“24 மணி நேரம் தாண்டி ஒருவரை போலீஸ் காவலில் வைத்திருக்கக் கூடாது” - உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
டெல்லி: கைது செய்யப்பட்ட நபர்களை 24 மணி நேர வரம்பை தாண்டி காவல்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடாது என்றும், முறையாக கைது செய்த நேரத்துக்கு முன்பு அவர்களை உண்மையாக காவலில் எடுத்த நேரத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீதிபதி முன் ஆஜர்படுத்தப்படாமல் 24 மணி நேரத்திற்கும் மேலாக காவலில் வைத்திருக்கக்கூடாது என்றும், தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

காவல்துறையினர் குற்றம்சாட்டப்பட்டவர்களை ஆஜர்படுத்துவது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் உஜ்ஜல் புயான் மற்றும் அதுல் எஸ். சந்துர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, கைது மற்றும் தடுப்புக் காவல் ஆகியவற்றுக்கு இடையே வேறுபாட்டை தெளிவுபடுத்து, முக்கியமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தின் 22(2)-வது பிரிவின்படி, கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படும் ஒவ்வொருவரும் 24 மணி நேரத்திற்குள் அருகிலுள்ள மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட வேண்டும். இதில், கைது செய்யப்பட்ட இடத்திலிருந்து நீதிமன்றத்திற்குச் செல்வதற்குத் தேவையான பயண நேரத்திற்கு மட்டுமே விலக்கு அளிக்கப்படும்.
முறையாகக் கைது செய்யப்பட்ட நேரத்திலிருந்துதான் 24 மணி நேரம் தொடங்கும் என்று கூறுவது அரசியலமைப்புச் சட்டத்தின் 22(2)-வது பிரிவு மற்றும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) சட்டத்தின் 56-வது பிரிவுக்கு எதிரானது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
ஒருவரை முறையாகக் கைது செய்வதற்கு முன்பு காவல்துறையினர் விசாரணை நடத்துவது, தகவல்களைச் சேகரிப்பது, சோதனை செய்வது அல்லது பொருட்களைக் கைப்பற்றுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாலும், அந்த நேரத்தை 24 மணி நேரக் கணக்கிலிருந்து கழிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட இடத்திலிருந்து மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்குச் செல்வதற்குத் தேவையான நியாயமான பயண நேரத்தை மட்டுமே 24 மணி நேரக் கணக்கிலிருந்து விலக்க முடியும் என்றும் தீர்ப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஒருவரை அனுமதிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்கும் மேலாக மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தாமல் காவலில் வைத்திருந்தால், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கும் 24 மணி நேர வரம்புக்குள்ளாக இருந்தாலும், ஒருவரை நியாயமற்ற வகையில் நீண்ட நேரம் காவலில் வைத்திருக்கக் கூடாது என்றும் காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளது.
காவலில் வைக்கப்பட்ட நபர் தொடர்பான உண்மையான தேதி மற்றும் நேரத்தை மாஜிஸ்திரேட்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், 24 மணி நேரக் காலக்கெடு முறையாகப் பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை மாஜிஸ்திரேட்கள் சுயமாக ஆய்வு செய்ய வேண்டும். காவலில் வைக்கப்பட்ட கால அளவு சம்பந்தப்பட்ட சூழ்நிலைகளுக்கு ஏற்ப நியாயமானதாக உள்ளதா என்பதையும் மதிப்பிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
காவல் காலம் அளவுக்கு அதிகமாக இருப்பதாகக் கருதினால், சம்பந்தப்பட்ட நபரைத் தொடர்ந்து காவலில் வைக்க அனுமதிக்கும் ரிமாண்ட் உத்தரவை வழங்க மறுக்கவும் மாஜிஸ்திரேட்களுக்கு அதிகாரம் உள்ளது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
