திண்டுக்கல்லா? நத்தமா ?.. நல்லா அடிச்சுக்காட்டு..! திண்டுக்கல்லில் தத்தளிக்கும் அதிமுக..!?
திண்டுக்கல்: மழையால் சற்று குளிர்ந்திருக்கும் தமிழகம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. விரைவில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறலாம் என்ற தகவல் காரணமாக தமிழகத்தின் இருபெரும் கட்சிகளும் தங்கள் கூட்டணி தளபதிகளோடு தேர்தலை சந்தித்து வெற்றி வாகை சூட முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
எப்படியாவது நகர்புற உள்ளாட்சிகளை குறிப்பாக மாநகராட்சிகளை கைப்பற்ற திமுக, அதிமுக மும்முரத்துடன் உள்ளன. மற்ற மாவட்டங்களில் இரு கட்சிகளின் முக்கிய தலைவர்கள் ஆலோசனைக்கூட்டம், ரகசிய கூட்டம் என முண்டியடித்து வேலை பார்த்து வரும் நிலையில் திண்டுக்கல்லிலோ மூன்று பேரின் உள்குத்து அரசியலால் தடதடத்துக் கிடக்கிறது அதிமுக.

நத்தம் விஸ்வநாதன்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கும் ஐவர் குழுவில் இருந்த நத்தம் விஸ்வநாதன், 2016 தேர்தலின் போது பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக ஓரம் கட்டப்பட்டு , ஆத்தூரில் பலம் பொருந்திய திமுகவின் ஐ.பெரியசாமியிடம் தோல்வியடைந்தார். அதுவரை திண்டுக்கல் அதிமுகவை தன் கண்ணசைவில் வைத்திருந்த விஸ்வநாதனுக்கு அப்போதிருந்தே சரிவு முகம்தான்..

திண்டுக்கல் சீனிவாசன்
4 முறை எம்.பி., கட்சியின் பொருளாளர் என பதவிகளை ஆண்டு அனுபவித்து, தன்னால் வளர்த்துவிடப்பட்ட சிஸ்யப்பிள்ளை விஸ்வநாதனாலேயே ஓரம்கட்டப்பட்டு, 15 ஆண்டுகால அரசியல் வனவாசத்தினிடையே தக்க தருணம் பார்த்துக் கொண்டிருந்த திண்டுக்கல் சீனிவாசன், சசிகலாவின் தயவால் திண்டுக்கல்லில் வெற்றி பெற, ஆரம்பித்தது பழிவாங்கும் படலம். ஜெயலலிதா, ஓ.பி.எஸ்-க்கு அடுத்து மூன்றாம் இடத்தில் சீனியர் என்ற முறையில் அமைச்சர் பதவியில் வைத்து அழகு பார்க்கப்பட்ட சீனிவாசன், நத்தத்தையும், அவரது ஆதரவாளர்களையும் ஒரு கைபார்க்க தயங்கவில்லை.
மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு, ஆதரவாளர்களை ஓரம் கட்டுவது என கிறிஸ்டியானோ ரொனால்டோ போல இஷ்டத்துக்கும் பந்தாடிக்கொண்டிருந்தார். அதிமுக பிளவுக்கு பிறகு ஓபிஎஸ் அணியில் தஞ்சம் புகுந்தார் விஸ்வநாதன். சேஃப் ஜோனான சசிகலா - இ.பி.எஸ் தரப்பில் தங்கினார் சீனிவாசன். பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு மீண்டும் "இணைந்த கைகள்" ஆனாலும், தற்போது வரை ஆதரவாளர்கள் மூலம் இருவரும் "ஒரு கை" பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

முன்னாள் மேயர் மருதராஜ்
இவர்களுக்கு இடையில் தற்போது வரை சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருப்பவர் சாட்சாத் திண்டுக்கல் மாநகர முன்னாள் மேயரும், முன்னாள் மாவட்ட செயலாளரும், தற்போதைய அமைப்புச் செயலாளருமாகிய மருதராஜ் தான். இரு கைகளும் மாறி மாறி ஓங்க எங்கே செல்வது எனத் தெரியாமல் இருந்தவர் தற்போது தானும் நல்ல ஆட்டக்காரன் தான் என ஆதரவாளர்களை திரட்டி தனித்தவில் வாசிக்கத்தொடங்கியிருக்கிறார்.
வெற்றி ஒருபக்கம் இருந்தாலும் திமுகவை பொறுத்தவரை ஐ.பி., கை காட்டுபவர்தான் மேயர் வேட்பாளர் என்ற நிலை உள்ள நிலையில், அதிமுகவிலோ நத்தம் விஸ்வநாதனின் ஆதரவளரா? அல்லது மேயர் கனவில் வலம் வரும் திண்டுக்கல் சீனிவாசனின் இரு வாரிசுகளா..? அல்லது ஏற்கனவே மேயராக இருந்த மருதராஜ் அல்லது அவரின் வாரிசுகளா? என அல்லோலகல்லாப்படுகிறது திண்டுக்கல் அதிமுக.. இவர்களின் உள்குத்து அரசியல் காரணமாக, டி-20 உலகப்கோப்பையில் தோற்ற இந்திய அணி வீர்ர்கள் போல் "நான் இப்போ எங்க இருக்கேன்" என்ற மனநிலையில் உள்ளனர் திண்டுக்கல் அதிமுகவினர்..

முடிவுதான் என்ன?
திண்டுக்கல் நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி, பெரும்பாலான ஒன்றிய பெருந்தலைவர் தேர்தலில் தோல்வி, ஏன் திண்டுக்கல் ஒன்றிய தலைவர் தேர்தலிலேயே தோல்வி என சரிவைச் சந்தித்து வரும் திண்டுக்கல்லாரும், நிலக்கோட்டை இடைத்தேர்தலில் வெற்றி, நத்தம் ஒன்றியத்தை கைப்பற்றியது, மீண்டும் நத்தத்திலிருந்தே சட்டமன்றத்திற்குள் நுழைந்து "ஐ ஆம் பேக்" என கம்பேக் கொடுத்துள்ள நத்தத்தாரும் களமிறங்க, அடித்துக் காட்ட காத்துள்ளனர் ரத்தத்தின் ரத்தங்கள்..
எது எப்படி போனால் என்ன ...? நாம இருக்க இடம் தெரியாம இருந்துக்குவோம் என சைலண்ட் மோடில் உள்ளார் முன்னாள் எம்.எல்.ஏ.வும்,கழக அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளருமான வி.பி.பி.பரமசிவம்.












Click it and Unblock the Notifications