நல்ல சான்ஸ்.. உக்ரைன் ரஷ்ய போரில் மூக்கை நுழைக்கும் சீனா! இந்தியாவிற்கு கிடைக்கும் "பொன்னான" தருணம்!
டெல்லி: ரஷ்யா உக்ரைன் போரால் சர்வதேச அளவில் இந்தியாவிற்கு ராஜாங்க ரீதியாக பல்வேறு சாதகமான சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளன. இந்திய வெளியுறவுத்துறை இதை சரியாக பயன்படுத்தும் பட்சத்தில் இந்தியாவிற்கு பல்வேறு பயன்கள் இதன் மூலம் கிடைக்கும் என்று உலக அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தீவிரமாக நடந்து வருகிறது. உக்ரைன் மிக சிறிய நாடுதான். ரஷ்யா தனது முழு பலத்தை பயன்படுத்தினால் உக்ரைனை மொத்தமாக கைப்பற்ற முடியும்.
ஆனாலும் உக்ரைனை பிடிக்க முடியாமல் ரஷ்யா திணறிக்கொண்டு இருக்கிறது. ரஷ்ய ராணுவத்தின் பலம் நினைத்தது போல இல்லை என்று சொல்லும் அளவிற்கு ரஷ்யா இந்த போரில் முன்னேற முடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறது.

10 நாட்களில் காலி
இன்னும் அதிகபட்சம் 10 நாட்கள் மட்டுமே ரஷ்ய ராணுவத்தின் குண்டுகள், தோட்டாக்கள் இருக்கும். அதன்பின் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ரஷ்யாவின் போதிய ஆயுதங்கள் இருக்காது என்று அமெரிக்க ஊடகங்கள் பல செய்திகள் வெளியிட்டுள்ளன. அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகள் சிலரும் இதே விஷயத்தை பகிர்ந்து உள்ளனர். 10 நாட்களில் குண்டுகள் காலியாகும் என்பதால் சீனாவின் உதவியை ரஷ்யா நாடி உள்ளது. சீனாவிடம் ஆயுதங்களை ரஷ்யா கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மறுப்பு
ரஷ்ய ஊடகங்கள் இதை மறுத்து இருந்தாலும் ரஷ்யா சீனாவிடம் உதவி கேட்டது உண்மைதான் என்று அமெரிக்காவை சேர்ந்த பல்வேறு ஊடகங்கள் தெரிவித்து உள்ளனர். அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவான் இதுபற்றி கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார். சீனா ஒரு போதும் ரஷ்யாவிற்கு உதவி செய்ய நினைக்க கூடாது. நேரடியாகவோ, மறைமுகமாகவோ ரஷ்யாவிற்கு உதவ சீனா முயல கூடாது. ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை மீறி சீனா ஏதாவது உதவி செய்யும் பட்சத்தில் சீனா மீதும் கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று அவர் கூறியுள்ளார்.

பெரிதாக மாறும்
ஒருவேளை இந்த போரில் சீனா மூக்கை நுழைக்கும் பட்சத்தில் அது சர்வதேச போராக உருவெடுக்கும். ரஷ்யாவிற்கு ஆயுதங்களை கொடுக்கும் பட்சத்தில் அது சீனா மீதான பொருளாதார தடைக்கு வழி வகுக்கும். அது பெரிய போரில் கொண்டு போய் முடியும் வாய்ப்புகள் உள்ளன. அல்லது சீனா சர்வதேச அளவில் ரஷ்யா போல தனிமைப்படுத்தப்படும் வாய்ப்புகள் உள்ளன.

என்ன நடக்கும்
ஒருவேளை இந்த போரில் ரஷ்யாவிற்கு உதவியாக சீனா களமிறங்கினால் அது இந்தியாவிற்கு 3 பொன்னான வாய்ப்புகள் கொடுக்கும் என்று சர்வதேச அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். வாய்ப்பு 1 - இந்த போரில் இந்தியா இதுவரை நடுநிலையோடு இருக்கிறது. இந்தியாவின் நடுநிலையை மேற்கு உலக நாடுகள் எதிர்த்தாலும் கூட இந்தியாவை கண்டிக்கவில்லை. அதேபோல் நடுநிலையான இந்தியா மீது பொருளாதார தடைகளை விதிக்க முடியாது.

சீனா தடை
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கூடுதல் எண்ணெய் வாங்கினாலும் கூட, அமெரிக்காவுடனான நட்பு, பிரான்ஸ், ஜெர்மனி உடனான நட்பு காரணமாக இந்தியா மீது நேரடி பொருளாதார தடைகள் விதைக்கப்படாது. ஆனால் சீனா ரஷ்யாவிற்கு உதவினால் சீனா மீது பொருளாதார தடை போடப்படும் வாய்ப்புகள் உள்ளன. மேற்கு உலக நாடுகள் சீனாவை தண்டிக்கும் வாய்ப்புகள் உள்ளன. இது பொருளாதார ரீதியாக இந்தியாவிற்கு ஆசியாவில் பெரிய புஷ்ஷாக அமையும். ஆசியாவில் ரஷ்யா (70 சதவிகித ரஷ்ய நிலம் ஆசியாவில் உள்ளது), சீனா போன்ற நாடுகளை விட இந்தியா பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடையும்.

இந்தியா சூப்பர் பவர்
அதோடு சீனா போரில் நேரடியாக கலந்து கொண்டாலோ அதன் மூலம் நேட்டோ நாடுகள் நேரடியாக போரில் கலந்து கொண்டாலோ அந்த நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கும். போரில் நேரடியாக கலந்து கொள்ளும் நாடுகள் நேரடியாக பொருளாதார பாதிப்பை சந்திக்கும். இந்தியா நடுநிலை வகிக்கும் நிலையில் அப்படி பொருளாதார ரீதியான பாதிப்புகளில் இருந்து இந்தியா கண்டிப்பாக தப்பிக்கும். சீனாவிற்கு இந்தியா ஈடு கொடுக்க இது வாய்ப்பாக அமையும்.

நடுநிலை
அதோடு இந்தியா நடுநிலை வகிக்கும் நிலையில் உக்ரைன் - ரஷ்யா இடையில் பேச்சுவார்த்தைகளை வரும் காலங்களில் மேற்கொள்ள முடியும். மற்ற பெரிய நாடுகள் எல்லாம் இதில் சார்பு நிலைப்பாட்டை எடுத்துவிட்டதால் இந்தியா மட்டுமே சமரசம் பேசும் பலத்தோடு உள்ளது. இதை பயன்படுத்தி ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினருக்கான முன்னெடுப்புகளை இந்தியா மேற்கொள்ள முடியும். அதே போல சர்வதேச அளவில் இந்தியா மேற்கு உலகிலும், ரஷ்யா போன்ற நாடுகளிடமும் தொடர்ந்து நட்பை தக்க வைத்து இந்தியா அதன் மூலம் பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் பலன்களை அனுபவிக்க முடியும்.












Click it and Unblock the Notifications