"நான் பாஜகவுக்கு ரூ.1000 கொடுத்துள்ளேன்.. அப்போ நீங்கள்.." கட்சிக்கு நன்கொடை கேட்கும் பிரதமர் மோடி
டெல்லி: பாஜக ஆதரவாளர்கள் அனைவரும் குறைந்தபட்ச தொகையைக் கட்சி நிதியாக நன்கொடை அளித்து உதவுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவின் 11ஆவது பிரதமராக இருந்தவர் அடல் பிகாரி வாஜ்பாய். பாஜகவின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவராகக் கருதப்படும் வாஜ்பாய் கடந்த 2018இல் காலமானார்
முதல் இரண்டு முறை விரைவாக வாஜ்பாய் ஆட்சி கவிழ்ந்த போதிலும், 3ஆவது முறையாக 1998-2004 வரை முழுவதுமாக ஆட்சி செய்தார். வாஜ்பாயின் 97ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

அடல் பிஹாரி வாஜ்பாய்
வாஜ்பாயின் பிறந்த நாளை முன்னிட்டு பாஜகவினர் பொதுமக்களிடையே சிறு நன்கொடை (micro donations) சேர்க்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இந்த மைக்ரோ நன்கொடை திட்டத்தின் மூலம் ஒருவர் குறைந்தபட்சம் 5 ரூபாயில் இருந்து அதிகபட்சமாக ரூ 1,000 வரை நன்கொடை செய்ய முடியும். அடுத்தாண்டு பிப்ரவரி 22ஆம் தேதி வரை இந்த நன்கொடை திட்டத்தை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.

பிரதமர் மோடி
இந்நிலையில், பாஜக ஆதரவாளர்கள் அனைவரும் நன்கொடை அளிக்க வேண்டும் எனப் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்கிறேன். தேசத்திற்கு அவர் ஆற்றிய உயரிய சேவையால் தான் நாங்கள் ஈர்க்கப்பட்டுள்ளோம். இந்தியாவை வலுவாகவும் வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.

தேசத்தைக் கட்டியெழுப்புவோம்
இதை முன்னிட்டு சிறு நன்கொடை (micro donation) திரட்டும் பணியை பாஜக மேற்கொண்டுள்ளது. இதில் நீங்கள் கொடுக்கும் ஆதரவு என்பது இந்த தேசத்தைக் கட்டியெழுப்புவதில் தன்னலமின்றி அர்ப்பணிப்புடன் செயல்படும் லட்சக் கணக்கானோரைக் கண்டிப்பாக ஊக்குவிக்கும்.

ரூ.1,000 நன்கொடை
நான் பாஜகவுக்கு ரூ.1,000 நன்கொடை அளித்துள்ளேன். தேசத்திற்கு மட்டுமே முதலிடம் கொடுத்துச் செயல்பட வேண்டும் என்ற எங்களின் லட்சியமும், வாழ்நாள் முழுவதும் தன்னலமற்ற சேவை செய்யும் கலாசாரமும் உங்களின் சிறு நன்கொடையால் மேலும் வலுப்பெறும். பாஜகவை வலுப்படுத்த உதவுங்கள். இந்தியாவை வலிமையாக்க நீங்கள் உதவுங்கள்" என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜேபி நட்டா
பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவும் கட்சி நிதிக்கு ₹1,000 வழங்கினார். இது தொடர்பாக அவர் ட்விட்டரில், "நமோ செயலியின் 'நன்கொடை' ஆப்ஷனை பயன்படுத்தி பாஜகவை வலுப்படுத்துவதற்கு நன்கொடை அளித்துள்ளேன். இந்த மக்கள் இயக்கத்தில் நீங்கள் உங்கள் நண்பர்களையும் குடும்பத்தினரையும் இணைத்து, மக்களுக்குச் சேவை செய்ய பாஜகவுக்கு அதிகாரம் அளிக்கலாம்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications