தலைமை தேர்தல் ஆணையர் VS 2 தேர்தல் ஆணையர்.. எந்த இடத்தில் பிரச்சனை வெடித்தது? முழு விவரம்
டெல்லி: 'சார்' எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை பணி தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் ஆணையராக இருக்கும் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்களாக இருக்கும் விவேக் ஜோஷி மற்றும் சுக்பீர் சிங் சந்து ஆகியோர் இடையே முரண்பாடு ஏற்பட்ட விவகாரம் பூதாகரமான நிலையில் இவர்களுக்கு எந்த காரணத்தினால் மோதல் ஏற்பட்டது? என்பது பற்றிய முக்கியமான தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் ஒரு தலைமை தேர்தல் ஆணையர், 2 தேர்தல் ஆணையர்களுடன் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக இருக் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்களாக உள்ள விவேக் ஜோஷி, சுக்பீர் சிங் சந்து ஆகியோர் உள்ளனர். தலைமை தேர்தல் ஆணையர் நிர்வாக ரீதியாக தலைவர் மட்டுமே. மற்றபடி இந்திய தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் என அனைவருக்கும் ஒரே அதிகாரம் தான்.

இந்நிலையில் தான் 'சார்' எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கையின்போது தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டுள்ளார். தேர்தல் ஆணையர்கள் விவேக் ஜோஷி, சுக்பீர் சிங் சந்து ஆகியோரின் ஆலோசனைகள், ஆட்சேபனைகளை கேட்காமல் சுயநலமாக முடிவெடுத்துள்ளார்.
கடந்த 10 மாதங்களில் 14 முறை ஆட்சேபம் எழுப்பியதாகவும், ஆனால் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டு 2 தேர்தல் ஆணையர்களுக்கு தெரியாமல் முடிவுகள் மேற்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இதனை 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஊடகம் வெளிக்கொண்டு வந்தது. தற்போதும் அந்த ஊடகத்தில் முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. எந்த இடத்தில் இருதரப்புக்கும் முரண்பாடு ஏற்பட்டது என்பது பற்றிய விவரம் வெளியாகி உள்ளது.
அதாவது 'சார்' எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின்போது படிவம் 6ல் செய்யப்பட்ட மாற்றத்தை தேர்தல் ஆணையர் விவேக் ஜோஷி, சுக்பீர் சிங் சந்து ஆகியோர் எதிர்த்தனர். அதாவது முந்தைய வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2002, 2003,2004 உள்ளிட்ட ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதுபற்றி தற்போது கேள்விகள் கேட்கப்பட்டது. முந்தை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் உங்களின் பெயர் இடம்பெற்றதா? அல்லது பெற்றோர் அல்லது தாத்தா - பாட்டியின் பெயர் இடம்பெற்றதா? என்ற கேள்வி கேட்கப்பட்டது.
இந்த கேள்விகளால் இளம் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்கள் சிரமத்துக்கு ஆளாவார்கள். இதனை தவிர்க்க இந்த கேள்வியை நீக்க வேண்டும் என்று இரு தேர்தல் ஆணையர்கள் கூறியும் ஞானேஷ் குமார் புறக்கணித்தார். உண்மையில் இந்த கேள்விக்கு வாக்காளர்கள் பலரும் பதில் தெரியாமல் திணறினர். இதனை முன்கூட்டியே அறிந்து தான் தேர்தல் ஆணையர் விவேக் ஜோஷி மற்றுமு் சுக்பீர் சிங் சந்து ஆகியோர் இந்த கேள்வியை வேண்டாம் என்று கூறியுள்ளனர். இதுதான் முரண்பாடுக்கான முதல் புள்ளியாகும்.
அதுமட்டுமின்றி மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட 'வாக்காளர் பதிவு விதிகள், 1960'-ல் (Registration of Electors Rules, 1960) திருத்தம் செய்யாமல் இந்த கேள்விகயை இடம்பெற செய்ய முடியாது. ருவேளை அப்படி செயல்படுத்தினால் இது சட்டவிரோதம் என்றும் கூறியுள்ளனர். ஆனால் ஞானேஷ் குமார் கேட்காமல் அதனை செயல்படுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையர் விவேக் ஜோஷி படிவம் 6ஐ மாற்றுவது தொடர்பாக மே 16ம் தேதி ஆட்சேபனைகளை தெரிவித்தார். 'மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1950' பிரிவு 21(3)-ன் கீழ் (இது வாக்காளர் பட்டியலின் சிறப்புத் திருத்தத்திற்கு ஆணையம் உத்தரவிட அனுமதிக்கும் பிரிவாகும்) 'சார்' நடத்தப்படுவதாக தெரிவித்து இருந்தார். 'வாக்காளர் பதிவு விதிகள், 1960'-ல் 'சார்' தொடர்பான படிவங்கள் அந்த குறிப்பிட்ட செயல்முறைக்கு மட்டுமே உரித்தானவை. ஆனால் சட்ட ரீதியானது கிடையாது.
மாறாக படிவம் 6 மற்றும் படிவம் 8 (மாற்றங்கள் மற்றும் திருத்தங்களைச் செய்வதற்கானது) ஆகியவை சட்டரீதியாக வரையறுக்கப்பட்ட ஒன்றாகும். இதனால் "வாக்காளர் பதிவு விதிகள், 1960-ல் திருத்தங்களைச் செய்யாமல் அவற்றை மாற்ற முடியாது.
சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட ஒரு படிவத்தை, SIR உத்தரவு அல்லது வழிகாட்டுதலில் உள்ள ஒரு வாக்கியத்தின் மூலம் மாற்றிவிட முடியாது. இதனால் சட்ட விதிகளில் மாற்றங்களைக் கொண்டுவருவதற்காக முன்மொழிவை அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் அதேபோல் படிவம் 6 மற்றும் படிவம் 8 ஆகியவற்றில் செய்யப்பட வேண்டிய மாற்றங்களின் வரைவை உடனடியாக தேர்தல் ஆணையத்தின் முன் வைக்க வேண்டும் என்று கூறினார். இதனை மே 19 ம் தேதி மற்றொரு தேர்தல் ஆணையரான சுக்பீர் சிங் சந்து ஏற்றுக்கொண்டார்.
அதுமட்டுமின்றி ஜூலை 12ம் தேதி தேர்தல் ஆணையத்தின் ECINet இணையதளத்தில் படிவம் 6-ல் இடம்பெற்றிருந்த புதிய அறிவிப்பு குறித்து செய்திகள் வெளியானது. இதுபற்றி ஆகஸ்ட் 13ல் தேர்தல் ஆணையர் சுக்பீர் சிங் சந்து சார்பில் துணை தேர்தல் ஆணையர் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கான தலைமை இயக்குநருக்கும் கடிதம் எழுதி அதன் நகல் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் விவேக் ஜோஷிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அந்த கடிதத்தில், ''விண்ணப்ப படிவம் 6 என்பது விதிகளின் ஒரு பகுதியாக உள்ள சட்டப்பூர்வமான படிவம். இதனை அரசு ஒப்புதல் இன்றி மாற்ற முடியாது'' என்று கூறியிருந்தார். அதுமட்டுமின்றி இப்படியாக இந்திய தேர்தல் ஆணையர்களான விவேக் ஜோஷி மற்றும் சுக்பீர் சிங் சந்து ஆகியோர் தெளிவாக தங்களின் ஆட்சேபனைகளை தெரிவித்தாலும் கூட ஞானேஷ் குமார் அதனை கண்டுக்கொள்ளவில்லை. படிவம் 6ல் அங்கீகரிக்கப்படாத, சட்டவிரோதமான மாற்றங்கள் நீக்கப்படாமல் இருப்பதால் இருவரும் அதிருப்தியாகினர். இதுதான் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களுக்கான கருத்து முரண்பாட்டு பிரச்சனைக்கு முக்கிய காரணமாகும்.


Click it and Unblock the Notifications
