"மாவோவிற்கு" பிறகு ராகுல் காந்திதான்.. ஜோடோ யாத்திரை குறித்து திருமாவளவன் வேற லெவல் பாராட்டு
டெல்லி: ஆள்வைத்து திரட்டப்படும் நிகழ்ச்சியாக இல்லாமல் மக்களே தன்னியல்பாக பங்கேற்கும் பேரணியாக இது நடைபெறுகிறது. இந்திய அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இது இடம் பெறும். இன்னும் சொல்லப்போனால் உலக அரசியல் வரலாற்றில் தொடர்ச்சியாக இப்படி ஒரு பயணத்தை மேற்கொண்டு இருப்பது மாவோவிற்கு பிறகு ராகுல் காந்திதான் என்று சொன்னால் மிகையாகாது. என டெல்லியில் ராகுல் காந்தியின் நடைபயணத்தில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பேசினார்.
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை இன்று தலைநகர் டெல்லிக்குள் நுழைந்துள்ளது. டெல்லியில் நடைபெறும் இந்த பேரணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனும் கலந்து கொள்கிறார்.
முன்னதாக டெல்லியில் தொல் திருமாவளவன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மகிழ்ச்சி அடைகிறோம்
மதத்தின் பெயரால் மக்களை பிளவு படுத்துகிற சனாதன சக்திகளை எதிர்த்து இந்திய மக்களை ஒற்றுமைப்படுத்தும் நோக்கில் பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமைப்பயணத்தை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி இந்த பேரணியை தமிழகத்தில் தொடங்கினார். 11- வது மாநிலமாக 108-வது நாளாக இந்த பயணத்தை ராகுல் காந்தி மேற்கொள்கிறார். இந்த நாளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நானும் ரவிக்குமாரும் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

மாற்றத்தை ஏற்படுத்தும்
கூட்டணிக் கட்சிகள் இந்த யாத்திரையில் பங்கேற்க வேண்டும் என்று ராகுல் காந்தி அழைப்புவிடுத்தார். ராகுல் காந்தியின் அழைப்புக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். 108வது நாளாக நடைபெறும் இந்த யாத்திரை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இளம் தலைமுறையினர் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசியலை புரட்டிப்போடும் அளவுக்கான ஒரு மாற்றத்தை இது ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.

ஒட்டுமொத்த இந்திய தேசத்தையும்..
108 நாட்களாக ராகுல் காந்தி நடைபயணம் மூலமாக ஏற்படுத்தி வருகிற தாக்கம் என்பது கொள்கை ரீதியாக ஒரு உரையாடலை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் தனிப்பட்ட முறையில் கட்சியை வலுப்படுத்த வேண்டும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நடக்கவில்லை. ஒட்டுமொத்த இந்திய தேசத்தையும் அரசியல் அமைப்பு சட்டத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ர உயரிய நோக்கத்தில் இந்த யாத்திரையை மேற்கொள்வதால் இது அனைத்து தரப்பு மக்களிடையேயும் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது.

வெற்றி பெற வாழ்த்துகிறேன்
குறிப்பாக இளம் தலைமுறையினர் அதிக அளவில் பங்கேற்கிறார்கள். ஆள்வைத்து திரட்டப்படும் நிகழ்ச்சியாக இல்லாமல் மக்களே தன்னியல்பாக பங்கேற்கும் பெரணியாக இது நடைபெறுகிறது. இந்திய அரசியல் வராலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இது இடம் பெறும். இன்னும் சொல்லப்போனால் உலக அரசியல் வரலாற்றில் தொடர்ச்சியாக இப்படி ஒரு பயணத்தை மேற்கொண்டு இருப்பது மாவோவிற்கு பிறகு ராகுல் காந்திதான் என்று சொன்னால் மிகையாகாது.

சனாதன சக்திகளை அப்புறப்படுத்துவது
அந்த அளவுக்கு ஒரு மக்கள் பேரணியை யாத்திரையை ராகுல் காந்தி மேற்கொண்டு இருக்கிறார். அவருடைய நோக்கம் வெற்றி பெற வாழ்த்துகிறேன். ராகுல் காந்தியின் இந்த பேரணி ஆட்சியை அகற்றுவது மட்டும் இல்லை. ஒட்டுமொத்தமாக அவர்களை அம்பலப்படுத்தி சமூக அரசியல் தளங்களில் இருந்து சனாதன சக்திகளை அப்புறப்படுத்துவது அன்னியப்படுத்துவதுதான் அவருடைய பயணத்தின் நோக்கம் என்று நான் கருதுகிறேன்.

கரத்தை வலுப்படுத்த வேண்டும்
எனவே அவரது நோக்கம் வெற்றிபெறும் என்று நம்புகிறேன். அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் அவருக்கு துணை நிற்க வேண்டும். கட்சி மாச்சர்யங்களை கடந்து நாட்டையும் மக்களையும் காப்பாற்றுவதற்கு அரசியல் அமைப்பு சட்டம் கூறுகிற மதசார்பற்ற தன்மையை காப்பாற்றுவதற்கு அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் முன்வர வேண்டும் அவரது கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications