்டும் 1.10 லட்சம் பேர் திரண்டதாகவும் பிரான்ஸ் உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனெஸ் தெரிவித்தார். அங்கு இப்போது அதிபராக இருக்கும் இமானுவேல் மேக்ரானின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், அரசின் கொள்கைகள் மீதான அதிருப்தியும் தீவிரமடைந்துள்ளது.

பெல்ஜியம், போர்ச்சுகல், இத்தாலி

பெல்ஜியத்தில் அரசு செலவினங்கள் குறைக்கப்படுவது, குடும்பங்களின் செலவுகள் அதிகரிப்பது, பல்கலைக்கழக கட்டணங்கள் உயரக்கூடும் என்ற அச்சம் ஆகியவை மாணவர்களின் போராட்டத்துக்கு காரணமாகியுள்ளன. பின்னர் இது விலைவாசி உயர்வை கண்டித்து நடக்கும் மிக பெரிய எதிர்ப்பாக மாறியது. பிரஸ்ஸல்ஸ், லீஜ் நகரங்களில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து தண்ணீர் பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டன.

குறைந்த ஊதியம், அதிகரிக்கும் வாழ்க்கை செலவு, வீடு வாங்குவதிலும் வாடகைக்கு எடுப்பதிலும் உள்ள சிரமங்களுக்கு எதிராக போர்ச்சுகலின் தலைநகர் லிஸ்பனில் ஆயிரக்கணக்கானோர் பேரணி நடத்தினர். 2017ம் ஆண்டுக்கு பிறகு லிஸ்பன் உள்ளிட்ட பல நகரங்களில் வீடுகளின் விலைகள் இருமடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளன. சொந்தமாக வாங்குவது மட்டுமின்றி, வீட்டு வாடகை செலவும் அதே அளவுக்கு அதிகரித்துள்ளதால் இளைஞர்களும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாலியின் மிலன் நகரிலும் ஊதிய உயர்வின்மை, பணவீக்கம், அன்றாட செலவுகளைச் சமாளிப்பதில் உள்ள சிரமங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. எனினும், பிரான்ஸில் நடைபெற்ற போராட்டங்களுடன் ஒப்பிடும்போது இத்தாலியில் பெரியளவில் போராட்டங்கள் தீவிரமடையவில்லை.

அல்பேனியா

அல்பேனியாவில் பல்கலைக்கழகங்களின் மோசமான உள்கட்டமைப்பு, உயர்கல்வி செலவு, நிதியுதவி இல்லாதது, படிப்பை முடித்த பிறகு வேலைவாய்ப்பு கிடைப்பதில் உள்ள சிக்கல்கள் ஆகியவற்றுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அக்டோபர் 13ம் தேதி தலைநகர் திரானாவில் உள்ள கல்வி அமைச்சகத்தின் வெளியே நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் கட்டடத்தின் மீது செங்கற்களையும் கான்கிரீட் துண்டுகளையும் வீசியதால் போலீசார் தலையிட வேண்டிய சூழல் ஏற்பட்டது. பின்னர் வருமான ஏற்றத்தாழ்வு, வேலையின்மை, பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி ஆகியவையும் போராட்ட களத்தில் எதிரொலித்தது.

அமெரிக்கா, அர்ஜெண்டினா, துருக்கி

அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்பின் ஆட்சிக்கு எதிரான 'நோ கிங்ஸ்' அமைப்பு பல நகரங்களில் பேரணிகளை நடத்தியது. அங்கு சில வாரங்களில் மிட் டேர்ம் தேர்தல் நடக்கும் நிலையில், இந்த போராட்டங்கள் கவனம் பெற ஆரம்பித்துள்ளன.

அர்ஜென்டினாவில் அதிபர் ஜேவியர் மிலே, உயர்கல்விக்கு ஒதுக்கப்படும் நிதியை குறைத்தார். இதற்கு எதிராக மாணவர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள், தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றம் அருகே நடைபெற்ற முக்கிய பேரணி அமைதியாக நடந்தபோதும், கூட்டத்திலிருந்து பிரிந்த சிலர் போலீசார் மீது கற்களை வீசினர். 2023ன் இறுதியில் மிலே பதவியேற்ற பிறகு, கல்வி நிதியை அவர் தொடர்ந்து குறைத்தே வருகிறார். இதை கண்டித்து அங்கு நடக்கும் 5வது மிக பெரிய போராட்டம் இதுவாகும்.

துருக்கியில் பணவீக்கம் மற்றும் போதிய ஓய்வூதியம் கிடைக்காதது தொடர்பாக ஓய்வூதியதாரர்களும் தொழிலாளர் அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகர் அங்காராவில் நீதிமன்றம் முன்பு திரண்ட மக்கள் போராட்டத்தில் இறங்கினர். அப்போது, ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியான 60 வயது அலி சேகரோக்லு தனது நிதி நெருக்கடி மற்றும் வேலையில்லாத இரு மகன்கள் குறித்து உருக்கமாக பேசினார். பிறகு திடீரென அங்கேயே தற்கொலை செய்து கொண்டார்.

இந்தியா

இந்தியாவில் என்ன நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். இந்தியாவில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டி எதிர்க்கட்சிகளும், கரப்பான் பூச்சி கட்சியும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. இந்த குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் மறுத்தாலும் போராட்டங்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.

இப்படி உலகெங்கும் வரிசையாக போராட்டங்கள் வெடித்து வருகிறது. இந்த போராட்டங்களுக்கான காரணங்கள் வெவ்வேறாக இருந்தாலும், அதிகரிக்கும் வாழ்க்கை செலவு, கல்வி நிதி குறைப்பு, வேலைவாய்ப்பு, அரசின் கொள்கைகள் மீதான அதிருப்தி ஆகியவை தான் முக்கிய காரணங்களாக உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+