திண்டுக்கல்லில் கல்விப்பணிக்காக கிறிஸ்தவ அமைப்புக்கு தரப்பட்ட 2000 கோடி நிலம்.. ஐகோர்ட் கேள்வி
திண்டுக்கல்:திண்டுக்கல் மாநகரில் கல்விப்பணிக்காக கிறிஸ்தவ அமைப்புக்கு அரசு ஒதுக்கிய ரூ.2 ஆயிரம் கோடி நிலத்தை வணிக நோக்கில் பயன்படுத்துகிறார்களா என மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்வி நிறுவனங்களை நடத்துவதற்காக அரசு ஒதுக்கிய நிலத்தை வணிக நோக்கில் பயன்படுத்தி வருவது சட்டவிரோதம் என்றும் அந்த நிலங்களை அரசு மீட்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த தேவசகாயம், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

திண்டுக்கல் நகரில் பல ஏக்கர் நிலம் ஒரு கிறிஸ்தவ அமைப்புக்கு அன்றைய ஆங்கிலேயே அரசால் 1933ம் ஆண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலத்தை கல்விப்பணிக்காக மட்டும் (அதாவது மாணவர்கள் விடுதி, விளையாட்டு மைதானம், ஆசிரியர் குடியிருப்பு உள்ளிட்டவை) பயன்படுத்த வேண்டும் என்று 1933-ம் ஆண்டில் பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன. தற்போது அந்த கிறிஸ்தவ அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த நிலத்தின் மதிப்பு ரூ.2 ஆயிரம் கோடி என்று கூறப்படுகிறது
சமீபத்தில் இந்த நிபந்தனைகளை மீறி, அந்த நிலத்தில் வணிக வளாகம் உள்ளிட்டவை கட்டப்பட்டு உள்ளன. தனிநபர்களுக்கு விற்று உள்ளார்கள். ஆனால் இந்த நிலம் முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசுக்கு சொந்தமானது. அவ்வாறு இருக்கும்போது தனிநபர்களின் கட்டுப்பாட்டில் சென்றதை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.
இந்த நிலத்தை மீட்டு அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எனது மனுவின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுத்து அந்த நிலத்தை மீட்க உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் வக்கீல் மலையேந்திரன் ஆஜராகி, ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்வி நிறுவனங்களை நடத்துவதற்காக அரசு ஒதுக்கிய நிலத்தை வணிக நோக்கில் பயன்படுத்தி வருவது சட்டவிரோதம். எனவே உடனடியாக அந்த நிலத்தை அரசு மீட்க வேண்டும் என்றார். பின்னர் தமிழக அரசு வக்கீல் ஆஜராகி, இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். இதை பதிவு செய்து கொண்ட ஐகோர்ட் நீதிபதிகள், மேற்கண்ட நிலத்தை வணிக நோக்கில் பயன்படுத்தி உள்ளனரா? அந்த நிலத்தை மீட்பதில் எடுத்த நடவடிக்கை என்ன? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 19-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.



Click it and Unblock the Notifications
