டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

3 டீம்.. ஆளுக்கு ஒரு கணக்கு.. பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு எதிராக - திட்டம் பலிக்குமா?

Google Oneindia Tamil News

டெல்லி : குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், பாஜக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரை தோற்கடிப்பதற்கான முயற்சிகளில் எதிர்க்கட்சிகள் இறங்கியுள்ளன.

பா.ஜ.கவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவும் தனித்தனியாக கணக்குப் போட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் இருவரும் சமீபத்தில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் சந்தித்துள்ளதால் இவர்கள் ஆதரவுடன் பா.ஜ.க சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரே வெல்வதற்கு வாய்ப்பு அதிகம் எனக் கூறப்படும் நிலையில், எதிர்க்கட்சிகள் அவசர அவசரமாக ஆலோசனை நடத்தி வருவது அரசியல் அரங்கில் சுவாரஸ்யத்தைக் கூட்டியுள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தல்

குடியரசுத் தலைவர் தேர்தல்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு ஜூலை 18ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போதைய சூழலில் நாட்டில் உள்ள அனைத்து எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்களின் வாக்குகளில் 48.9 சதவீத வாக்குகளை பா.ஜ.க கூட்டணி பெற்றுள்ளது. எதிர்க்கட்சிகள் மற்றும் பிற கட்சிகள் 51.1 சதவீதம் பெற்றுள்ளன. அதாவது மொத்த வாக்குகளின் மதிப்பான 10,86,431ல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் வாக்கு மதிப்பு 5,25,706. பாஜக தனது வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய சுமார் 20 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக தேவைப்படுகிறது.

பாஜக வேட்பாளர்

பாஜக வேட்பாளர்

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் பாஜக மேலிடம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தேர்தலில், இஸ்லாமியர் ஒருவரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான், மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோரில் ஒருவர் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த திரெளபதி முர்முவுக்கும் வாய்ப்பு கிடைக்கலாம் எனக் கூறப்படுகிறது. பெண் ஒருவரை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கும் முடிவும் பாஜக மேலிடத்தின் பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

பாஜகவுக்கு எதிராக

பாஜகவுக்கு எதிராக

பா.ஜ.க சார்பில் நிறுத்தப்படும் குடியரசுத் தலைவர் வேட்பாளரை தோற்கடிக்க பாஜக கூட்டணியை தவிர்த்த அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆதரவும் தேவை. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பாஜக வேட்பாளரை தோற்கடிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட பல முக்கிய கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. குடியரசுத் தலைவர் தேர்தலில் மாநில கட்சிகளின் ஆதரவு அதிகளவில் தேவை என்பதால் மாநில கட்சிகளுக்கு இடையே ஆலோசனைகளும் நடந்து வருகின்றன. இப்போது வெளிப்படையாக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், டி.ஆர்.எஸ் ஆகிய கட்சிகள், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை முன்னெடுத்து வருகின்றன.

சந்திரசேகர் ராவ்

சந்திரசேகர் ராவ்

தெலுங்கானா முதல்வரும் டி.ஆர்.எஸ் தலைவருமான சந்திர சேகர் ராவ் குடியரசு தலைவர் தேர்தலில் பா.ஜ.கவுக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்துவதற்காக பிரமாண்ட கூட்டணியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்தக் கூட்டணியை வர விருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்காகவும் பயன்படுத்துவது அவரது திட்டமாக இருக்கிறது. சிவசேனா, திமுக, ஆர்ஜேடி, சமாஜ்வாடி, ஜேடிஎஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் தொடர் சந்திப்புகளை நடத்தினார் கேசிஆர். இந்தச் சந்திப்புகளின்போது குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரை தோற்கடிப்பது குறித்து அவர் பேசியிருப்பதாக கூறப்பட்டது.

தேசிய கட்சி அமைக்க ஆலோசனை

தேசிய கட்சி அமைக்க ஆலோசனை

சந்திரசேகர் ராவ் தனது தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். சுமார் 6 மணி நேரம் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அகில இந்திய அளவில் பா.ஜ.கவை தோற்கடிக்க புதிய கட்சியை தொடங்குவது குறித்து முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவுக்கு கட்சி தலைவர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். பலம் வாய்ந்த பா.ஜ.கவை வெல்ல அகில இந்திய அளவில் புதிய கட்சியை உருவாக்கி, எதிர்க்கட்சிகளை ஒரே அணியாகத் திரட்டினால் அது பா.ஜகவுக்கு எதிரான வலுவான அணியாக இருக்கும் என சந்திரசேகர ராவ் கருதுகிறார். வரும் ஜூன் 19-ஆம் தேதி தெலுங்கானா ராஷ்ட்ரிய கட்சியின் உயர் மட்டக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் தனது புதிய கட்சியின் பெயரை சந்திரசேகர் ராவ் அறிவிப்பார் எனக் கூறப்படுகிறது.

மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட நாடு முழுவதும் உள்ள 22 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். டெல்லி, கேரளா, தமிழகம், ஒடிசா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், பஞ்சாப் மாநில முதலமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட 22 எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக ஜூன் 15-ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள மம்தா பானர்ஜி, மத்திய பாஜக அரசின் பல்வேறு அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் குறி வைக்கப்படுகிறார்கள். குடியரசு தலைவர் தேர்தலில் வலுவான பங்களிப்பை அளிக்க வேண்டும். குடியரசு தலைவர் தேர்தலில் ஒருமித்த கருத்து உள்ள அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார்.

காங்கிரஸ்

காங்கிரஸ்

இதற்கிடையே, மூன்றாவது அணி அமையவிடாமல் தடுத்து இரு பக்கமும் சாராத கட்சிகளை இப்போதே தங்கள் பக்கம் இழுக்கும் வேலையை காங்கிரஸ் தொடங்கியிருக்கிறது. எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான வேலைகளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தொடங்கிவிட்டார். காங்கிரஸ் கட்சியின் ராஜ்ய சபா குழு தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவிடம் இதுகுறித்து அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் பேசுமாறு சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

மல்லிகார்ஜுன கார்கே எதிர்க்கட்சித் தலைவர்களைத் தொடர்புகொண்டு பேசி வருகிறார். தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோருடன் சோனியா தொடர்பு கொண்டிருப்பதாகவும் டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. இவர் திரிணாமுல் காங்., சிவசேனா, மற்றும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. பஞ்சாப் மற்றும் டெல்லியில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியுடனும் காங்கிரஸ் பேசி வருகிறது.

கட்சிகளின் திட்டம்

கட்சிகளின் திட்டம்

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர், தென் மாநிலங்களை ஒன்றிணைத்து சரத் பவாரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்னிறுத்த இருப்பதாகக் கூறப்படுகிறது. அதற்காகவே 22 கட்சிகளின் தலைவர்களுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்திருப்பதாக கூறப்படுகிறது. சரத் பவாரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக பெரும்பாலான கட்சிகள் ஏற்கக்கூடும் என்பது அவர்களின் கணக்காக இருக்கிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எந்தெந்தக் கட்சிகள் பங்கேற்கப் போகின்றன என்பதைப் பொறுத்தே இந்தத் திட்டத்தின் பலம் தெரியவரும்.

வெற்றி வாய்ப்பு குறைவே

வெற்றி வாய்ப்பு குறைவே

எப்படி இருந்தாலும், மக்களவை, மாநிலங்களவை, மாநில சட்டசபைகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் வாக்குகளின் அடிப்படையில் பார்த்தால், பாஜகவின் பலம் அதிகமாக உள்ளது. சுமார் 20 ஆயிரம் வாக்குகள் மட்டுமே கூடுதலாக தேவைப்படுவதால் பாஜக முன்னிறுத்தும் குடியரசு தலைவர் வேட்பாளரே வெற்றிபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர் நிறுத்தப்படும் பட்சத்தில், அதற்கு ஆளும் பாஜக கூட்டணியில் இல்லாத கட்சிகளின் ஆதரவு முழுமையாகக் கிடைக்கும் பட்சத்தில் குடியரசுத் தலைவர் தேர்தல் கடுமையான போட்டி நிறைந்ததாக இருக்கும். அதற்கு எதிர்க்கட்சிகள் இடம் தருமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

English summary
Presidential election : West Bengal CM Mamata Banerjee and Telangana CM Chandrasekhar Rao are moving separately as the Congress party is in talks to field a common candidate against the BJP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X