எய்ட்ஸ் நோயாளி உடலில் 216 நாட்களில்.. 32 முறை உருமாற்றம் அடைந்த கொரோனா.. தென் ஆப்பிரிக்காவில் ஷாக்
டெல்லி: எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் உடலில் சுமார் 216 நாட்களுக்கு இருந்த கொரோனா தொற்று, அவரது உடலில் குறைந்தபட்சம் 32 முறை உருமாறியுள்ளதாக ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவலைத் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளாக உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா பரவல் எப்போது முடிவுக்கு வரும் என யாருக்கும் தெரியவில்லை. கொரோனாவை சமாளிக்க ஒவ்வொரு நாடுகளும் பெரும் போரையே நடத்தி வருகின்றன.
அதிலும் உருமாறிய கொரோனா வகைகளும் நிலைமையை மேலும் மோசமாக்குகின்றன. உருமாறிய கொரோனாவுக்கு எதிராகத் தடுப்பூசிகளின் செயல்திறன் மாற வாய்ப்புள்ளதால் இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

36 வயது பெண்
இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் குறித்த தகவல்களை மெட்ராக்ஸிவ் என்ற மருத்துவ இதழில் வெளியிட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் வசிக்கும் பெண் ஒருவருக்குக் கடந்த 2006ஆம் ஆண்டு எய்ட்ஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 36 வயதான அப்பெண்ணின் உடலில் காலப்போக்கில் நோயெதிர்ப்பு சக்தி குறைந்துள்ளது.

216 நாட்கள்
அதைத் தொடர்ந்து அவருக்குக் கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. பொதுவாக, ஒருவரது உடலில் கொரோனா வைரஸ் 15 நாட்கள் முதல் 20 நாட்கள் வரை தான் இருக்கும். ஆனால், இவரது உடலில் நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாக இருந்ததால், கொரோனா வைரஸ் அவரது உடலில் சுமார் 216 நாட்கள் இருந்துள்ளது. இந்த நாட்களில் கொரோனா வைரஸ் குறைந்தபட்சம் 32 முறை உருமாறியுள்ளதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

32 முறை உருமாற்றம் அடைந்த கொரோனா
அந்தப் பெண்ணின் உடலிலிருந்த சமயத்தில் கொரோனா வைரஸ் புரத ஸ்பைக் 13 முறை மாறியுள்ளது. அதேபோல மற்ற மரபணு மாற்றம் வைரசில் 19 முறை நடந்துள்ளது. அந்தப் பெண்ணின் உடலில் கண்டறியப்பட்ட சில உருமாறிய கொரோனா கவலை ஏற்படுத்தும் வகையிலேயே உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். பிரிட்டனில் முதலில் கண்டறியப்பட்ட ஆல்பா வகை கொரோனாவின் E484K என்ற திரிபு, தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட பீட்டா வகை கொரோனாவில் N510Y திரிபு உள்ளிட்டவை அவரது உடலில் கண்டறியப்பட்டுள்ளது.

ஆராய்ச்சியாளர்கள் தகவல்
அதேநேரம் இந்த பெண்ணிடம் இருந்து மற்றவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவியதா என்பது குறித்துத் தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை என்ற ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், தென்னாப்பிரிக்காவின் குவாசுலு நடால் போன்ற பகுதிகளிலிருந்து புதிய வகை கொரோனா அதிகம் கண்டறியப்படுகிறது. இது தற்செயலான நிகழ்வு இல்லை. அங்கு 4 பேரில் 1 க்கும் மேற்பட்டவர்கள் எச்.ஐ.வி. இருக்கிறது. ஆனால், எய்ட்ஸ் நோயாளிகள் மூலம் கொரோனா அதிகம் பரவ வாய்ப்புள்ளதாக நம்மால் உறுதியாகக் கூறிவிட முடியாது என்றனர்.

கூடுதல் ஆய்வுகள் தேவை
இருப்பினும், எய்ட்ஸ் நோயாளிகள் மற்றும் கொரோனா தொற்றுக்கு ஆகியவற்றுக்கு இடையே உள்ள தொடர்பு குறித்துக் கூடுதல் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். அதிகப்படியான எய்ட்ஸ் நோயாளிகள் மத்தியில் கொரோனா இருந்தால், அவர்கள் உருமாறிய கொரோனாவை உருவாக்கும் தொழிற்சாலையாக மாறிவிடும் அபாயம் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் எச்சரித்தனர்.

எய்ட்ஸ் பரவல்
மேலும், நோயெதிர்ப்பு குறைவாக உள்ள நோயாளிகளின் உடலில் கொரோனா அதிக காலம் இருக்கிறது. அந்தப் பெண்ணின் உடலில் கொரோனா 200க்கும் மேற்பட்ட நாட்கள் இருந்தாலும், அறிகுறிகள் பெரியளவில் இல்லை. தென் ஆப்பிரிக்காவில் முதலில் எய்ட்ஸ் பரிசோதனைகள் அதிகம் நடத்த வேண்டும். இல்லையென்றால் உருமாறிய கொரோனா அதிகளவில் பரவ வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications