கொடூர உருவங்கள்! ஊரையே காலி செய்த மக்கள்! இப்போது வரை நீடிக்கும் சாபம்! இந்தியாவின் அமானுஷ்ய கிராமம்
டெல்லி: இந்தியர்கள் அமானுஷ்யங்களை தேடி உலகம் முழுவதும் பயணம் செய்கின்றனர். ஆனால் இந்தியாவிலேயே பல அமானுஷ்ய இடங்கள் இருப்பதை பலரும் அறிவதில்லை.
இந்த இடங்கள் மனித அறிவுக்கு சவால் விடுவதை போல இருக்கின்றன. உண்மையில் இதற்கு பின்னால் அறிவியல்தான் இருக்கிறது என்று கூறுபவர்கள் அந்த அறிவியல் காரணத்தை இன்னும் முழுமையாக விளக்கவில்லை.
சிலர் இந்த அமானுஷ்யத்தின் பின்னணியில் மர்ம வரலாறு இருப்பதாகவும் கூறுகின்றனர். எப்படியாயினும் இந்த இடங்கள் நிச்சயம் மனிதர்களின் முதுகெலும்பை சிலிர்க்க செய்யும்.
மனைவி, மகளுடன் எம்என்சி ஊழியர் மரணம்.. மூவரின் நெற்றியிலும் குங்குமத்தால் கோடுகள்.. அமானுஷ்ய சடங்கா?

மர்ம உருவங்கள்
அந்த வகையில் இந்த வரிசையில் முதல் இடத்தில் இருப்பது உத்தரகாண்ட் மாநிலத்தின் 'லம்பி தேஹார்' எனும் சுரங்கமாகும். இந்த சுரங்கம் முசோரி மலையில் அமைந்திருக்கிறது. டேராடூனிலிருந்து சுமார் 35 கி.மீ தொலைவில் இந்த மலை தொடங்குகிறது. இங்கு 90களில் சில மர்மமான சம்பவங்கள் நடந்தன. அதாவது, இம்மலையில் உள்ள சுரங்கத்தில் பணியாற்றுபவர்கள் சிலர் தொடர்ச்சியாக இறந்தனர். இதற்கான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை. அதன் பின்னர் சுரங்கத்தில் ஒரு பெரிய மண் சரிவு ஏற்பட்டது. இதில் பல தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அப்போதிலிருந்து இந்த சுரங்கம் இழுத்து மூடப்பட்டுவிட்டது. தொழிலாளர்களுக்கான வீடுகள், மருத்துவமனை என அனைத்தும் கைவிடப்பட்டன. தற்போது வரை இந்த பகுதிக்கு உள்ளூர் மக்கள் செல்வதை தவிர்த்து வருகின்றனர். இங்கு இரவு நேரங்களில் சில அமானுஷ்ய உருவங்களை பார்ப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

சாபம்
அடுத்து ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சல்மேர் மாவட்டத்தில் உள்ள குல்தாரா கிராமம். ஒரே இரவில் இந்த கிராமத்தில் இருந்த சுமார் 1,500 பேர் இங்கிருந்து வெளியேறியுள்ளனர். இதற்கான சரியான காரணம் எதுவும் தெரியவில்லை. ஆனால் வாய்மொழி கதை ஒன்று உள்ளூர் மக்களால் சொல்லப்படுகிறது. இந்த கதைகளின்படி இக்கிராமத்தில் பிரமண சமூகத்தை சேர்ந்தவர்கள் வசித்து வந்ததாகவும் ஜெய்சல்மேர் சமஸ்தானத்தின் திவானாக இருந்த சலீம் சிங் கிராமத்தில் இருந்த பெண்ணை திருமணம் செய்ய விரும்பியதாகவும் சொல்லப்படுகிறது. திவான் மாற்று சாதியை சேர்ந்தவர் என்பதால் திருமணத்திற்கு கிராமத்தினர் சம்மதிக்கவில்லை. ஆனால் சலீம் சிங் கிராம மக்களுக்கு சில நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளார். இதனை பயன்படுத்திக்கொண்டு கிராமத்தினர் ஒரே இரவில் இங்கிருந்து வெளியேறியுள்ளனர். போகும் போது இந்த கிராமத்தில் யாரும் குடியேற மாட்டார்கள் என்று சாபம் கொடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

மர்ம குரல்கள்
இது நடந்தது 19ம் நூற்றாண்டின் இறுதியில். அப்போதிலிருந்து இப்போது வரை இக்கிராமத்தில் யாரும் குடியேறவில்லை. தற்போது இங்குள்ள திவான் சலீம் சிங் அரண்மனை சுற்றுலாத்தலமாக இருக்கிறது. அடுத்த அமானுஷ்ய இடம் குஜராத்தில் அமைந்திருக்கும் டுமாஸ் கடற்கரை. இது சூரத்தில் அமைந்திருக்கிறது. பகல் பொழுதுகளில் இந்த கடற்கரை பிரபல சுற்றுலாத்தலம். ஆனால் இரவில் இது அமானுஷ்யமான இடம். இங்கு இரவில் சில குரல்கள் அடிக்கடி கேட்பதாகவும் எனவே இங்கு பொழுது போன பின்னர் யாரும் போக மாட்டோம் என்று உள்ளூர் மக்கள் கூறியுள்ளனர். இதற்கடுத்த அமானுஷ்ய இடம் மேற்கு வங்கத்தில் இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சதுப்பு நிலங்களில் அமைந்துள்ள சுந்தர்வன காடுகளில் ஒருவித விளக்குகள் திடீரென எரிவதை உள்ளூர் மீனவர்கள் பார்த்திருக்கிறார்கள்.

இத்தனை உடல்களா?
சுந்தரவன காடுகளில் மனிதர்கள் யாரும் வசிக்க முடியாது. அப்படி இருக்கும் போது இந்த விளக்குகள் எப்படி எரிகிறது என்று கேள்வியெழுப்பியிருக்கிறார்கள். அதேபோல இந்த விளக்குகள் எரியும்போது மீனவர்கள் மீன் பிடிக்க போகாமல் திரும்பி விடுவார்கள் என்று சொல்லப்படுகிறது. அடுத்த அமானுஷ்ய இடம் உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்திருக்கிறது. இம்மாநிலத்தில் உள்ள ரூப்குண்ட் ஏரிதான் இந்த அமானுஷ்ய இடம். இந்த ஏரிக்கு அடியில் ஏராளமான மனித உடல்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இவ்வளவு உடல்கள் எப்படி இங்கு வந்தன என்பது குறித்து யாருக்கும் தெரியவில்லை.

கவிதையா? மந்திரமா?
இதற்கு அடுத்த இடத்தில் இருப்பது டெல்லியில் அமைந்துள்ள ஜமாலி கமாலி மசூதியாகும். இந்த மசூதியில் இரண்டு கல்லறைகள் உள்ளன. ஒன்றில் ஜாமலி என்பவரது உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இவர் புகழ் பெற்ற சூஃபி துறவியான ஷேக் பசுலுல்லவாவார். இவருடைய மற்றொரு பெயர்தான் ஜமாலி. ஆனால் இவருக்கு அருகில் இருக்கும் மற்றொருவரான கமாலி யார் என்பது குறித்து எந்த தகவலும் கிடையாது. வெறும் பெயர் மட்டும்தான் செதுக்கப்பட்டுள்ளது. மற்றபடி இந்த மசூதில் இருக்கும் கல்வெட்டுக்கள் ஜாமலியை பற்றி மட்டுமே கூறுகிறது. சில இடங்களில் கவிதைகளும் செதுக்கப்பட்டுள்ளன. இது மேற்பார்வையாக பார்த்தால் கவிதை போன்று இருப்பதாகவும், இதன் அர்த்தங்களை புரிந்து படித்தால் இது அமானுஷ்ய மந்திரம் என்றும் சொல்லப்படுகிறது. எனவே இந்த இடத்தை சுற்றி பார்க்க பெரியதாக யாரும் வருவது கிடையாது. இந்த இடம் தற்போது தொல்லியல் துறை பராமரிப்பில் இருக்கிறது.