தடுப்பூசிக்கு தண்ணி காட்டும் உருமாறிய ‘மு’ வைரஸ் : இந்தியாவில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
புதிய உருமாறிய கொரோனா ‘மு’ பரவாமல் தடுக்கும் வகையில் தென்ஆப்பிரிக்கா, சீனா, போட்ஸ்வானா, வங்காளதேசம், மொரீஷியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே ஆகிய 7 நாடுகள் கட்டாய பரிசோதனை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
டெல்லி: புதிய உருமாறிய 'மு' வைரசானது, தடுப்பூசிக்கு தப்பிவிடும் அறிகுறிகளை கொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து, இந்தியாவில் 'மு' பரவாமல் தடுக்கும் நடவடிக்கையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எடுத்துள்ளது. இந்தியாவுக்கு வரும்போது கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டியவர்கள் பட்டியலில் மேலும் 7 நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
Recommended Video
கொலம்பியா நாட்டில் பி.1.621 என்ற புதிய உருமாறிய கொரோனா முதல்முதலில் கண்டறியப்பட்டது. அதற்கு உலக சுகாதார நிறுவனம் 'மு' என்று பெயர் சூட்டியுள்ளது.

இது, தடுப்பூசிகளுக்கு கட்டுப்படாமல் எதிர்த்து செயல்படக்கூடியது என்றும் தெரிவித்துள்ளது. தென்அமெரிக்க நாடுகள், சீனா போன்ற நாடுகளிலும் இந்த புதிய கொரோனா பரவி விட்டது. 'மு' வைரஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, ஹாங்காங்கிலும் பாதித்துள்ளது.
இது உலக சுகாதார அமைப்பின் கண்காணிப்பு பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது. 39 நாடுகளில் காணப்படுகிறது. இது நோய் எதிர்ப்புக்கு தப்பிக்கும் சாத்தியமான பண்புகளைக் கொண்டிருப்பதை, தடுப்பூசிக்கு தப்பி விடும் அறிகுறிகளாக உலக சுகாதார அமைப்பு கண்டு எச்சரித்துள்ளது. இந்த வைரஸ், உலக சுகாதார அமைப்பினால் கண்காணிக்கப்படுகிற 5 வது உருமாறிய வைரஸ் ஆகும்.
இந்த வைரசை உன்னிப்பாக கவனித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது. இது உலகளாவிய பாதிப்பைக் கொண்டிருந்தாலும் கூட தற்போது இதன் பரவல் விகிதம் 0.1 சதவீதத்துக்கு குறைவாகவே இருப்பதாக தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில் கொலம்பியாவில் 39 சதவீதமும், ஈக்குவடாரில் 13 சதவீதமும் உள்ளது. தொடர்ந்து அதிகரித்தும் வருகிறது.
இந்த புதிய உருமாறிய வைரசானது, தடுப்பூசிக்கு தப்பிவிடும் அறிகுறிகளை கொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறினாலும், இதை உறுதி செய்ய மேலும் ஆராய்ச்சிகள் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளது.
இதையடுத்து, இந்தியாவில் 'மு' பரவாமல் தடுக்கும் நடவடிக்கையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எடுத்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவுக்கு வரும்போது கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டியவர்கள் பட்டியலில் மேலும் 7 நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்தியாவுக்கு வருவதற்கு முன்பு, எந்தெந்த நாட்டினர் கட்டாய கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்பதற்கான பட்டியலை மத்திய அரசு ஏற்கனவே பராமரித்து வருகிறது. அதில், இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், புதிய உருமாறிய கொரோனா 'மு' பரவாமல் தடுக்கும்வகையில், இந்த பட்டியலில் மேலும் 7 நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. தென்ஆப்பிரிக்கா, சீனா, போட்ஸ்வானா, வங்காளதேசம், மொரீஷியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே ஆகிய 7 நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த நாடுகளை சேர்ந்தவர்கள், இந்தியாவுக்கு வர விமானம் ஏறுவதற்கு முன்பு 72 மணி நேரத்துக்குள் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதில், கொரோனா இல்லை என்று தெரிந்தால் மட்டுமே விமானம் ஏற அனுமதிக்கப்படுவார்கள். இந்தியா வந்து சேர்ந்தவுடன், மறுபடியும் அவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை நடத்தப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications