உச்சக்கட்ட பரபரப்பு! செங்கடலில் இந்தியா சரக்கு கப்பல் மீது டிரோன் தாக்குதல்! பின்னணியில் ஹவுதிகள்?
டெல்லி: செங்கடல் பகுதியில் இந்தியக் கொடியுடன் வந்த டேங்கர் கப்பல் மீது ஹவுதிக்கள் தாக்குதல் நடத்தியதாகப் பரபர தகவல் வெளியாகியுள்ளது.
உலகளவிலான வணிகம் எப்போதும் கப்பல்களைச் சார்ந்தே இருக்கிறது. மற்ற போக்குவரத்தைக் காட்டிலும் கப்பல்களில் சரக்குகளை எடுத்துச் செல்வது விலை குறைவு என்பதாலேயே இது முக்கியமானதாக இருக்கிறது. கப்பல் வணிகம் சில நாட்கள் நிறுத்தப்பட்டாலே சர்வதேச வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்படும்.
இதற்கு ஒரு சிறு உதாரணம் தான் 2021 சூயஸ் கால்வாய் விபத்து. அங்கே கப்பல் ஒன்று சில நாட்கள் சிக்கியதே சர்வதேச வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அது சரியாகவே பல வாரங்கள் வரை ஆனது.

ஹவுதி படை: அதேநேரம் வணிக கப்பல்களைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களும் சமீப காலங்களாக அதிகரித்துள்ளது. குறிப்பாக ஏமனில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி படை செங்கடலில் வரும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது.
இந்தியக் கப்பல்: இதற்கிடையே இந்தியக் கொடியுடன் சென்று கொண்டிருந்த எண்ணெய் டேங்கர் கப்பல் ஒன்று, செங்கடலில் ஏமனின் ஹவுதி படையால் தாக்கப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. ஹவுதி இந்த டேங்கர் கப்பலை நோக்கி ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
ஏமன் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு இந்த கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்த குறித்த தகவல் கிடைத்தவுடன் அமெரிக்கப் போர்க்கப்பலான லாபூன், இதற்கு உதவியதாகத் தெரிகிறது. அமெரிக்கப் போர்க் கப்பல் டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நல்வாய்ப்பாக இந்த டிரோன் தாக்குதல் வலிமையான ஒன்றாக இல்லை. இதனால் இங்கே பெரியளவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.
முதல்முறை இல்லை: அதேபோல மற்றொரு கப்பலான எம்வி பிளாமெனென் என்ற நார்வே கப்பலையும் ஹவுதி குழு தாக்குதல் நடத்த முயன்றுள்ளனர். இருப்பினும், ரசாயன, எண்ணெய் டேங்கர் கப்பலான பிளாமெனென் அந்தத் தாக்குதலில் இருந்து நூலிலையில் தப்பி இருக்கிறது. இதில் தேசம் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிகிறது.
மேலும், தெற்கு செங்கடலில் நின்றிருந்த அமெரிக்க டெஸ்டிராயர் கப்பலை நோக்கியும் நான்கு டிரோன்கள் ஹவுதி பகுதியில் இருந்து பாய்ந்துள்ளது. அதை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்கள் அக்டோபர் 17 முதல் அங்கே அதிகரித்து வருகிறது. அக்டோபர் 17 தேதிக்குப் பிறகு அங்கு நடக்கும் 14 மற்றும் 15ஆவது தாக்குதல்களை இதுவாகும். இதுபோன்ற சம்பவங்கள் அங்கே அதிகரித்து வருவது அங்குப் பதற்றத்தை அதிகப்படுத்தி இருக்கிறது.
ஏமனின் பெரும்பகுதி இப்போது ஹவுதி கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. ஈரான் ஆதரவுடன் இயங்கும் ஹவுதிக்களால் சமீப காலமாகச் செங்கடலில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. செங்கடலில் தெற்கு முனையில் உள்ள பாப் அல்-மண்டப் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்கள் மீதான ஹவுதிக்களின் தாக்குதல்கள் சர்வதேச வர்த்தகத்தைப் பாதிக்கும் ஆபத்தும் இருக்கிறது.
அதிகரிக்கும் தாக்குதல்கள்: சமீபத்தில் பிரிட்டனும் கூட இதுபோன்ற ஆளில்லா விமானம் மூலம் அங்கே தாக்குதல்கள் நடத்தி வருவது உண்மைதான் என்று கூறியிருந்தது. அங்கே இதுபோன்ற தாக்குதல் சம்பவங்களைக் கட்டுப்படுத்த அமெரிக்கா ஒரு கூட்டணியை உருவாக்கியது. வெறும் மூன்று நாட்களில் சுமார் 10க்கும் மேற்பட்ட நாடுகள் இதில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது












Click it and Unblock the Notifications