கொரோனா தடுப்பூசியால் மரணம்.. நாங்க பொறுப்பேற்க மாட்டோம்.. உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்!
டெல்லி: கொரோனா தடுப்பூசிகளால் ஏற்படும் மரணங்களுக்கு பொறுப்பேற்க முடியாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் இது குறித்த வழக்கு ஒன்றில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த மத்திய அரசு, அதில் இவ்வாறு கூறியுள்ளது.
மேலும், தடுப்பூசி செலுத்திக்கொள்வது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வுதான் ஏற்படுத்தியதாகவும், ஆனால் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என்றும் மத்திய அரசு விளக்கமளித்திருக்கிறது.
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் தங்களது மகள்கள் இருவர் உயிரிழந்தவிட்டதாக கூறி பெற்றோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மத்திய அரசு இவ்வாறு பதிலளித்துள்ளது.
குஜராத்தில் இந்த முறையும் பாஜக ஆட்சிதான்.. காரணம் இதுதான்.. ஆரூடம் சொன்ன

அச்சத்தை போக்க நடவடிக்கை
தடுப்பூசியை தொடர்ந்து ஏற்படும் உடல்நலக்குறைவு மற்றும் அதனையொட்டி ஏற்படும் அரிதான மரணங்களுக்கு அரசை பொறுப்பாக்குவது என்பது பொருத்தமாக இருக்காது என மத்திய அரசு கூறியுள்ளது. இந்த தடுப்பூசி பாதுகாப்பானதுதான் என்பதை உறுதி செய்ய மத்திய அரசு பெரும் முயற்சியை மேற்கொண்டு அதன் பின்னர்தான் அனைவருக்கும் தடுப்பூசியை கொண்டு சேர்த்துள்ளோம் என்றும் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தெரிவித்திருக்கிறது. மேலும், தடுப்பூசி குறித்த அச்சத்தை போக்க இது தொடர்பான தகவல்களை பொது தளங்களில் அனைவருக்கும் கிடைக்க தடுப்பூசி நிறுவனத்தை இணைத்து சுகாதாரத்துறை அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.

பிரமாண பத்திரம்
பிரமாண பத்திரத்தில் மேலும் கூறியுள்ளதாவது, "இது மட்டுமல்லாது சுகாதார மையங்களில் பணியாளர்கள் அல்லது மருத்துவர்களிடம் கேட்டாலே தடுப்பூசி குறித்த தகவல்களை தெரிந்துகொள்ளலாம். அந்த அளவுக்கு மத்திய அரசு இதில் வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொண்டிருக்கிறது. யாருடைய ஒப்புதல் இன்றியும் தடுப்பூசி யாருக்கும் செலுத்தப்படவில்லை. யாரையும் நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை. ஒரு வேளை தடுப்பூசி செலுத்தும் போது ஏதேனும் பிரச்னை ஏற்பட்டிருப்பின் அது குறித்து இழப்பீடு கோருவதற்கு உரிமையியல் நீதிமன்றங்களை அணுகலாம். கடந்த 19ம் தேதி வரை நாடு முழுவதும் சுமார் 219.86 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன" என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

உலகம் முழுவதும்
கடந்த 2019ம் ஆண்டில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் தொடங்கப்பட்டதாக சொல்லப்படும் கொரோனா தொற்று வைரஸ், உலகம் முழுவதும் இதுவரை 64 கோடிக்கும் அதிகமானோரை பாதித்துள்ளது. இதனால் 66.3 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல 12 ஆயிரம் கோடி கொரோனா தடுப்பூசிகள் உலகம் முழுவதும் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளன. மொத்த மக்கள் தொகையில் 64% பேர் முழுமையாக தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டுள்ளனர். இந்தியாவை பொறுத்த அளவில், 4.4 கோடி பேருக்கு இதுவரை கொரோனா தொற்று பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், 5,30,615 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது தொற்று பாதித்த 10 லட்சம் பேரில் 32,835 பேர் உயிரிழந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உயிரிழப்பு குறைவு
தடுப்பூசி செலுத்த தொடங்கிய நிலையில் உயிரிழப்புகள் படிப்படியாக குறையத் தொடங்கின. ஆனால், இந்த தடுப்பூசியால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக சிலர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். தற்போது வரை 95 கோடிக்கும் அதிகமானோர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டுள்ளனர். இதில் உயிரிழப்பு என்பது மிக குறைந்தளவே ஏற்பட்டுள்ளதாகவும், அதுவும் கூட தடுப்பூசியால் ஏற்பட்டதல்ல என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளிவில் ஒரு சில நாடுகளிலும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக சில வழக்குகள் அந்தந்த நாட்டு நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.