எல்லை மோதலுக்கு முடிவு.. சீனாவுடன் கைகோர்க்கும் இந்தியா! மோடி கூறிய மேட்டர்! திரும்பும் அமெரிக்கா
டெல்லி: ‛‛2020ல் எல்லையில் இருநாடுகள் இடையே பதற்றம் ஏற்பட்டது. அதன்பிறகு சமீபத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை நான் சந்தித்தேன். இந்த சந்திப்புக்கு பிறகு எல்லையில் இயல்பு நிலை திரும்பி உள்ளது. வரும் காலத்தில் இருநாடுகள் இடையேயான உறவு என்பது வளர வேண்டும்'' என்று பிரதமர் மோடி கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா பாட்காஸ்டர் லெக்ஸ் ஃப்ரிட்மேனுக்கு பாட்காஸ்ட் இண்டர்வியூ கொடுத்தார். இந்த இண்டர்வியூ இன்று வெளியாகியுள்ளது. இதில் இந்தியா - சீனா இடையேயான உறவு பற்றி கேள்வி கேட்கப்பட்டது.

அப்போது இருநாடுகள் இடையேயான மோதல் என்பது இப்போது இல்லை. எல்லையில் இயல்பு நிலை திரும்பி உள்ளது. இருநாடுகள் இடையேயான உறவு என்பது பலமானதாக மாற வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது: 2020ல் எல்லையில் இருநாடுகள் இடையே பதற்றம் ஏற்பட்டது. அதன்பிறகு சமீபத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை நான் சந்தித்தேன். இந்த சந்திப்புக்கு பிறகு எல்லையில் இயல்பு நிலை திரும்பி உள்ளது. 2020ம் ஆண்டுக்கு முன்பாக எல்லையில் இருந்த நிலையை உருவாக்க பணியாற்றி வருகிறோம். எதிர்காலத்தில் இருநாடுகள் இடையேயான உறவு என்பது பலமானதாக மாற வேண்டும். அதன்பிறகு தொடர்ந்து வளர்ந்து கொண்டே செல்லும்.
இரு நாடுகள் அண்டை நாடுகளாக இருக்கும்போது வேறுபாடுகள் ஏற்படுவது இயல்பான ஒன்றுதான். இருநாடுகள் இடையே அனைத்தும் சரியாக இருக்காது. முரண்பாட்டிற்கு பதிலாக பேச்சுவார்த்தையை விரும்புகிறோம். ஏனென்றால் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே இரு நாடுகளின் நலன்களுக்கும் பணியாற்ற முடியும். அதோடு இருநாடுகளும் சேர்ந்து நிலையான கூட்டுறவை உருவாக்க முடியும்.
எங்களுக்குள் எல்லையில் பிரச்சனை இருப்பது உண்மை தான். ஆனால் மெதுவாக , உறுதியாக, நம்பிக்கையாக, உற்சாகமான நிலை சூழல் ஏற்படும். ஏனென்றால் இருநாடுகள் இடையே பழமையான கலாசாரம், நாகரீகங்களை கொண்டுள்ளது. பல நூற்றாண்டுகளாக இந்தியாவும், சீனாவும் ஒன்றுக்கொன்று கற்றுக்கொண்டுள்ளன. ஒன்றாக உலகளாவிய நன்மைக்கு பங்களித்துள்ளோம். ஒரு கட்டத்தில் இந்தியாவும் சீனாவும் மட்டுமே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவீதத்தை கொண்டிருந்தன. இந்தியாவின் பங்களிப்பு அவ்வளவு பெரியது. இருப்பினும் இப்போது இருநாடுகள் இருக்க 5 வருட இடைவெளி இருப்பதால் இதற்கு சிறிது நேரம் ஆகும்.
மேலும் இருநாடுகளின் ஒத்துழைப்பு என்பது உலகளவில் ஸ்திரத்தன்மையை கொண்டு வருவதற்கு அவசியமாக உள்ளது. 21ம் நூற்றாண்டு என்பது ஆசியாவின் நூற்றாண்டாக உள்ளது. இதனால் இந்தியாவும், சீனாவும் ஆரோக்கியமான முறையில் போட்டியிட வேண்டும் என்று விரும்புகிறோம். போட்டி என்பது மோசமான விஷயம் அல்ல. அதேவேளையில் அது மோதலாக மாறக்கூடாது'' என்றார்.
மோடியின் இந்த செய்தி என்பது அமெரிக்காவை கவனிக்க வைத்துள்ளது. ஏனென்றால் அமெரிக்கா, இப்போது சீனாவுக்கு அதிக வரிகளை விதித்துள்ளது. பதிலுக்கு சீனாவும் கூடுதல் வரியை அமெரிக்காவுக்கு விதிக்கிறது. இதனால் சீனா, அமெரிக்கா இடையேயான மோதல் என்பது வரும் நாட்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த சமயத்தில் சீனாவுக்கு எதிரான நடவடிக்கைக்கு அமெரிக்காவுக்கு, நிச்சயம் நம் நாடு தேவைப்படும். இதனால் தான் வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி சந்தித்தபோது இந்தியா - சீனா பிரச்சனைக்கு முடிவு கட்ட அமெரிக்கா உதவும் என்று டொனால்ட் டிரம்ப் கூறினார்.
ஆனால் பிரதமர் மோடி அதுபற்றி எந்த பதிலும் சொல்லாத நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்த பிறகு நம் நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அளித்த பேட்டியில், ‛‛ எங்கள் அண்டை நாடுகளுடன் எங்களுக்கு என்ன பிரச்சினைகள் இருக்கிறது. இருப்பினும் இந்தப் பிரச்சினைகளைக் கையாள்வதில் நாங்கள் எப்போதும் இருதரப்பு பேச்சுவார்த்தையை கடைப்பிடித்து வருகிறோம். இதில் பிற நாட்டு தலைவர்கள் தலையிடுவதை விரும்பவில்லை'' என்று கூறினார். இதன்மூலம் சீனா - இந்தியா பிரச்சனையில் அமெரிக்கா தலையிட வேண்டாம் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். இப்போது மீண்டும் சீனாவுடன் நல்லுறவு தொடர்பாக மோடி பேசியிருப்பது அமெரிக்காவை உன்னிப்பாக கவனிக்கும் என்கின்றனர் சர்வதேச அரசியல் வல்லுநர்கள்.












Click it and Unblock the Notifications