சூரிய சக்தி மின்சாரம்... அசத்தும் காஞ்சிபுரம் விவசாயி எழிலன்.. மன்கிபாத் நிகழ்ச்சியில் மோடி பாராட்டு
டெல்லி: சூரிய சக்தி மின்சாரம் மூலம் விவசாயம் செய்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த விவசாயி எழிலனுக்கு பிரதமர் மோடி தமது மன்கிபாத் வானொலி நிகழ்ச்சியில் பாராட்டு தெரிவித்தார்.
மன்கிபாத் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
தமிழ்நாட்டில், காஞ்சிபுரத்தில் இருக்கும் ஒரு விவசாயி கே. எழிலன் அவர்கள். இவர், பிரதம மந்திரி குசும் திட்டத்தினால் ஆதாயம் அடைந்தார், தனது வயலில் பத்து குதிரைசக்தியுடைய சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டைப் பொருத்தினார். இப்போது இவர் தனது வயலுக்காக மின்சாரத்துக்கான செலவு செய்ய வேண்டியிருக்கவில்லை. வயலில் நீர்ப்பாசனத்திற்காக இப்போது இவர் அரசின் மின்வழங்கலையும் சார்ந்திருக்கவில்லை.
குஜராத் வீடுகளில் சூரிய மின்சக்தி உற்பத்தி- இபி பில்லுக்குப் பதில் வருமானம் கொட்டுது: பிரதமர் மோடி

சூரிய சக்தி பம்ப்செட்டுகள்
இதே போல இராஜஸ்தானின் பரத்பூரிலும் பிரதம மந்திரி குசும் திட்டத்தினால் பயனடைந்த மேலும் ஒரு பயனர் விவசாயி கமல்ஜி மீணா அவர்கள். கமல்ஜி தனது வயலுக்கு சூரியசக்தியால் இயங்கும் பம்பினைப் பொருத்தினார், இது இவரது செலவினைக் குறைத்தது. செலவு குறைவானதால், வருமானத்தில் அதிகரிப்பு. சூரியசக்தியால் மேலும் பல சிறுதொழில்களையும் இணைத்துக் கொண்டிருக்கிறார் கமல்ஜி. இவருடைய பகுதியில், மரவேலை உண்டு, பசுஞ்சாணத்தால் தயாரிக்கப்படும் பொருள்களின் தொழில் உண்டு, இவற்றிலும் சூரியசக்தி பயன்படுத்தப்பட்டு வருகிறது, இவர் 10-12 நபர்களுக்கு வேலைவாய்ப்பும் அளித்து வருகிறார். அதாவது குசும் திட்டத்தால் கமல்ஜி ஏற்படுத்தி வைத்த தொடக்கம், அதன் மணம், பலரின் வாழ்விலே மலர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

விண்வெளிதுறையில் சாதனை
நம்முடைய தேசம் சூரியசக்தித் துறையோடு கூடவே, விண்வெளித்துறையிலும் அற்புதங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் இன்று, பாரதத்தின் சாதனைகளைப் பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கியிருக்கிறது. ஆகையால் நான் நினைத்தேன், மனதின் குரலின் நேயர்களிடம் இதைச் சொன்னால் அவர்களுக்கும் சந்தோஷம் ஏற்படுமே என்று இதனைப் பகிர்கிறேன். பாரதம் ஒரே நேரத்தில் 36 செயற்கைக்கோள்களை, சில நாட்கள் முன்பாக விண்ணில் ஏவியதை நீங்களே கவனித்திருக்கலாம். தீபாவளிக்கு ஒரு நாள் முன்பாகக் கிடைத்த இந்த வெற்றி, ஒருவகையில் நமது இளைஞர்கள் தேசத்திற்கு அளித்த சிறப்பு தீபாவளிப் பரிசு என்று கொள்ளலாம். இந்த ஏவுதல் காரணமாக, கஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையும், கட்ச் முதல் கோஹிமா வரையும், ஒட்டுமொத்த தேசத்திலும் டிஜிட்டல் இணைப்புத் திசையில் பலம் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதன் துணையோடு, மிகவும் தொலைவான பகுதிகளையும் தேசத்தின் பிற பாகங்களோடு எளிதாக இணைத்து விடலாம். தேசம் தற்சார்பு உடையதாக ஆகும் போது, எப்படி வெற்றியின் புதிய உச்சங்களைத் தொட முடிகிறது என்பதற்கான எடுத்துக்காட்டும் கூட இது

புதிய கதவுகள் திறப்பு
பாரதத்திற்கு க்ரையோஜெனிக் ராக்கெட் தொழில்நுட்பம் மறுக்கப்பட்ட காலம். ஆனால் பாரதத்தின் விஞ்ஞானிகள், உள்ளூர் தொழில்நுட்பத்தை மேம்படுத்தியது மட்டுமல்லாமல், இன்று இதன் உதவியால் ஒரே நேரத்தில் பலடஜன் செயற்கைக்கோள்களை அனுப்பவும் முடிந்திருக்கிறது. இந்த ஏவுதலோடு கூடவே, பாரதம் உலகளாவிய வர்த்தகச் சந்தையில் ஒரு பலமான சக்தி என்று ஆகி இருக்கிறது, இது விண்வெளித்துறையில் பாரதத்திற்குப் புதிய கதவுகளையும் திறந்து விட்டிருக்கிறது. வளர்ந்த பாரதம் என்ற சங்கல்பத்தை மனதில் ஏந்தி நாம் பயணிக்கிறோம், அனைவரின் முயற்சியாலும், நமது இலக்குகளை நம்மால் அடைய முடியும். பாரதத்தில் விண்வெளித்துறையில் முதலில் அரசு அமைப்புகள் மட்டுமே பங்கெடுத்துக் கொண்டிருந்தன, பாரதத்தின் தனியார் துறைக்கு இதைத் திறந்து விட்ட பிறகு இதிலே புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. பாரதநாட்டுத் தொழில்துறையும், ஸ்டார்ட் அப்புகளும் இந்தத் துறையில் புதியபுதிய கண்டுபிடிப்புக்களையும், புதியபுதிய தொழில்நுட்பங்களையும் புகுத்துவதில் ஈடுபட்டிருக்கின்றன.

IN-SPACe
குறிப்பாக, IN-SPACe இன் துணையோடு, இந்தத் துறையில் பெரிய மாற்றங்கள் ஏற்படவிருக்கின்றன. IN-SPACe வாயிலாக, அரசுசாரா நிறுவனங்களும் கூட, தங்களுடைய தாங்கு சுமைகளையும், செயற்கைக்கோள் ஏவுதல்களையும் புரிய வசதி கிடைத்து வருகிறது. விண்வெளித்துறையில் பாரதத்தில் உருவாகி வரும் இந்தப் பெரிய சந்தர்ப்பங்களை முழுமையாகப் பயன்படுத்தி லாபம் அடையுங்கள் என்று, அதிகமான புதிதாகத் தொழில் தொடங்குவோரிடமும், புதுமையாக்கம் செய்பவர்களிடமும் வேண்டிக் கொள்கிறேன்.