6 நாளில் காலி செய்யணும்.. பிரதமர் இல்லம் அருகே உள்ள மசூதிக்கு நோட்டீஸ்.. தண்ணீர் – மின்சாரம் ‘கட்’
டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் அருகே உள்ள பழமையான மசூதி அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளது எனக்கூறி குடிநீர் மற்றும் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி தற்போது 6 நாளில் அந்த மசூதியை காலி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டு இருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
டெல்லியில் பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இல்லம் '7, லோக் கல்யாண் மார்க்' என்ற முகவரியில் அமைந்துள்ளது. பிரதமர் மோடியின் இல்லத்தின் அருகே ரேஸ் கோர்ஸ் மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதி சுமார் 125 ஆண்டுகள் பழமையானதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தான், ரேஸ்கோர்ஸ் மசூதியை காலி செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிலம் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் (Land and Development Office) மேற்கொண்ட ஆய்வில் மசூதி அமைந்துள்ள இடம் அரசுக்கு சொந்தமானது . இந்த மசூதி அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளது. இந்த மசூதிக்கு எந்தவித ஒப்புதலும் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த மசூதிக்கு வழங்கப்பட்டு வந்த குடிநீர் இணைப்பு மற்றும் மின்சார இணைப்பு உள்ளிட்டவை துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் தான் தற்போது அந்த மசூதியை 6 நாளில் காலி செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் மசூதி இடிக்கப்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தற்போது டெல்லியில் விவாதத்தை கிளப்பி உள்ளது. இதுதொடர்பாக 'ஜாமியத் உலமா-இ-ஹிந்த்' அமைப்பு சார்பில் மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் அமைச்சர் கிரண் ரிஜிஜுவின் உதவி கோரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வழங்கப்பட்ட மனுவில், ''மசூதியை காலி செய்ய வழங்கப்பட்ட நோட்டீஸை ரத்து செய்ய உதவ வேண்டும். ஏனென்றால் 1977 டெல்லி கெஜட்டில் குறிப்பிடப்பட்ட பாரம்பரிய நினைவு சின்ன பட்டியலில் இந்த மசூதி உள்ளது.
அதேபோல், சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சகத்தில் பராமரிக்கப்படும் திருத்த பட்டியலிலும் இந்த இடம் இடம்பெற்றுள்ளது. இதனால் அனைத்து சட்டப்பூர்வ செயல்முறையையும் முடிக்காமல் மசூதியை இடிக்க கூடாது. அதுமட்டுமின்றி மசூதியையும், அதனையொட்டி அமைந்துள்ள மயானத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இஸ்லாமிய தலைவர்கள் இந்த மசூதியை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜுவிற்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications
