துபாயில் களமிறங்கிய தமிழரின் நிறுவனம்.. மார்பக புற்றுநோய் விழிப்புணர்வில் பெண்கள் அசத்தல்!
துபாய்: உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதம் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நோய் குறித்து மக்களிடம் சரியான புரிதலை ஏற்படுத்தவும், தொடக்க நிலையிலேயே கண்டறிந்து உயிரைக் காக்கவும் அமீரகத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அரசு மற்றும் முன்னணி தனியார் நிறுவனங்கள் இணைந்து மராத்தான், நடைப்பயணம் போன்ற நிகழ்ச்சிகளை அக்டோபர் முழுவதும் துபாயில் தொடர்ந்து நடத்தி வருகின்றன.
அந்த வரிசையில், துபாயில் செயல்பட்டு வரும் முன்னணி நிறுவனமான 'அல் ரீம் குழுமம்' சார்பில் சிறப்பு மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற்றது. கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 6 மணி முதல் காலை 10 மணி வரை துபாயின் மிக முக்கியப் பகுதியான ஷேக் ஜாயித் சாலையில் இந்த விழிப்புணர்வு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இதில் அல் ரீம் குழுமத்தில் பணியாற்றும் ஏராளமான பெண் ஊழியர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். அவர்கள் மார்பகப் புற்றுநோய் குறித்த முக்கிய விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடியும், கோஷங்களை எழுப்பியபடியும் சாலையில் ஊர்வலமாகச் சென்றனர்.
மார்பகப் புற்றுநோய் குறித்த அறிகுறிகள் என்னென்ன, அதை ஆரம்பத்திலேயே பரிசோதித்து கண்டறிவது எப்படி, சரியான நேரத்தில் சிகிச்சை பெறுவதன் முக்கியத்துவம் என்ன என்பதைப் பொதுமக்களுக்கு மிக எளிய முறையில் புரியவைப்பதே இந்த நடைப்பயணத்தின் முதன்மை நோக்கமாகும். அதிகாலை நேரத்தில் சாலையில் சென்ற பலரையும் இந்த விழிப்புணர்வு ஊர்வலம் வெகுவாகக் கவர்ந்தது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை முன்னெடுத்த அல் ரீம் குழும நிறுவனமானது, தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த தொழிலதிபர் செய்யது அபுதாஹிர் என்பவரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டில் வெற்றிகரமாக இயங்கி வரும் ஒரு தமிழர் நிறுவனம், பெண்களின் நலனுக்காகவும் சமூக ஆரோக்கியத்திற்காகவும் முன்னெடுத்த இந்த நற்செயல் அமீரகத் தமிழர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications
