சிஏஏ-க்கு ரெடியாகிறதா பாஜக அரசு? என்பிஆர் கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் - உள்துறை அமைச்சக ரிப்போர்ட்
டெல்லி: தேசிய மக்கள் தொகை பதிவேடான என்பிஆர் கணக்கெடுப்பை ஒவ்வொரு குடும்பத்திலும் எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சக ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அமித்ஷா தலைமையிலான மத்திய உள்துறை அமைச்சகத்தின் 2021 - 2022 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை கடந்த நவம்பர் 7 ஆம் தேதி வெளியானது.
அதில், குழந்தை பிறப்பு, இறப்பு, குடிபெயர்தல் போன்ற காரணங்களால் என்.பி.ஆர். எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டை புதுப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

என்பிஆர்
கடந்த 2010 ஆம் ஆண்டு தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கப்பட்டது. அதை தொடர்ந்து கடந்த 2015 ஆம் ஆண்டு நாட்டின் அனைத்து மக்களின் தகவல் விபரங்கள் சேகரிக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

என்ஆர்சி
2003 ஆம் ஆண்டு குடியுரிமை சட்டங்களின்படி தேசிய குடிமக்கள் பதவேடான என்ஆர்சியின் முதல் படியாக என்பிஆர் பார்க்கப்பட்டது. அப்போது எதிர்ப்புகள் எழுந்த உடனேயே, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி என்பது என்.ஆர்.சிக்கானது அல்ல என்றும், தற்போது என்.ஆர்.சியை கொண்டு வரும் திட்டம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

அசாம் நிலை
ஆனால், அதை வைத்தே அசாமில் லட்சக்கணக்கான இஸ்லாமியர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. தற்போதைய உள்துறை அமைச்சக அறிக்கையில், என்.பி.ஆர். என்பது கடந்த 1955-ல் தயாரிக்கப்பட்ட குடியுரிமை சட்டத்தின் அடிப்படையில் 2003 ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட குடியிரிமைக்கான பல்வேறு விதிகளின் கீழ் தயாரிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

தற்போதைய அறிக்கை
கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற கணக்கெடுப்பின்போது, பெயர், பாலினம், பிறந்தநாள், பிறந்த இடம், வசிப்பிடம், ஆதாரில் இடம்பெற்றுள்ள தாய், தந்தை பெயர், செல்போன் எண், ரேசன் எண் ஆகியவை சேகரிக்கப்பட்டன. இதில் பிறப்பு, இறப்பு, குடிபெயர்தல் போன்ற காரணங்களுக்காக திருத்தம் செய்ய வேண்டும் என்பதே மத்திய உள்துறை அமைச்சகத்தின் தற்போதைய அறிக்கையின் சாரம்சம்.

கொரோனாவால் ஒத்திவைப்பு
தேசிய மக்கள் தொகை பதிவேடு என்பது 115 கோடி மக்களின் தகவல்களை கொண்டது. கடந்த 2019 ஆம் ஆண்டே குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்ட சில மாதங்களில் என்.பி.ஆர். கணக்கெடுப்பு பணிகள் தொடங்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக என்.பி.ஆர். பணிகள் தள்ளி வைக்கப்பட்டன.

இணையதளத்தில் பதிவேற்றலாம்
இணையதளம் வாயிலாக குடிமக்களே சில வழிமுறைகளை பின்பற்றி தங்கள் தகவலை என்.பி.ஆரில் பதிவேற்றம் செய்துகொள்ளலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் கூறி இருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த ஆண்டறிக்கையில், அமைச்சகத்தின் பல்வேறு செயல்பாடுகள், சாதனைகளின் விபரங்கள் தொகுக்கப்பட்டு இருக்கின்றன.

சிஏஏ கருணை சட்டம்
ஆனால், 2019 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியுரிமை சட்டத்திருத்தம் தொடர்பாக அதில் எதுவும் இடம்பெறவில்லை. அதே நேரம் கடந்த 2020-2021 ஆம் ஆண்டுக்கான மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில், "சிஏஏ என்பது கருணையான முற்போக்கான ஒரு சட்டம். இது இந்திய குடிமக்களுக்கான இல்லை. எனவே இது எந்த ஒரு இந்திய குடிமகனின் உரிமையையும் பறிக்காது." என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இஸ்லாமியர் அல்லாதோர்
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் வந்த இஸ்லாமியர் அல்லாத 6 மதங்களை சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதில் இஸ்லாமியர்கள் ஒதுக்கப்பட்டதாகவும், மத பாரபட்சம் காட்டப்படுவதாகவும் எதிர்ப்புகள் கிளம்பின.

ஷாஹீன் பாக் போராட்டம்
இந்த என்.பி.ஆர் கணக்கெப்பின் மூலம் என்.ஆர்.சி-யில் மாற்றங்களை செய்து சிஏஏ மூலம் இஸ்லாமியர்களின் குடியுரிமையை பறித்து முகாம்களில் அடைப்பதற்கான திட்டம் இது என்று பலர் அப்போது அச்சம் தெரிவித்தனர். இதனை எதிர்த்து நாடு முழுவதும் இஸ்லாமியர்கள், எதிர்க்கட்சிகள், ஜனநாயக சக்திகள் ஷாஹீன் பாக் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

அமித்ஷா பேச்சு
கடந்த மே மாதம் மேற்கு வங்கத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "கொரோனா அலைகள் ஓய்ந்தவுடன் இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வருவோம்." என உறுதியளித்தார். தற்போது நாட்டில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து இருக்கும் நிலையில் இந்த ஆண்டறிக்கை வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications