"தேர்தலில் களமிறங்க போகிறோம்.." அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் அண்ணாமலை.. முதல் இலக்கு என்ன தெரியுமா?
திண்டுக்கல்: தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் எப்போது நடந்தாலும் வீ தி லீடர்ஸ் அமைப்பினர் நிச்சயம் போட்டியிடும் என்று அந்த அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணாமலை கூறியுள்ளார். செங்கோட்டையில் கேள்வி எழுப்புவதற்கு முன்பு, உள்ளாட்சி அமைப்புகளில் கேள்வி எழுப்ப வேண்டும் என்றும் அதற்கு நல்ல வேட்பாளர்கள் தேவை எனவும் அவர் தெரிவித்தார்.
பழனியில் தன்னார்வலர்களால் சீரமைக்கப்பட்ட சண்முக நதியை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் விழாவில் வீ தி லீடர்ஸ் அமைப்பினர் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது மக்களிடையே பேசிய அண்ணாமலை, உள்ளாட்சி தேர்தல் எப்போது நடந்தாலும் அதில் தங்கள் அமைப்பினர் போட்டியிட போவதாக தெரிவித்தார்.

நிச்சயம் போட்டியிடுவோம்
அவர் மேலும், "இன்றைக்கு உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரம் பறிக்கப்பட்டு, பற்கள் பிடுங்கப்பட்ட நிலையில் உட்கார வைக்கப்பட்டுள்ளன. உள்ளாட்சி என்பது ஒரு தன்னாட்சி அமைப்பாக இருக்க வேண்டும்; ஆனால் இன்று எந்த அதிகாரமும் அவர்களிடம் இல்லை. அதனால் சொல்கிறோம்... தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் எப்போது நடந்தாலும், நமது அமைப்புகளை சேர்ந்த நல்லவர்கள் போட்டியிடப் போகிறார்கள். இதையெல்லாம் சரி செய்வது நமது கடமை. மாற்றம் இங்கிருந்து ஆரம்பித்தால்தான் மக்களுக்குப் பயன்படும்.
ஊழலற்ற நிர்வாகம்
டெல்லி செங்கோட்டையிலோ, மாநிலக் கோட்டையிலோ இருப்பவர்களிடம் கேள்வி கேட்பதற்கு முன்பு, நமது உள்ளாட்சியில் நாம் கேள்வி கேட்க வேண்டும். அந்தந்த பகுதிகளில் உள்ள நல்லவர்களை, வல்லவர்களை, மக்களுக்கு சேவை செய்யக்கூடியவர்களை அடையாளம் கண்டு, அவர்களை உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நீங்கள் அழைக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு ஊழலற்ற ஒரு உள்ளாட்சி நிர்வாகத்தை நாம் கொடுக்க வேண்டும்.
கேரளாவில் பஞ்சாயத்து தலைவர்களுக்கு நல்ல மரியாதை கொடுக்கப்படுகிறது. அங்குள்ள 950 பஞ்சாயத்து தலைவர்களுக்கு அரசு கார் வழங்கப்பட்டுள்ளது. 70% பஞ்சாயத்துகள் ஐ.எஸ்.ஓ தரச்சான்று பெற்றுள்ளன. இந்தியாவிலேயே பஞ்சாயத்து முறை அங்குதான் சிறப்பாக உள்ளது பிரதமரே ஒரு உள்ளூர் நிகழ்ச்சிக்குச் சென்றாலும், அந்த பஞ்சாயத்து தலைவருக்குத்தான் அங்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
உண்மையான மாற்றம்
எப்போது ஒரு ஊரின் உள்ளாட்சி தலைவருக்கு முன்னுரிமை கொடுத்து வேலை செய்ய வைக்கிறோமோ, அன்றுதான் அடிமட்டத்திலிருந்து உண்மையான மாற்றம் நடக்கும். இதனால் தான் நாங்கள் உள்ளாட்சி தேர்தலில் களமிறங்க போகிறோம் என்கிறார். அதில் போட்டியிட மக்கள் ஆதரவு பெற்ற நல்லவர்கள் தேவை. மத்திய, மாநில அரசுகளின் நிதியை முறையாக பயன்படுத்தி மக்களுக்கான அடிப்படை பிரச்சனைகளைச் சரிசெய்ய தெரிந்த நல்ல வேட்பாளர்கள் நமக்குத் தேவை.
மக்களுக்கு அறிவுரை
இன்று சண்முக நதியை சுத்தம் செய்து பழனி மக்களுக்கு அர்ப்பணித்துள்ள நிமல் ராகவன், கனகராஜன் உள்ளிட்ட தன்னார்வலர்களை பாராட்டுகிறேன். இனிமேல் இந்த நதி நமது பொறுப்பு. நாம் தான் சுத்தம் செய்ய வேண்டும். யாராவது குப்பை போட்டால் கேட்க வேண்டும். 8 வாரங்களுக்கு முன்பு கொசுக்கடியால் நிற்கக் கூட முடியாத அளவுக்கு இருந்த இந்த பகுதியைச் சுத்தம் செய்துள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் இரவில் பாதுகாப்பாக நடந்து செல்வதற்காக 45 சோலார் விளக்குகளையும் அமைத்துக் கொடுத்துள்ளனர்.
வெளிநாடுகளில் உள்ள தேம்ஸ் நதிக்கரையில் மக்கள் மாலையில் அமர்ந்து ஓய்வெடுப்பது போல், இங்கேயும் உள்ளூர் அமைப்புகள் மூலம் நாற்காலிகள் அமைத்து மக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளவும், குழந்தைகள் விளையாடவும் வசதிகளை மேம்படுத்த வேண்டும். இனிமேல் இங்கு யாரும் குப்பைகள் கொட்டாமல் இருப்பதை மக்களாகிய நீங்கள்தான் உறுதி செய்ய வேண்டும்" என்று அண்ணாமலை தெரிவித்தார்.




Click it and Unblock the Notifications
