"வெறும் டீ சர்ட்.." ராகுல் காந்திக்கு மட்டும் குளிரே தெரிவதில்லையே! சயின்ஸ் சொல்வது என்ன! சுவாரசியம்
டெல்லி: டெல்லியில் அனைவருமே இறுக்கமான ஆடைகள், ஸ்வெட்டர்கள் அணிந்து கொண்டு தான் வீடுகளை விட்டு காலடி எடுத்து வைக்கிறார்கள். ஆனால், ராகுல் காந்தியோ இந்த குளிரிலும் தனது வழக்கமான டீ சர்ட், பேண்ட் உடன்தான் வலம் வருகிறார். சிலருக்கு மட்டும் எப்படி கடும் குளிரைத் தாங்க முடிகிறது தெரியுமா! வாங்கப் பார்க்கலாம்...
ராகுல் காந்தி இப்போது கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை பாத யாத்திரை சென்று வருகிறார். காங்கிரஸ் வரலாற்றில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட மிகப் பெரிய நிகழ்வாக இது உள்ளது. இந்த பாத யாத்திரைக்குப் பெரியளவில் வரவேற்பு கிடைத்துள்ளதாக காங். நிர்வாகிகள் கூறுகின்றனர்.
இந்தியாவின் சாலைகளில் ராகுல் காந்தியுடன் இணைந்து பொதுமக்கள் நடக்கும் வீடியோ இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது. இப்போது டெல்லியில் ராகுல் காந்தி தனது பாத யாத்திரையே மேற்கொண்டு வருகிறார்.

ராகுல் காந்தி
சமீபத்தில் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு டெல்லியில் உள்ள சாந்தி வேனில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினார். அப்போது எடுக்கப்பட்ட படங்கள் இணையத்தில் பலராலும் பகிரப்பட்டது. பொதுவாகவே டெல்லியில் இந்த மாதங்களில் கடுங்குளிர் நிலவும். அதுவும் இந்தாண்டு வழக்கத்தைக் காட்டிலும் குளிர் கூடுதலாக உள்ளதாக வானிலை மையங்களே தெரிவித்துள்ளன. இதனால் டெல்லியில் அனைவருமே இறுக்கமான ஆடைகள், ஸ்வெட்டர்கள் அணிந்து கொண்டு தான் வீடுகளை விட்டு காலடி எடுத்து வைக்கிறார்கள். ஆனால், ராகுல் காந்தியோ இந்த குளிரிலும் தனது வழக்கமான டீ சர்ட், பேண்ட் உடன்தான் வலம் வருகிறார்.

நெட்டிசன்கள்
டெல்லி குளிரில் டி-சர்ட் மட்டும் அணிந்து நடக்கும் ராகுல் காந்தியின் படங்கள் இணையத்தில் வெளியாகி டிரெண்டாகி உள்ளனர். அவரது ஆதரவாளர்கள் ராகுலை சூப்பர் ஹியூமன் ரேஞ்சுக்கு பில்டப் தருகிறார்கள். அதேநேரம் மற்றொரு தரப்பினர் இது வெறும் அரசியல் ஸ்டண்ட் என்று விமர்சித்து வருகின்றனர். ஆனால், இந்த ஸ்டோரி அதைப் பற்றியது இல்லை. நம்மைச் சுற்றி எவ்வளவு குளிராக இருந்தாலும், நம்மைச் சுற்றியிருக்கும் சிலருக்கு மட்டும் எப்போதும் குளிரே அடிக்காது தெரியுமா.. அதற்கு என்ன காரணம். அதற்குப் பின்னால் இருக்கும் சயின்ஸ் பற்றி இதில் நாம் பார்க்கலாம்.

என்ன காரணம்
இது பரிணாம வளர்ச்சி மற்றும் மரபணு மாற்றங்களுடன் தொடர்புடையதாகும். நமது நரம்பு மண்டலத்தில் குறிப்பிட்ட நரம்பு செல் ஏற்பிகள் (nerve cell receptors) உள்ளன. இவை வெளிப்புற சுற்றுச்சூழலைப் பொறுத்து, நமது மூளைக்கு சிக்னல் அனுப்பி, அதற்கேற்ப நம்மைச் செயல்பட வைக்கிறது. 2021ஆம் ஆண்டு இது தொடர்பாக விரிவான ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில் சிலருக்கு இந்த ஏற்பிகளின் (receptors) செயல்பாட்டை மாற்றும் வகையில் சில மரபணு மாற்றங்கள் நடந்துள்ளதைக் கண்டுபிடித்துள்ளனர். இதனால் அவர்களால் அதிக வெப்பம் மற்றும் குளிர்ச்சியைத் தாங்க முடிகிறது என்பதையும் அவர்கள் கண்டறிந்தனர்.

தீவிர கிளைமேட்
சுமார் 800 கோடி பேரைக் கொண்ட உலக மக்கள்தொகையில் சுமார் 150 கோடி பேருக்குத் தீவிர வெப்பநிலையில் உழைக்கும் ஆற்றல் உள்ளதாக கணிக்கப்படுகிறது. அவர்களின் எலும்பு தசை நார்களில் a-actinin-3 என்ற புரதம் இல்லாததே இதற்குக் காரணம் என்று அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் ஹ்யூமன் ஜெனடிக்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் கூறப்பட்டுள்ளது. எலும்பு தசைகள் என்பது மெதுவாக இழுக்கும் தசை நார் மற்றும் வேகமான இழுக்கும் தசை நாரின் கலவையாகும். இதில் இருக்கும் மெதுவான இழுப்பு தசைகள் சகிப்புத்தன்மை மற்றும் எனர்ஜிக்கு காரணம். அதேநேரம் வேகமான இழுப்பு தசைகள் திடீரென ஆற்றல் வெளியாகக் காரணம்.

இதுதான் காரணம்
அதாவது விளையாட்டு வீரர்களால் குறிப்பிட்ட காலத்திற்கு, அதாவது விளையாடும் நேரத்தில் மட்டும் அதிக ஆற்றலுடன் செயல்பட முடியும். இந்த வேகமான இழுப்பு தசைகள் ஆக்ஸிஜன் இல்லாமல் ஆற்றலை உருவாக்குவதே இதற்குக் காரணம். இந்த ஏ-ஆக்டினின் -3 இல்லாத சிலருக்கு எலும்பு தசை தெர்மோஜெனீசிஸில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகக் குளிர்ந்த வெப்பநிலை நிலவினாலும் உடலைச் சற்று வெதுவெதுப்பாக வைத்துக் கொள்ள முடியும். இதுவே கடும் குளிரையும் சிலரால் எளிதாகக் கையாள முடியக் காரணமாக அமைகிறது.

ACTN-3 எதற்கு
இந்த ACTN-3 வேகத்திற்கான மரபணு என்றும் அழைக்கப்படுகிறது.. இது புரோட்டீன் ஆல்பா-ஆக்டினின்-3 ஐ வைத்துள்ளது. இது குறைந்த நேரத்திற்கு அதிக ஆற்றலைத் தருவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், உடற்பயிற்சி அல்லது விளையாட்டின்போது ஏற்படும் காயங்களுக்கும் இதுவே பொறுப்பு. இந்த ஆல்ஃபா-ஆக்டினின்-3 புரதங்கள் வேகமாக இழுக்கும் தசை நார்களில் மட்டுமே காணப்படுகின்றன. அதேநேரம் இந்த ACTN-3 இல்லாமல் போனால், அதைத் தசைகளில் எந்தவொரு மோசமான பாதிப்பையும் ஏற்படுத்தாது. இருப்பினும், குறுகிய நேரத்தில் அதிக ஆற்றல் தேவைப்படும் விளையாட்டுகளில் பங்கேற்பதில் இவர்களுக்குச் சிரமம் இருக்கும்.

பல காரணங்கள்
இது குறித்து டாக்டர் பிரபாத் ரஞ்சன் சின்ஹா கூறுகையில், "உடலில் உள்ள வெப்பநிலை நமது மூளையில் உள்ள தெர்மோர்குலேட்டரி மையத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது.. குளிர் சகிப்புத்தன்மை என்பது உடலியல் உள்ள வளர்சிதை மாற்ற விகிதம், உடல் கொழுப்பு மற்றும் மருத்துவ நிலைமைகளின் கலவையாகும்.. தைராக்ஸின் ஹார்மோன் தான் வெப்பத்தை உருவாக்குவதற்கும் குளிரைச் சகித்துக் கொள்வதற்கும் காரணமாகும். இதனால் சிலர் அதிக குளிரைத் தாங்க முடியும்" என்றார்.

சர்வைவல்
இந்த உலகில் குறிப்பிட்ட அளவிலான மக்களுக்கு மட்டுமே உடலில் அதிக குளிர் அல்லது அதிக வெப்பத்தைத் தாங்கும் ஆற்றல் இருக்கும்.. இது ஏதோ உடலில் திடீரென ஏற்பட்ட மாற்றமல்ல.. மில்லியன் கணக்கான ஆண்டுக்கால பரிணாம வளர்ச்சியானது சிலருக்கு மட்டும் இதுபோன்ற ஆற்றலைக் கொடுத்துள்ளது. Survival of the fittest என்பது தான் உலக நிதி அதற்கேற்ப நமது பரிணாம வளர்ச்சி இருக்கும். இதனால் தான் சிலருக்கு மட்டும் அதிக வெப்பம் அல்லது அதிக குளிரைத் தாங்கும் ஆற்றல் உள்ளது.












Click it and Unblock the Notifications