ரங்கராஜன் குமாரமங்கலம் மனைவி கிட்டி கொலை.. வீட்டு சலவை தொழிலாளி கைது!
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி டெல்லியில் அவரின் வீட்டில் நேற்று கொலை செய்யப்பட்டார். இதையடுத்து அவரது மகன் மோகன் குமாரமங்கலம் ட்விட்டரில் தனது தந்தை, தாய் இடம் பெற்ற பழைய புகைப்படத்தை பகிர்ந்து உருக்கமாக பதிவு செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் சேலம் தொகுதியில் 1984 முதல் 1996 வரையிலும் எம்.பியாக இருந்தவர். 1998 முதல் 2000 வரை திருச்சி தொகுதி எம்.பியாக இருந்தார்.
1991 முதல் 1993ம் ஆண்டு வரை வரை பிரதமர் நரசிம்மராவ் அரசில் சட்டம், நீதி மற்றும் கம்பெனி விவகாரத்துறை அமைச்சராக ரங்கராஜன் குமாரமங்கலம் பதவி வகித்தவர். பின்னர் பாஜகவில் சேர்ந்த ரங்கராஜன் குமாரமங்கலம், வாஜ்பாய் அரசில் 1998 முதல் 2000 வரை மின்சாரத் துறை அமைச்சராக இருந்தார். 2000ம் ஆண்டு, ஆகஸ்ட் 23ம் தேதி ரங்கராஜன் குமாரமங்கலம் காலமானார்.

டெல்லியில் வசித்த கிட்டி
ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி குமாரமங்கலம் டெல்லியில் உள்ள ஆனந்த்விஹார் பகுதியில் வசித்துவந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு வீட்டுக்கு வந்த அவர் வீட்டு சலவை செய்யும் தொழிலாளி மற்றும் அவரோடு வந்த 3 பேர் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கிட்டியை கொலை செய்துள்ளனர்.

சலவை தொழிலாளி
கடந்த 5 ஆண்டுகளாக வீ்ட்டில் துணிகளை சலவை செய்யும் பணியில் அந்த தொழிலாளி இருந்துள்ளார். எனவே கதவை தட்டியபோது வீட்டு வேலைக்கார பெண்மணி கதவை திறந்து உள்ளே விட்டுள்ளார். அவர் தனது கூட்டாளிகளோடு சேர்ந்து கிட்டியை கொலை செய்துவிட்டு கொள்ளையடித்துள்ளனர்.

குடும்ப பின்னணி
இதுகுறித்து விசாரித்த போலீசார், சலவைத் தொழிலாளி ராஜு (24) என்பவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரங்கராஜன் குமாரமங்கலம், கிட்டி குமாரமங்கலத்துக்கு ஒரு மகன், ஒரு மகள் உண்டு. மகன் ரங்கராஜன் மோகன் குமாரமங்கலம் காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் பதவியில் உள்ளார்.

டுவிட்டரில் பழைய படம்
அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், தனது தந்தை மற்றும் தாய் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவர்,
எனது தாய் எப்போதும் எனது தந்தையுடன் இருந்தார். என்னுடைய தாயால்தான், தந்தை அந்த அளவுக்கு வளர்ந்தார். தந்தை இறந்த பிறகு தாய் பழையமாதிரியே இல்லை. அவர்கள் ஒருபோதும் பிரிந்து இருக்கக்கூடாது என்பதால் இப்போது எனது தாய் எனது தந்தையுடன் சேர்ந்து இருக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications