தடுப்பூசி பணிகளுக்கு மோடிக்கு நன்றி கூறி பேனர் வையுங்கள்.. கல்லூரிகளுக்கு பறந்த யுஜிசி-இன் உத்தரவு
டெல்லி: 18+ அனைவருக்கும் தடுப்பூசி பணிகளுக்கு அனுமதி அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தடுப்பூசி பணிகள் குறித்த பேனரை அனைத்து கல்லூரிகளும் வைக்க வேண்டும் என யுஜிசி பிறப்பித்த உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை தற்போது மெல்லக் குறைந்து வரும் நிலையில், தடுப்பூசி பணிகளை வேகப்படுத்த வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். மத்திய அரசின் புதிய தடுப்பூசி கொள்கை நேற்று முதல் அமலுக்கு வந்தது.
புதிய தடுப்பூசி கொள்கை அமலுக்கு வந்த முதல் நாளே சுமார் 80 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்குத் தடுப்பூசி போடப்பட்டது. இதற்கு மத்திய அரசைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

மத்திய அரசு அறிவிப்பு
இந்நிலையில், தடுப்பூசி பணிகள் குறித்து பல்கலைக்கழக மானிய குழு பிறப்பித்த உத்தரவு தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் புதிய தடுப்பூசி தடுப்பூசிகள் அனைத்தையும் மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு அளிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தடுப்பூசிக்கு ஆகும் மொத்த செலவுகளையும் மத்திய அரசு ஏற்றுள்ளது.

பல்கலைக்கழக மானிய குழு
இந்தச் சூழலில் தடுப்பூசி பணிகள் குறித்து விளம்பரப்படுத்த வேண்டும் என நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளுக்கும் யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானிய குழு அறிவுறுத்தியுள்ளது. இதற்காக இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வடிவமைக்கப்பட்ட பேனர்களையும் யுஜிசி அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பியது. இந்த பேனர்கள் ஒலிபரப்பு துறை அமைச்சகத்தால் வடிவமைக்கப்பட்டதாகும்.

பிரதமருக்கு நன்றி
இந்த பேனர்களில் ஒன்றில் 18+ அனைவருக்கும் தடுப்பூசி போட அனுமதி அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி கூறும் வகையில் உள்ளது. இது தான் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை பேனர் வடிவமைப்பை அனுப்பி, அதைத் திங்கள்கிழமை வைக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர். இந்த குறைந்த நேரத்தில் பல கல்லூரிகளால் பேனர்களை வைக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து கூற மறுப்பு
அதேபோல கல்லூரிகளின் சமூக வலைத்தள பக்கங்களிலும் இதுபோன்ற பேனர்களை பதிவிடுமாறு யுஜிசி அறிவித்ததாகத் தகவல் வெளியானது. இது குறித்து யுஜிசி நிர்வாகிகளும், கல்வித்துறை செய்தித்தொடர்பாளரும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

புதிய தடுப்பூசி கொள்கை
மத்திய அரசின் புதிய தடுப்பூசி கொள்கைப்படி உற்பத்தி செய்யப்படும் வேக்சின்களில் 75% மத்திய அரசு வாங்கி, மாநிலங்களுக்கு விநியோகம் செய்யும். இது மாநில அரசுகளின் மீது இருக்கும் அழுத்தத்தைக் குறைக்கிறது. ஒரு மாநிலத்தின் அளவு, மக்கள்தொகை, கொரோனா தீவிர தன்மை, தடுப்பூசி போடும் பணி, வேஸ்டேஜ் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வேக்சின்கள் ஒதுக்கப்படும் என அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications