தேர்தலுக்கு பின் பண விநியோகம்? சர்ச்சையில் சிக்கிய அதிமுக பெண் கவுன்சிலர்..துணிப்பை நினைவுப் பரிசாம்
திண்டுக்கல் : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட 31வது வார்டு பகுதியில் அதிமுக பெண் கவுன்சிலர் ஒருவர் நினைவுப்பரிசு என்ற பெயரில் வீடு வீடாகச் சென்று பண விநியோகம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், கடந்த நில நாட்களுக்கு முன்னர் தமிழகம் முழுவதும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளையும் பெரும்பாலான நகராட்சி பேரூராட்சிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளே கைப்பற்றின.

திண்டுக்கல் மாநகராட்சி
திண்டுக்கல் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 48 வார்டுகளில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் 37 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன . குறிப்பாக மாநகராட்சியை கைப்பற்ற தேவையான 25 இடங்களுக்கும் 5 இடங்கள் கூடுதலாக அதாவது 30 வார்டுகளில் திமுக தனித்தே வென்றுள்ளது. திமுக 30 இடங்களிலும், கூட்டணி கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 இடங்களிலும், இந்திய காங்கிரஸ் கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்று மாநகராட்சியை கைப்பற்றியது.

படுதோல்வியை சந்தித்த அதிமுக
முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் என தமிழக அளவில் இரு பெரும் தலைவர்கள் இருந்த போதிலும் திண்டுக்கல் மாநகராட்சி கைவிட்டுப் போனது. மேலும் அவரவர் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ஒரு நகராட்சியைக் கூட கைப்பற்ற முடியவில்லை. திண்டுக்கல் மாநகராட்சியைப் பொறுத்தவரை அதிமுக படுதோல்வியை சந்தித்தது என்று தான் கூற வேண்டும். 48 வார்டுகளில் போட்டியிட்ட அதிமுக கூட்டணி 5 இடங்களில் மட்டுமே வென்றது.

அதிமுகவினர் புகார்
முன்னாள் அமைச்சர் சீனிவாசனின் மகன் ராஜ்மோகன், பகுதி கழக செயலாளர்கள் பாரதிமுருகனின் மனைவி உமாதேவி , மோகனின் மனைவி சத்தியவாணி, பாஸ்கரன், மேட்டுப்பட்டி அமலேற்பவ மேரி ஆகியோர் மட்டும் வெற்றி பெற்றனர். இதனால் அதிமுகவினர் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாயினர். கட்சியில் இருந்த பிளவு, முன்னாள் அமைச்சர்களின் ஒத்துழைப்பின்மை காரணமாகவே அதிமுக வேட்பாளர்கள் பல இடங்களில் தோல்வியடைந்ததாக புகார் கூறுகின்றனர் அதிமுகவினர்.

சர்ச்சையில் பெண் கவுன்சிலர்
இந்நிலையில் தான் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு துணிப்பைக்குள் வைத்து நினைவு பரிசு என்ற பெயரில் பண விநியோகம் செய்வதாக சர்ச்சையில் சிக்கியுள்ளார் அதிமுக பெண் கவுன்சிலர் ஒருவர். பொதுவாக தேர்தலுக்கு பிறகு இனிப்புகள் கொடுக்கப்படுவதுதான் வழக்கம். ஆனால் திண்டுக்கல் மாநகராட்சி 31வது வார்டு பகுதியில் அதிமுகவிற்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு மாமன்ற உறுப்பினர் உமாதேவி பாரதி முருகன் வீடு, வீடாக சென்று நினைவு பரிசு வழங்கி தனது நன்றியைத் தெரிவித்தார் என சமூக வலைதளங்களில் புகைப்படம் வெளியானது. அது தான் தற்போது சர்ச்சையாகியுள்ளது. தேர்தலுக்கு முன் வழங்கப்பட்ட டோக்கன்களுக்கு தற்போது பண விநியோகம் நடைபெறுவதாக திமுகவினர் குற்றம் சாட்டுகின்றனர்.












Click it and Unblock the Notifications