சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க.. இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி உற்பத்தி.. குவாட் நாடுகள் அதிரடி முடிவு
டெல்லி: 2022ஆம் ஆண்டின் இறுதிக்குள் 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை இணைந்து உற்பத்தி செய்ய குவாட் கூட்டமைப்பு நாடுகள் முடிவு செய்துள்ளன.
உலக நாடுகளில் கொரோனா பரவலின் வேகம் மீண்டும் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் தடுப்பூசி மட்டுமே வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஒரே வழியாகப் பார்க்கப்படுகிறது.
புதுச்சேரி சட்டசபைத் தேர்தல் 2021: அமமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சி 4 தொகுதிகளில் போட்டி
இருப்பினும், தேவைக்கு ஏற்ப தடுப்பூசி உற்பத்தி செய்யப்படுவதில்லை. இதனால் வளரும் நாடுகளும் பின்தங்கிய நாடுகளும் தடுப்பூசி பெறுவதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளன. இதன் அங்கு உயிரிழப்புகள் அதிகரிக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த அசாதாரண நிலையைப் பயன்படுத்தி, சீனா வளரும் நாடுகள், குறிப்பாகத் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நாடுகளை வளைத்துப்போட முயல்கிறது.

சீனா ஆதிக்கம்
சீனா தற்போது சினோவாக் மற்றும் சினோபார்ம் ஆகிய தடுப்பூசிகளை உற்பத்தி செய்கிறது. இந்தத் தடுப்பூசிகள் பெரியளவில் பலன் அளிப்பதில்லை. இருந்தாலும், மற்ற தடுப்பூசிகள் கிடைக்காததால் சீன தடுப்பூசிகளைப் பெறவும் தென்கிழக்கு நாடுகள் தயாராகவுள்ளன. இந்த இக்கட்டான சூழ்நிலையைப் பயன்படுத்தி, அந்த நாடுகளைக் கட்டுப்படுத்த சீனா முயல்கிறது.

100 கோடி தடுப்பூசிகள்
இந்நிலையில், சீனாவின் இந்த திட்டத்தை முறியடிக்கும் வகையில் குவாட் அமைப்பு புதியதொரு திட்டத்தை முன்னெடுத்துள்ளது. ஒருங்கிணைந்த நிதி முதலீட்டின் மூலம் 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய இந்த குவாட் கூட்டமைப்பு நாடுகள் முடிவு செய்துள்ளன. கொரோனா பரவலை விரைவில் தடுக்கவும் இதனால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளைப் பாதுகாக்கவும் இது உதவும் என்று வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்துள்ளார்.

பகிர்ந்து கொள்ளப்பட்ட பொறுப்புகள்
உலகின் மிகப் பெரிய தடுப்பூசி உற்பத்தி நாடான இந்தியா, இந்தத் தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும். இதற்குத் தேவையான நிதியுதவியை அமெரிக்காவின் சர்வதேச மேம்பாட்டு நிதியம் மற்றும் சர்வதேச ஜப்பான் வங்கி இணைந்து வழங்குகிறது. அதேபோல தடுப்பூசி செலுத்தச் செவிலியர்களுக்குப் பயிற்சி அளிப்பது, தடுப்பூசியைத் தேவையான நாடுகளுக்கு அனுப்பி வைக்கும் பொறுப்பு ஆஸ்திரேலியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா கருத்து
இருப்பினும், அமெரிக்காவிலுள்ள சில ஏற்றுமதி விதிகள் காரணமாக இந்த முயற்சி தடைப்படும் வாய்ப்பும் உள்ளது. இந்த பிரச்சினை இரு தரப்பு நாடுகளும் இணைந்து விரைவில் சரி செய்யும் என்றும் இது குறித்து தீவிரமாக ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும் வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா கூறினார். அதேநேரம் இந்த ஒப்பந்தத்தால் 140 கோடி இந்தியர்களுக்குத் தடுப்பூசியை உற்பத்தி செய்யும் பணிகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்றும் அவர் குறிப்பிட்டார்