Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராஜீவ், ஜெயலலிதா, அமித்ஷாவுக்கு நெருக்கம்.. சமூக விரோதிகளுக்கு சிம்மசொப்பனம்.. யார் இந்த விஜயகுமார்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி : மூத்த ஐபிஎஸ் அதிகாரியும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசகருமான விஜயகுமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். விஜயகுமார், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு நெருக்கமாக பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர்.

1975-ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் கேடரை சேர்ந்த விஜயகுமார் , காவல்துறையில் உயர் பொறுப்புகளை வகித்து வந்தார். விஜயகுமார் அதிரடிப்படை தலைவராக இருந்த போதுதான் சந்தனக் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பணி ஓய்வு பெற்ற பிறகு மத்திய அரசின் சிறப்பு பணிக்கு அழைக்கப்பட்டு நக்சலைட்டுகளுக்கு எதிரான வியூகம் வகுக்கும் பணியை மேற்கொண்டார். 6 வருடம் அப்பணியில் இருந்து ஒய்வு பெற்றார்.

2019-ம் ஆண்டு மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் ஆலோசகராக பணியாற்றி வந்த நிலையில் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

 1975ல் ஏ.எஸ்.பி

1975ல் ஏ.எஸ்.பி

தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரியான விஜயகுமார் முதன்முதலில் பட்டுக்கோட்டையில் உதவி போலீஸ் கண்காணிப்பாளராக (ஏஎஸ்பி) 1975-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். அதைத் தொடர்ந்து திருச்சியில் ஏஸ்பியாக பணியாற்றினார். 1982-1983ஆம் ஆண்டுகளில் தருமபுரி, சேலம் மாவட்டங்களில் போலீஸ் எஸ்பியாக பணியாற்றினார். பின்னர் மத்திய அரசு பணிக்காக அனுப்பப்பட்ட விஜயகுமார், அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட சிறப்புப் பாதுகாப்புப் பிரிவில் (NSG) பணியாற்றினார்.

தென் மண்டல ஐஜி

தென் மண்டல ஐஜி

பின்னர் மீண்டும் தமிழக பணிக்குத் திரும்பி திண்டுக்கல் போலீஸ் எஸ்பி ஆனார். அதன்பிறகு வேலூர் எஸ்.பியாகவும் பணியாற்றினார். 1991ஆம் ஆண்டு ஜெயலலிதா தமிழக முதல்வர் ஆனதும் அவரது மெய்க்காவல் படை தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர், டிஐஜியாகவும் பதவி உயர்வு பெற்றார். தொடர்ந்து 1997 காலகட்டத்தில் தென் மண்டல ஐஜியாக பதவி வகித்தார். அப்போது விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் அரங்கேறிய சாதிக் கலவரங்களை கட்டுக்குள் கொண்டு வந்ததில் முக்கிய பங்கு வகித்தார்.

மீண்டும் அழைத்து வந்த ஜெயலலிதா

மீண்டும் அழைத்து வந்த ஜெயலலிதா

பின்னர் 1998-ல் மீண்டும் அயல் பணியாக எல்லைப் பாதுகாப்புப் படை ஐ.ஜியாகச் சென்றார். பின்னர் செயலாக்கப் பிரிவு ஐ.ஜியாக பணியாற்றினார்.
ஜெயலலிதா 2001-ல் மீண்டும் முதல்வரான பிறகு விஜயகுமாரை சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஆக்கினார். விஜயகுமார் சென்னை போலீஸ் கமி‌ஷனராக இருந்தபோது சென்னையில் 15-க்கும் மேற்பட்ட ரவுடிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அதிரடிப்படை

அதிரடிப்படை

2003ஆம் ஆண்டு சந்தனக் கடத்தல் வீரப்பனை பிடிக்க அமைக்கப்பட்ட அதிரடிப்படையின் தலைவர் ஆனார் விஜயகுமார். போலீசாருக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த வீரப்பன், விஜயகுமார் தலைமையிலான அதிரடிப் படையால் 2004-ல் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் பின்னர் 2008-ஆம் ஆண்டு தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டார் விஜயகுமார் ஐபிஎஸ்.

டிஜிபி

டிஜிபி

அதன்பிறகு விஜயகுமார் மீண்டும் மத்திய பணிக்கு அனுப்பப்பட்டார். ஹைதராபாத்தில் அமைந்துள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் பயிற்சி கல்லூரிக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர் டிஜிபியாகப் பதவி உயர்வு பெற்று சிஆர்பிஎஃப் பிரிவுக்குச் சென்றார். மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் தலைமைப் பொறுப்பை ஏற்று, வட கிழக்கு மாநிலங்களில் நக்சல் வேட்டையிலும் துடிப்பாகச் செயல்பட்டார்.

ஓய்வு

ஓய்வு

2012-ஆம் ஆண்டு மத்திய ஆயுதப்படை டைரக்டர் ஜெனரலாக பணியாற்றியபோது அவர் பணி ஓய்வு பெற்றார். அவரது சிறப்பான பணிகளைப் பாராட்டி அவருக்கு சிறப்பு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. சிறப்பு பணிக்காக மத்திய உள்துறையில் சேர்க்கப்பட்ட அவர் நக்சலைட்டுகளுக்கு எதிரான வியூகம் வகுக்கும் பணியை மேற்கொண்டு வந்தார். 6 ஆண்டுகாலம் பணி நீட்டிப்பில் பணியாற்றிய விஜயகுமார் அதில் இருந்தும் ஓய்வுபெற்றார்.

அமித்ஷாவுக்கு அட்வைசர்

அமித்ஷாவுக்கு அட்வைசர்

ஓய்வுக்கு பிறகு, ஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநரின் ஆலோசகராக செயல்பட்டு வந்தார். அதன்பின், கடந்த 2019-ஆம் ஆண்டில் உள்துறை அமைச்சகத்தின் மூத்த ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டார். உள்துறை அமைச்சகத்தின் ஆலோசகராக பாதுகாப்பு பிரச்சினைகளில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ஆலோசனை வழங்கி வந்தார். இந்நிலையில் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். சொந்த காரணங்களுக்காக பதவி விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+