மிக விரைவில் கொரோனா 3ஆம் அலை.. அதற்குள் தினசரி ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி சாத்தியமா? விரிவான அலசல்
டெல்லி: இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் சுமார் 85 லட்சம் பேருக்கு மத்திய அரசு தடுப்பூசிகளைச் செலுத்திய போதிலும், வேக்சின் உற்பத்தியில் இருக்கும் சிக்கல் காரணமாக இன்னும் எத்தனை நாட்களுக்கு இதே வேகத்தில் தடுப்பூசி போட முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
Recommended Video
இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை மெல்லக் குறைந்து வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணிகளை வேகப்படுத்த வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்தச் சூழலில் நேற்று ஒரே நாளில் நாட்டில் 85 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டது.
இதற்கு முன்னதாக கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி, ஒரே நாளில் 42.65 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டதே சாதனையாக இருந்தது.

தடுப்பூசி கொள்கை
ஒரே நாளில் இத்தனை பேருக்குத் தடுப்பூசி போட முடிந்ததற்கு முக்கிய காரணம் மத்திய அரசின் புதிய தடுப்பூசி கொள்கை தான். பழைய தடுப்பூசி கொள்கையின்படி உற்பத்தி செய்யப்படும் வேக்சின்களில் பாதியை மட்டுமே மத்திய அரசு கொள்முதல் செய்யும், 25% வேக்சின்களை மாநில அரசுகளுக்கும் 25% வேக்சின்களை தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்கலாம் என அறிவிக்கப்பட்டது.

மாநில அரசுகள்
இந்நிலையில், மத்திய அரசின் புதிய தடுப்பூசி கொள்கை நேற்று முதல் அமலுக்கு வந்ததது. அதன்படி உற்பத்தியாகும் வேக்சின்களில் 75% மத்திய அரசு வாங்கி, மாநிலங்களுக்கு விநியோகம் செய்யும். இது மாநில அரசுகளின் மீது இருக்கும் அழுத்தத்தைக் குறைக்கிறது. மாநில அரசுகள் தடுப்பூசி கொள்முதல் செய்யத் தேவையில்லை என்பதால், அவை கொரோனா தடுப்பூசி பணிகளில் கவனம் செலுத்தலாம்.

புதிய கொள்கை
புதிய தடுப்பூசி கொள்கைப்படி மாநிலத்தின் அளவு, மக்கள்தொகை, கொரோனா தீவிர தன்மை, தடுப்பூசி போடும் பணி, வேஸ்டேஜ் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வேக்சின்கள் ஒதுக்கப்படும் என அறிவித்துள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தினசரி ஒரு கோடி பேருக்குத் தடுப்பூசி போட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், அதற்குள் தடுப்பூசிகளின் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும்.

தடுப்பூசி ஆர்டர்
கோவாக்சின், கோவிஷீல்டு போக 30 கோடி பயாலஜிக்கல் இ தடுப்பூசிகளுக்கும் மத்திய அரசு ஆர்டர் அளித்துள்ளது. இவை போக ZyCoV-D தடுப்பூசி, நோவாக்ஸ் தடுப்பூசி, கோவோவாக்ஸ் தடுப்பூசி உள்ளிட்டவையும் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போக ஸ்புட்னிக் வி உற்பத்தியும் அதிகரிக்கப்படவுள்ளது. இதன் மூலம் எளிதாக இந்த ஆண்டு இறுதிக்குள் அதிகப்படியான மக்களுக்குத் தடுப்பூசி போட முடியும் என மத்திய அரசு கருதுகிறது. ஆனால், தடுப்பூசி உற்பத்தியை அதற்குள் அதிகரிக்க வேண்டும்.

கட்டுப்படுத்த முடியுமா
ஆனால் எவ்வளவு விரைவாகத் தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொண்டாலும், இந்த ஆண்டு இறுதிக்குள் 30-40 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போட முடியும். இதன் மூலம் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது. முன்பு 60-70% பேருக்குத் தடுப்பூசி போடுவதன் மூலம் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது 85-90% பேருக்குத் தடுப்பூசி போட்டால் மட்டுமே வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று தெரியவந்துள்ளது.

தடுப்பூசி பணிகள்
இந்தியாவில் தற்போது 5.12 கோடி பேருக்கு இரண்டு டோஸ்களும் 22 கோடி பேருக்குத் தடுப்பூசியின் ஒரு டோஸும் போடப்பட்டுள்ளது. இன்னும் நாட்டில் 66.02 கோடி பேருக்குத் தடுப்பூசி போட வேண்டும். இதற்கு நமக்கு 132.04 கோடி வேக்சின்கள் தேவை. தினசரி 75 லட்சம் பேருக்குத் தடுப்பூசி பேட்டால், 88 நாட்களில் அனைவருக்கும் ஒரு டோஸ் தடுப்பூசி வழங்க முடியும். ஆனால், அதற்கு ஏற்ப உற்பத்தியும் அதிகரிக்க வேண்டும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

3ஆம் அலை
அதேநேரம் முறையான நெறிமுறைகளைப் பின்பற்றவில்லை என்றால் கொரோனா 3ஆம் அலை 6-8 வாரங்களில் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா எச்சரித்துள்ளார். கொரோனா தடுப்பூசி பணிகளை வேகப்படுத்தும் அதேநேரத்தில் 3ஆம் அலையைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதையும் மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.












Click it and Unblock the Notifications