என்ன நண்பா ரெடியா..இன்று திண்டுக்கல்லுக்கு வரும் விஜய்! நோ பாலிடிக்ஸ்.. ரசிகர்களுக்கு பறந்த உத்தரவு!
திண்டுக்கல்: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் இன்று திண்டுக்கல் வருகை தருகிறார், தனது கடைசி படமான ஜனநாயகன் படத்தில் அவர் நடித்துவரும் நிலையில் அந்தப் படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல் கீழ்மலை பகுதியான தாண்டிக்குடியில் நடைபெற இருக்கிறது. அதே நேரத்தில் படப்பிடிப்பு என்பதால் கட்சியினர் யாரும் வர வேண்டாம் என தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், தற்போது அவரது கடைசி படமான ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு கட்சியை ஆரம்பிப்பதாக கூறிய அவர் விழுப்புரத்தில் நடைபெற்ற முதல் மாநில மாநாடு மூலம் நேரடியாக அரசியலில் குதித்துள்ளார்.
தொடர்ந்து பாஜக திமுகவுக்கு எதிராக தனது அரசியல் பயணம் இருக்கும் என அறிவித்த அவர், தற்போது மாவட்ட செயலாளர்கள் நியமனம், மண்டல வாரியாக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையில் நடைபெற்ற பூத் கமிட்டி மாநாடு பிரம்மாண்டமாக அமைந்ததில் விஜய் தரப்பு மகிழ்ச்சியாக இருக்கிறது. அதையே மதுரையிலும் தொடர வேண்டுமென விஜய் தரப்பு திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது. இன்னும் சில நாட்களில் மதுரை பூத் கமிட்டி மாநாடு தொடர்பான அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க ஏற்கனவே சொன்னது போல விஜய் தனது கடைசி படமான ஜனநாயகன்படத்தில் நடித்து வருகிறார்.
எச்.வினோத் இயக்கும் இந்த படம் அரசியல் படமாகவே இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்க அதற்கேற்றார் போல எங்க வீட்டுப் பிள்ளை எம்ஜிஆர் போல விஜய் சாட்டையோடு தோன்றிய போஸ்டர் சமூக வலைதளங்களில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. ஒருபுறம் அரசியல் மறுபுறம் சினிமா என தற்போதைக்கு இரட்டை குதிரை சவாரி செய்து வருகிறார் விஜய். இந்த நிலையில் கோவை மாநாடு முடிந்திருக்கும் நிலையில் மீண்டும் ஜனநாயகன் படப்பிடிப்பில் விஜய் கலந்து கொண்டுள்ளார்.
தற்போது படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெறுவதாக இருந்தது. அதில் நடிகர் விஜய் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அரசியல் வருகை காரணமாக கொடைக்கானலில் விஜயை வைத்து படப்பிடிப்பை நடத்த முடியாது என்பதால் அதன் கீழ் மலைப் பகுதியான தாண்டிக்குடியில் படப்பிடிப்பு நடக்கிறது. இதனால் கொடைக்கானல் செல்லாமல் நேரடியாகவே தாண்டி குடி செல்கிறார். விஜய் இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வரும் அவர் அங்கிருந்து சாலை மார்க்கமாக கொடைரோடு வழியாக தாண்டிக்குடி செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் வரும் தகவல் வெளியானதில் இருந்தே மதுரை விமான நிலையத்திலும் தாண்டிக்குடி செல்லும் முக்கிய பகுதிகளில் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications