பாஜக அவ்வளவு தான்.. ம.பி, ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா! காங்கிரஸ் 100% வெல்லும்! சொல்வது ராகுல்
டெல்லி: நாடாளுமன்றத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறும் நிலையில், அதற்கு முன்பு இந்தாண்டு இறுதியில் 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான தேர்தல் களம் இப்போது சூடுபிடித்துள்ளது.
நமது நாட்டில் அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக இந்தாண்டு 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலும் நடைபெறுகிறது.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்கான பணிகளை இப்போது பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆரம்பித்துவிட்டன.
5 மாநில தேர்தல்: இந்தத் தேர்தலில் பெறும் வெற்றி நிச்சயம் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பூஸ்டாக இருக்கும். இந்த 5 மாநிலங்களில் மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் இருக்கும் நிலையில், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. கர்நாடக தேர்தலில் பெற்ற பெற்றி காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. அதே தெம்புடன் இந்த 5 மாநில தேர்தலை அவர்கள் எதிர்கொள்கிறார்கள்.
இந்த 5 மாநில தேர்தல் குறித்த சர்வேக்களும் வெளியாகி வருகிறது. இதற்கிடையே இந்த 5 மாநில தேர்தலில் யார் வெல்வார்கள் என்பது குறித்து ராகுல் காந்தி சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "நான் இப்போதே சொல்கிறேன்.. நோட் செய்து வைத்துக் கொள்ளுங்கள். நாங்கள் வெல்ல வாய்ப்புகள் மிக அதிகம்.. மத்தியப் பிரதேசத்தில் நிச்சயம் வெற்றி பெறுவோம், சத்தீஸ்கரில் நிச்சயம் வெற்றி பெறுவோம்.
ராகுல் காந்தி சொல்வது என்ன: ராஜஸ்தான் மாநிலத்தில் போட்டி கடுமையாக இருக்கிறது. அங்கே கடும் போட்டி இருக்கிறது. அங்கே வெற்றி பெறுவோம் என்றே நான் நினைக்கிறேன்.. மேலும், நான் மட்டும் அப்படிச் சொல்லவில்லை.. பாஜக நடத்திய உட்கட்சி சர்வேக்களிலும் இதே தான் தெரிய வந்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. இந்த அனைத்து மாநிலங்களிலும் நாங்கள் ரேஸில் தான் இருக்கிறோம்.
மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான மனநிலையே இருக்கிறது. ராஜஸ்தான் மக்களிடம் சென்று கேளுங்கள். அங்குள்ள ஆட்சி பிடித்து இருப்பதாகவே அவர்கள் சொல்வார்கள்.
நாடாளுமன்றத் தேர்தல்: லோக்சபா தேர்தலைப் பொறுத்தவரை எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட்டு வருகிறோம். 2024 லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு நிச்சயம் தருவதாகவே இருக்கும். பாஜக ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் நிலையில், நாங்கள் எங்கள் திட்டங்களை மாற்றி அமைக்கிறோம். நாங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்கிறோம். நாட்டில் இருக்கும் 60% மக்கள் எங்களுடன் தான் இருக்கிறார்கள். அடுத்தாண்டு தேர்தலில் இதை நீங்கள் பார்ப்பீர்கள்" என்று அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து மக்களவையில் பகுஜன் சமாஜ் கட்சித் எம்பி டேனிஷ் அலியை நோக்கி பாஜக எம்பி ரமேஷ் பிதுரி கூறிய கருத்துகள் குறித்து பேசிய ராகுல் காந்தி, "இன்று திடீரென இந்த பிரச்சினையைக் கிளப்பியுள்ளனர். நாங்கள் சாதி வாரியாக கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என வலியுறுத்தும் நிலையில், அதைத் திசைதிருப்ப பாஜக முயல்கிறது. சாதிவாரியான கணக்கெடுப்பு என்பது இந்திய மக்களின் அடிப்படைத் தேவை. இது குறித்து விவாதிக்கவே அவர்கள் விரும்பவில்லை.
பாஜக பிளான் இதுதான்: ஒவ்வொரு முறையும் நாங்கள் இது குறித்த விவாதத்தை எடுத்து வரும் போது, அவர்கள் திசை திருப்புகிறார்கள். அவர்களை நாம் சமாளிக்க வேண்டும். இதுதான் அவர்கள் பிளான்.. உண்மையான பிரச்சினை குறித்துப் பேச விடாமல், மக்களைத் திசை திருப்பி தேர்தலை அணுகுவதே பாஜகவின் திட்டம். இதைத் தான் கர்நாடகாவில் நாங்கள் முறியடித்துள்ளோம். திசை திருப்பும் அரசியலை நாங்கள் தோற்கடித்துள்ளோம்.
கர்நாடகாவில் நாங்கள் எங்கள் விஷனை முன்வைத்தோம். நாங்கள் செய்யப் போகும் திட்டங்களை மக்களுக்கு விளக்கினோம். தெலுங்கானாவைப் பொறுத்தவரை அங்கு நாங்கள் தான் முன்னிலையில் இருக்கிறோம். தீவிர பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளோம். அங்கே பாஜக போட்டியிலேயே இல்லை. தெலுங்கானாவில் பாஜக அழிந்து விட்டது. அங்கே அதன் கதை முடிந்துவிட்டது" என்று ராகுல் காந்தி கூறினார்.












Click it and Unblock the Notifications