டிகே சிவக்குமாரை இழுத்து தள்ளிவிட்ட ராகுல் காந்தி! பொது வெளியில் அவமதிப்பதா? வரிந்து கட்டும் பாஜக முதல்வர்
டெல்லி: டெல்லியில் நேற்று உச்ச நீதிமன்றம் நோக்கி பேரணியாக சென்ற ராகுல் காந்தி கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் சட்டையை பிடித்து பின்னுக்கு இழுத்தது சர்ச்சையாகியுள்ளது. ஒரு மாநிலத்தின் முதல்வர் என்றும் பாராமால் ராகுல் காந்தி நடந்துகொண்ட விதம் அதிருப்தி அளிப்பதாக பலரும் விமர்சித்து வரும் நிலையில் அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா ராகுல் காந்திக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக அதே பேரணியில் இளைஞர் ஒருவரை ராகுல் காந்தி தாக்கிய வீடியோவும் வெளியானது. அடுத்தடுத்து இரு வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வெளியான நிலையில் ராகுல் காந்தியை பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

பொதுவெளியில் அவமதிப்பது சரியா?
அசாம் மாநில முதல்வரும், பாஜவை சேர்ந்தவருமான ஹிமந்த பிஸ்வா சர்மா ராகுல் காந்தியை கடுமையாக சாடியுள்ளார். ராகுல் காந்தி கர்நாடக முதல்வரை இழுப்பது போன்ற வீடியோவை தனது சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தில் பகிர்ந்து ஹிமந்த பிஸ்வா சர்மா கூறியிருப்பதாவது:-
ராகுல் காந்தியின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் ஒரு தனிநபர் மட்டுமல்ல. அவர் ஒரு மாநிலத்தின் முதல்வர். அந்த மாநிலத்தின் வரலாறு, கலாசாரம் மற்றும் மக்களின் பெருமையைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர். எனவே அவரை இப்படி பொதுவெளியில் அவமதிப்பது சரியா? முதலில் டிகே சிவக்குமார் இதனை ஏற்றுக்கொள்வாரா?
ஆணவத்தை மறைக்க முடியாது
ராகுல் காந்தி தனது அணுகுமுறையை எல்லாத்தையும் மாற்றிக்கொண்டதாக வெளியே காட்டினாலும், உண்மையில் அவரிடம் இருக்கும் ஆணவத்தை மறைக்க முடியாது.. என்று பதிவிட்டுள்ளார். மேலும் அதோடு விடாமல், 2015 ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தை மீண்டும் நினைவுப்படுத்தி ராகுல் காந்தியை ஹிமந்த பிஸ்வா சர்மா விமர்சித்துள்ளார். தான் ஏன் காங்கிரஸில் இருந்து விலகினேன் என்பதை மீண்டும் நினைவுப்படுத்துவதாக கூறினார்.
அவர் கூறுகையில், "கடந்த 2015 ஆம் ஆண்டு காங்கிரசின் மூத்த தலைவராக இருந்த போது, காங்கிரஸில் நிலவிய உள்கட்சி பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக, டெல்லியில் உள்ள ராகுல் காந்தியின் இல்லத்துக்கு சென்றோம். அங்கு அவரது வீட்டில் உள்ள செல்ல நாய், 'பிடி'-க்கு ஒரு தட்டில் பிஸ்கட் வழங்கப்பட்டது. பின்னர் அதே தட்டில் அங்கு வந்த விருந்தினர்களுக்குப் பிஸ்கெட் வழங்கப்பட்டது. இந்த சம்பவம் எனக்கு ஏற்பட்ட அவமதிப்பாக கருதினேன். இதனால் தான் நான் காங்கிரசில் இருந்து வெளியேறினேன்.." என்று கூறியுள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு காங்கிரசில் இருந்து விலகிய ஹிமந்த பிஸ்வா சர்மா பாஜகவில் இணைந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று அசாம் முதல்வர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று என்ன நடந்தது?
எஸ் ஐ ஆரை ரத்து செய்யக்கோரியும், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தியும் இந்தியா கூட்டணியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், நேற்று டெல்லியில் பேரணியாக சென்று உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு அளித்தனர்.
இதற்காக இந்தியா கூட்டணியினர், குறிப்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமார் உள்ளிட்டோர் பேரணியாக சென்றனர். காங்கிரஸ் தொண்டர்களும் அதிகளவில் இந்த பேரணியில் பங்கேற்றனர். அப்போது அதிகளவில் இளைஞர்களும் வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் ராகுல் காந்தியை இளைஞர் ஒருவர் இடித்தபடி வந்தார்.
டிகே சிவக்குமாரையும் பிடித்து இழுத்தார்
இதில் ஆவேசம் அடைந்த ராகுல் காந்தி அந்த இளைஞரின் நெஞ்சுப் பகுதியில் தன் முழங்கையால் ஓங்கி குத்தினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் டிரெண்டாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. கூட்டத்தினரை கட்டுப்படுத்த இப்படியா செய்வது என ராகுல் காந்திக்கு எதிராக பலரும் கருத்துகளை கூறி வந்த நிலையில் அதே கூட்டத்தில் கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரை அவமதித்ததாக மற்றொரு வீடியோ டிரெண்ட் ஆகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
அந்த வீடியோவில், தன்னுடன் நடந்து வந்த கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமாரை ராகுல் காந்தி சட்டையை பிடித்து பின்னோக்கி இழுப்பது போன்று இருந்தது. ராகுல் காந்தி வேகமாக நடந்து செல்லும் போது அவருடன் நடந்து வந்த டிகே சிவக்குமார் முன்னோக்கி செல்ல முயல்கிறார். உடனே டிகே சிவக்குமாரின் சட்டையை பிடித்து பின்னால் இழுத்துவிட்டு ராகுல் காந்தி முன்னோக்கி செல்வதும், பின்னால் வந்து கொண்டிருந்தவர்கள் டிகே சிவக்குமாரை கண்டுக்கொள்ளாதபடி முன்னோக்கி செல்வது போன்ற வீடியோ வெளியானது.
பாஜகவினர் விமர்சனம்
டெல்லி பேரணியின் போது ராகுல் காந்தி நடந்து கொண்ட விதம் குறித்த இரு வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் பரவி சர்ச்சையாகியுள்ளது. கர்நாடகாவின் முதல்வர் டிகே சிவக்குமாரை ராகுல் காந்தி அவமதித்து விட்டதாக விமர்சனம் செய்து வருகின்றனர். பாஜகவினரும் ராகுல் காந்தியின் இந்த செயலை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அந்த வகையில் தான் அசாம் மாநில முதல்வரும் இந்த சம்பவத்தை வைத்து கடுமையாக ராகுல் காந்தியை விமர்சித்துள்ளார்.





Click it and Unblock the Notifications
