தமிழக அமைச்சரவை ஆலோசனையில் ஆளுநர் செயல்பட வேண்டாம்.. உச்சநீதிமன்றத்தில் ஆர்என் ரவி தரப்பு வாதம்
டெல்லி: ஆளுநருக்கு எதிரான வழக்கில் இன்று ஆளுநர் ஆர்என் ரவி சார்பில் உச்சநீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமான வாதம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‛‛அரசியல் சாசன பிரிவு 200ல் Discretion என்ற வார்த்தை ஆளுநருக்கான தனிப்பட்ட அதிகாரத்தை குறிக்கிறது. ஆளுநர் ஒவ்வொரு முறையும் மாநில அமைச்சரவை ஆலோசனையின்படி செயல்பட வேண்டிய அவசியம் இல்லை. மசோதா மீதான ஒப்புதல் நிறுத்தி வைக்கப்பட்டால் அந்த மசோதா செயலிழந்துவிட்டது என்று அர்த்தம்'' என்பது உள்பட பல்வேறு விஷயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறார் எனவும், பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்களில் யுஜிசி தலைவரையும் சேர்க்க கோரி இடையூறு ஏற்படுத்துகிறார் என்றும் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் 2 ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் பார்திவாலா மற்றும் மகாதேவன் அமர்வு விசாரணை நடத்தியது. இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பும், ஆளுநர் தரப்பும் வாதங்களை முன்வைத்தது.
தமிழக அரசு சார்பில், ‛‛ஆளுநர் ஆர்என் ரவி அரசியலமைப்பு சட்டத்தை மீறி செயல்பட்டு வருகிறது. தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தர மறுக்கிறார். அவரது செயல்பாடு அரசியலமைப்பு சட்டப்பிரிவு 200யை மீறும் வகையில் உள்ளது. மசோதாவை திருப்பி அனுப்புவதோடு, ஜனாதிபதி ஒப்புதலுக்கும் அனுப்பி காலம் தாழ்த்தி வருகிறார்'' என்று கூறப்பட்டது.
அதற்கு ஆளுநர் தரப்பு வாதங்களை முன்வைத்தது. கடந்த 10ம் தேதி இருதரப்பு வாதங்கள் நிறைவு பெற்றது. இதையடுத்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. அதோடு தமிழக அரசு மற்றும் ஆளுநர் தரப்பில் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. இதையடுத்து தமிழக அரசு சார்பில் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து இன்று ஆளுநர் ஆர்என் ரவி சார்பில் எழுத்துப்பூர்வமான வாதம் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் பல்வேறு விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதில் உள்ள சில முக்கிய விபரங்கள் வருமாறு: அரசியல் சாசனத்தின் கீழ் ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் (Pocket Veto) உள்ளது. அரசியல் சாசன பிரிவு 200ல் குறிப்பிட்டுள்ள Discretion என்ற வார்த்தை ஆளுநருக்கான தனிப்பட்ட அதிகாரத்தை குறிக்கிறது. இதனால் இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்தும் விசாரிக்கலாம்.
அதோடு ஆளுநர் ஒவ்வொரு முறையும் மாநில அமைச்சரவை ஆலோசனையின்படி செயல்பட வேண்டிய அவசியம் இல்லை. மசோதா மீதான ஒப்புதல் நிறுத்தி வைக்கப்பட்டால் அந்த மசோதா செயலிழந்துவிட்டது என்று அர்த்தம். காலாவதியான மசோதாவை மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பினால் ஒப்புதல் வழங்க வேண்டிய அவசியம் இல்லை.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பஞ்சாப் ஆளுநருக்கு எதிரான வழக்கில் பிறப்பித்த உத்தரவு தமிழக ஆளுநருக்கு பொருந்தாது. மசோதாக்களை ஒப்புதல் வழங்குவது, ஒப்புதலை நிறுத்தி வைப்பது, ஜனாதிபதிக்கு மசோதாவை அனுப்பி வைப்பது என்பது அரசியல் சாசனம் 200ல் உள்ள 4 அதிகாரங்களில் விரிவாக செயல்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க ஆளுநருக்கு முழு அதிகாரம் உள்ளது'' என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications