India Questions US: அப்போ ஓகே சொல்லிட்டு.. இப்போ ஏன் எதிர்க்கிறீர்கள்? ரஷ்ய உறவு குறித்து அமெரிக்காவுக்கு இந்தியா கேள்வி
டெல்லி: ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், இந்தியா மீது போடப்பட்ட வரியை மேலும் அதிகரிப்போம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்திருந்தார். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு இந்தியா கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இது அமெரிக்காவுக்கு பிடிக்கவில்லை. ஏனெனில் இந்த வர்த்தகத்திற்கு அமெரிக்க டாலர் பயன்படுத்தப்படுவதில்லை. மாறாக இந்திய கரன்சிதான் பயன்படுத்தப்படுகிறது.

இப்படி இருக்கையில், ரஷ்யா கிட்ட இருந்து எண்ணெய் வாங்குறதாலதான், ரஷ்யாவுக்கு காசு போகுது. அதை வச்சு, உக்ரைன் மீது போர் நடத்துது. எனவே இந்தியா மறைமுகமாக போருக்கு உதவுகிறது. இதனால் இந்தியா மீதான வரியை அதிகரிப்போம் என்று டிரம்ப் எச்சரித்திருந்தார்.
இது தொடர்பாக தனது சோஷியல் மீடியா பக்கத்தில், "இந்தியா அதிக அளவில் ரஷ்ய எண்ணெயை கொள்முதல் செய்வதுடன், அவற்றில் பெரும்பாலானவற்றை வெளிச்சந்தையில் பெரும் லாபத்திற்கு விற்பனை செய்கிறது. ரஷ்யப் போரால் உக்ரைனில் எத்தனை பேர் கொல்லப்படுகிறார்கள் என்பதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. இதன் காரணமாக, இந்தியா அமெரிக்காவிற்குச் செலுத்தும் வரியை நான் கணிசமாக உயர்த்துவேன்" என பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இது குறித்து அமெரிக்காவுக்கு சில கேள்விகளை எழுப்பியுள்ளார். அதாவது, "உக்ரைன் போர் தொடங்கிய பிறகு, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்ததற்காக அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியாவை இலக்காகக் கொண்டு விமர்சித்து வருகின்றன. உண்மையில், போர் வெடித்த பிறகு எங்களுடைய சப்ளையர்களை ஐரோப்பா எடுத்துக்கொண்டது. எனவே இந்தியா ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்யத் தொடங்கியது.
உலக எரிசக்தி சந்தையின் நிலைத்தன்மையை வலுப்படுத்துவதற்காக, இந்தியா இதுபோன்ற இறக்குமதிகளைச் செய்ய வேண்டும் என அமெரிக்கா அப்போது தீவிரமாக ஊக்கப்படுத்தியது.
இந்தியாவின் இறக்குமதிகள், இந்திய நுகர்வோருக்கு நிலையான மற்றும் மலிவான எரிசக்தி கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டவை. இவை உலகச் சந்தை சூழ்நிலையால் கட்டாயப்படுத்தப்பட்ட ஒரு தேவையாகும். இருப்பினும், இந்தியாவைக் குறை சொல்லும் அதே நாடுகள் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்து வருகின்றன என்பது கவனிக்கத்தக்கது. நமது விஷயத்தில் இருப்பது போல், அவர்களின் வர்த்தகம் ஒரு அத்தியாவசிய தேசிய கட்டாயம் கூட இல்லை.
2024-ல் ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யாவுடன் $67.5 பில்லியன் மதிப்புள்ள பொருட்களை இருதரப்பு வர்த்தகம் செய்தது. கூடுதலாக, 2023-ல் $17.2 பில்லியன் மதிப்பிலான சேவை வர்த்தகத்தையும் மேற்கொண்டது. இது, அதே ஆண்டில் அல்லது அதற்குப் பிறகு ரஷ்யாவுடன் இந்தியா செய்த மொத்த வர்த்தகத்தை விட மிக அதிகம். ஐரோப்பாவின் திரவ இயற்கை எரிவாயு (LNG) இறக்குமதி 2024-ல் 16.5 மில்லியன் டன்களை எட்டியது, இது 2022-ல் இருந்த 15.21 மில்லியன் டன்கள் என்ற முந்தைய சாதனையை முறியடித்தது.
ஐரோப்பா-ரஷ்யா வர்த்தகம் எரிசக்தி மட்டுமல்லாமல், உரங்கள், சுரங்கப் பொருட்கள், ரசாயனங்கள், இரும்பு, எஃகு, இயந்திரங்கள் மற்றும் போக்குவரத்து உபகரணங்களையும் உள்ளடக்கியது.
அமெரிக்காவைப் பொறுத்தவரை, அது தனது அணுசக்தித் துறைக்கான யுரேனியம் ஹெக்ஸாஃப்ளூரைடு, மின்சார வாகனத் துறைக்கான பல்லேடியம், உரங்கள் மற்றும் ரசாயனங்களை ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து இறக்குமதி செய்து வருகிறது.
இந்த பின்னணியில், இந்தியாவை குறிவைத்து விமர்சிப்பது நியாயமற்றது மற்றும் ஆதாரமற்றது. எந்தவொரு பெரிய பொருளாதாரத்தைப் போலவே, இந்தியாவும் அதன் தேசிய நலன்களையும் பொருளாதாரப் பாதுகாப்பையும் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்" என நச் பதிலடி கொடுத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications