திண்டுக்கல் குமுளி 4 வழிச்சாலை.. பணி எப்போது தொடங்கும்? நிலம் கையகப்படுத்துவதில் என்ன திருப்பம்?
திண்டுக்கல் : திண்டுக்கல் - குமுளி இடையிலான 138 கி.மீ. சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை 16 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலை 183-ல் நிலம் கையகப்படுத்துவதற்கான புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதனால் நான்கு வழிச்சாலை திட்டம் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.. தற்போது இந்த திட்டத்தின் நிலை என்ன? நான்கு வழிச்சாலையாக மாறுவதற்கான வாய்ப்பு இருக்கிறதா?
திண்டுக்கல், செம்பட்டி, வத்தலக்குண்டு, தேவதானப்பட்டி, பெரியகுளம், தேனி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கூடலூர் வழியாக கேரள மாநிலம் குமுளியை சென்றடையும் இந்த சாலை சுமார் 138 கி.மீ. நீளம் கொண்டது.

திண்டுக்கல்லில் பணிகள் தாமதம்
இந்த சாலையை நான்கு வழிச்சாலையாக அமைக்க சுமார் 16 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்டது. இதுக்காகவே அப்போது நிலமும் கையகப்படுத்தப்பட்டது. ஆனால், இந்த வழித்தடத்தில் வாகன போக்குவரத்து குறைவாக இருப்பதாகக் கூறி, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நான்கு வழிச்சாலை திட்டத்தைக் கைவிட்டு, அகலப்படுத்தப்பட்ட இருவழிச்சாலையாக அமைத்தது.
திண்டுக்கல்லிலிருந்து வத்தலக்குண்டு வரையிலான 35 கி.மீ. சாலையை அமைக்கவே 4 ஆண்டுகளானது. அதன்பிறகு பெரியகுளம், தேனி வீரபாண்டி, உத்தமபாளையம், கம்பம் ஆகிய பகுதிகளில் புறவழிச்சாலைகள் அமைக்கும் பணிகளும் நீண்ட காலமாக நடைபெற்று முடிந்தன. இதனால், ஆரம்பத்தில் திட்டமிடப்பட்ட நான்கு வழிச்சாலை கனவு இன்னும் நிறைவேறாமல் உள்ளது.
அதிகரிக்கும் போக்குவரத்து
இப்போது இந்த சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக கொடைக்கானல் சுற்றுலா சீசன், சபரிமலை அய்யப்பன் கோவில் சீசன் ஆகிய காலங்களில் ஏராளமான வாகனங்கள் இந்த வழியாகச் செல்கின்றன.
மேலும் மூணாறு, தேக்கடி உள்ளிட்ட சுற்றுலா இடங்களுக்குச் செல்லும் வாகனங்களும் இந்தச் சாலையையே அதிகம் பயன்படுத்துகின்றன. இதனால் பல இடங்களில் டிராபிக் ஏற்படுவதுடன், விபத்துகளும் அதிகரிப்பதாக வாகன ஓட்டிகள் சொல்கிறார்கள்.
மீண்டும் எழும் கோரிக்கை
இதனிடையே, திண்டுக்கல் - குமுளி சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கவனம் திரும்பியுள்ளது. 2026-ம் வருடத்தில் தேசிய நெடுஞ்சாலை 183 தொடர்பாக நிலம் கையகப்படுத்தும் நிர்வாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக அக்டோபர் 28-ம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட சாலை பகுதிக்கான நிலம் கையகப்படுத்தும் நோக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இருந்தாலும், முழு 138 கி.மீ. சாலையிலும் பணிகள் எப்போது தொடங்கும் என்பது இன்னும் தெளிவாகவில்லை.
அதனால் இந்த திட்டத்தில் மாவட்ட நிர்வாகமும், திண்டுக்கல் மற்றும் தேனி தொகுதி எம்.பி.க்களும் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது... 16 வருஷமாகவே நீடிக்கும் இந்தக் கோரிக்கைக்கு எப்போது தீர்வு கிடைக்கும் என்பதே இப்பகுதி மக்களின் கேள்வியாக உள்ளது...!!!


Click it and Unblock the Notifications
