திண்டுக்கல் அதிமுக மேயர் வேட்பாளர் இவங்கதானா? உற்சாகத்தில் தொண்டர்கள்.. சூடு பிடிக்கும் களம்
திண்டுக்கல் : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி அதிமுக சார்பில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், திண்டுக்கல்லில் ஒருவேளை அதிமுக பெரும்பான்மை பெற்றால் முன்னாள் மேயரும் அதிமுக அமைப்புச் செயலாளருமான மருதராஜின் மகளான பொன்முத்து மேயர் வேட்பாளராக முன்மொழியப்படும் வாய்ப்பிருப்பதாக அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19 ம் தேதி நடைபெற உள்ளது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி, ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.
தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியுள்ள நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தை பொருத்தவரை திண்டுக்கல் மாநகராட்சி பழனி கொடைக்கானல் ஒட்டன்சத்திரம் நகராட்சி கிடைக்கப்பெற்ற திமுக அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. தற்போது பாஜக கூட்டணியில் இருந்து விலகியுள்ள நிலையில் அதிமுக , தமாக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு போட்டியிடுகிறது.

அதிமுக வேட்பாளர் பட்டியல்
அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப் பட்டுள்ள நிலையில் அதில் குறிப்பிடத்தக்க முகங்களாக முன்னாள் அமைச்சர் சீனிவாசனின் மகன் ராஜ்மோகன், முன்னாள் மேயர் மருதராஜ் அவர்களின் மகன் பிரேம்குமார் என்கிற வீரமார்பன், சகோதரர் மகன் சுரேஷ்குமார், மகள் பொன்முத்து, ஏற்கனவே வார்டு மெம்பர்களாக இருந்தவர்கள், அவர்களின் மனைவிகள் என 47 பேர் போட்டியிடுகின்றனர். திண்டுக்கல் மாநகராட்சியில் நாற்பத்தி எட்டு வார்டுகள் உள்ள நிலையில் நாற்பத்தி ஏழு வார்டுகளில் அதிமுகவும் ஒரு வார்டில் தமிழ் மாநில காங்கிரஸ் ( மூப்பனார்) கட்சிக்கும் ஒதுக்கி உள்ளனர்.

திண்டுக்கல் மேயர் வேட்பாளர்
முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மகன் ராஜ்மோகன் நான்காவது வார்டில் போட்டியிட்டாலும், திண்டுக்கல் மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திண்டுக்கல் மாநகராட்சி தேர்தலில் அதிமுக ஒருவேளை பெரும்பான்மை பெற்றால் மேயராக முன்னாள் மேயர் மருதராஜ் மகள் பொன்முத்து தேர்வு செய்யப்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் மேயர் வேட்பாளராக முன்னிறுத்தப்படும் பொன்முத்து முன்னாள் மேயர் மருதராஜ் அவர்களின் மகள் என்பதோடு மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்களால் பெயர் சூட்டப்பட்டவர் .

தீவிர முயற்சி
விஷயம் அதுவல்ல தற்போதைய சூழ்நிலையில் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த பொன்முத்து மேயர் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. பண ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பலம் பெற்றதோடு முன்னாள் நகர்மன்ற தலைவரும், திண்டுக்கல் மாநகராட்சியின் மேயருமாகிய மருதராஜ் மற்றும் ஆதரவாளர்கள் தன் மகளை மட்டுமல்லாது மற்ற வார்டுகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களையும் எப்படியாவது வெற்றி பெற வைக்க வேண்டும் என களத்தில் இறங்கி செயல்பட்டு வருகின்றனர். திமுகவினர் 25க்கும் அதிகமான இடங்களில் வென்றால்தான் மேயராக பொன்முத்து தேர்ந்தெடுக்கப் பட வாய்ப்பு உள்ளதால் அதிகப்படியான இடங்களை பிடிக்க அதிமுகவினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

துணை மேயர் வேட்பாளர்
தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியல் படி பார்க்கும்போது பொன்முத்து தான் மேயர் வேட்பாளர் ஆகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும் துணை மேயர் பதவிக்கு முன்னாள் மேயரின் மகன் பிரேம்குமார் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மகன் ராஜ்மோகன் ஆகியோர் இடையே கடும் போட்டி ஏற்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. ஒருவேளை பொன்முத்து மேயரானால் துணை மேயர் பதவியை விட்டுக் கொடுக்க வேண்டி இருக்கும் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

களத்தில் திமுக
அதே நேரத்தில் திமுக சார்பிலும் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தீவிர தேர்தல் பணியாற்றி வருகின்றனர் அக்கட்சியினர். எப்படியாவது இந்த முறை திண்டுக்கல் மாநகராட்சியை முதன்முறையாக கைப்பற்றிவிட வேண்டும் என திமுக வினர் தீவிர களப் பணியாற்றி வருகின்றனர். அதே நேரத்தில் கூட்டணிக் கட்சிகளுக்கு சில வார்டுகளை ஒதுக்கியதால் திமுகவினர் அதிருப்தியில் உள்ளதாகவும், இருந்த போதும் கண்டிப்பாக இந்த முறை மாநகராட்சியை கைப்பற்றி விடுவோம் எனவும் திமுகவினர் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். அதே நேரத்தில் மேயர் வேட்பாளர் யார் என்பது தற்போது வெளியாகமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications