பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி.. 2வது முறையாக பதக்கம் வென்று அசத்திய நீரஜ் சோப்ரா! பிரதமர் வாழ்த்து
டெல்லி: பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் வெள்ளி பதக்கத்தை வென்றிருக்கிறார். அவருக்கு பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா தொடர் சாதனைகளை புரிந்து வருகிறது. குறிப்பாக ஈட்டி எறிதலில் கடந்த முறை தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா இந்த முறை வெள்ளி வென்றிருக்கிறார். இப்போட்டியின் தொடக்கத்தில், தகுதிச் சுற்றில் 89.34 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இறுதிப் போட்டிக்கு நீரஜ் சோப்ரா தகுதி பெற்றிருந்தார்.

முதல் வாய்ப்பிலேயே அதிக தூரம் ஈட்டி எறிந்து இறுதிப் போட்டிக்கு நீரஜ் சோப்ரா முன்னேறினார். தகுதிச் சுற்றில் 84 மீட்டர் தூர இலக்கு உள்ள நிலையில் 89.34 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து நீரஜ் சோப்ரா அசத்தினார். எனவே இந்த முறையும் தங்கம் கன்பார்ம் என்று நம்பிக்கை இருந்தது. இருப்பினும் இறுதி போட்டியில் 89.45 மீ தொலைவுக்கு ஈட்டி எறிந்து நீரஜ் இரண்டாம் இடம் பிடித்தார். பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97மீ தூரம் ஈட்டி எறிந்து தங்கம் வென்று முதலிடம் பிடித்தார்.
நீரஜ் சோப்ரா வெற்றி பெற்றதையடுத்து அவரது சொந்த மாநிலமான ஹரினாயாவில் கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கின. பிரதமர் நரேந்திர மோடி, "நீரஜ் சோப்ரா சிறந்த ஆளுமை! மீண்டும் மீண்டும் அவர் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். மீண்டும் ஒலிம்பிக்கில் அவர் வென்றிருப்பதால் இந்தியா மகிழ்ச்சியில் உள்ளது. வெள்ளிப் பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துகள். வரவிருக்கும் எண்ணற்ற தடகள வீரர்கள் அவர்களின் கனவுகளை நனவாக்கவும், நமது தேசத்தை பெருமைப்படுத்தவும் அவர் தொடர்ந்து ஊக்குவிப்பார்" என்று கூறியுள்ளார்.
அதேபோல பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 2024ல் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் அற்புதமான சாதனையை நிகழ்த்தி வெள்ளிப் பதக்கம் வென்ற தடகள வீரர் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகள். கடின உழைப்பு, அர்ப்பணிப்பு உருவகம்தான் அவர். இந்த வெற்றி ஒட்டுமொத்த தேசத்தையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது" என்று கூறியுள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இது குறித்து கூறுகையில், "நீரஜ், நீங்கள் ஒரு அற்புதமான விளையாட்டு வீரர். பாரிஸ் ஒலிம்பிக்ஸில் சிறப்பாக விளையாடி வெள்ளிப் பதக்கம் வென்றதற்கு வாழ்த்துகள். இந்தியாவை மீண்டும் பெருமைப்படுத்தி உள்ளீர்கள்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications