அரபு நாட்டுக்கு டிரைவர் வேலைக்கு போன அஜய்..கண் திறந்த அதிர்ஷ்ட தேவதை..ரூ.33 கோடி ஜாக்பாட்
துபாய்: தெலுங்கானாவில் இருந்து துபாய்க்கு டிரைவர் வேலைக்காக சென்ற அஜய் மீது அதிர்ஷ்ட தேவதையின் பார்வை விழுந்துள்ளது. நகை கடையில் டிரைவராக வேலை செய்யும் அஜய் வாங்கிய லாட்டரி சீட்டில் 15 மில்லியன் திர்ஹாம் அதாவது இந்தியா மதிப்பில் ரூ.33 கோடி பரிசு கிடைத்துள்ளது. தனக்கு லாட்டரியில் கிடைத்த பரிசுத் தொகையில் ஒரு தொண்டு நிறுவனத்தையும் அறக்கட்டளையை உருவாக்குவேன் என்று அஜய் கூறியுள்ளார்.
சிலரது ஜாதகத்தில் விபரீத ராஜயோகம்.. நீசபங்க ராஜயோகம் என்று சில யோகங்கள் இருக்கும். எப்படியாவது பணம் கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டும். சிலர் நாடு விட்டு நாடு சென்று வேலை செய்வார்கள். தங்களுக்கு சம்பளமாக வந்த பணத்தை லாட்டரி டிக்கெட்டுகள் வாங்குகின்றனர். கடந்த மாதம் தமிழர் ஒருவருக்கு லாட்டரியில் 67 கோடி கிடைத்தது. இந்த மாதம் தெலுங்கானாவை சேர்ந்த டிரைவருக்கு 33 கோடி ரூபாய் ஜாக்பாட் அடித்துள்ளது.

சம்பள வேலைக்கு வெளிநாடு போய் கோடீஸ்வரராக மாறிய அந்த அதிர்ஷ்டசாலி தெலங்கானா மாநிலம் கரீம்நகர் அருகே உள்ள ஜக்தியால் பகுதியைச் சேர்ந்த அஜய் ஓகுலா. கரீம்நகர் பகுதியை சேர்ந்த கணிசமானோர் அரபு நாடுகளில் வேலைக்கு செல்வது வழக்கம். அப்படித்தான் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அஜய், தனது குடும்பத்தை விட்டு விட்டு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வேலைக்காக சென்றார்.
அங்குள்ள நகைக்கடை ஒன்றில் டிரைவராக பணிபுரிந்து வந்த அஜய்க்கு மாத வருமானம் அந்நாட்டின் மதிப்பின்படி, 3,200 திர்ஹாம் மட்டுமே. தன்னுடைய சம்பள பணத்தில் சமீபத்தில் இவர் 15 மில்லியன் மதிப்பிலான துபாய் லாட்டரி பரிசு போட்டி டிக்கெட்டுகள் 2 வாங்கியுள்ளார். இவர் வாங்கிய லாட்டரி டிக்கெட்டுக்கு பரிசு கிடைத்துள்ளது. கொஞ்சநஞ்மல்ல 15 மில்லியன் திர்ஹாம் ஜாக்பாட் அடித்தது. இதன் மூலம் ஒரே நாளில் ரூ.33 கோடிக்கு அதிபதியானார் அஜய்.
தனக்கு கிடைத்த அதிர்ஷ்டத்தை இன்னமும் நம்பமுடியவில்லை என்று கூறுகிறார் அஜய். மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் அஜய், தனக்கு பரிசு விழுந்த செய்தியை தனது சொந்த ஊரில் உள்ள அம்மா மற்றும் குடும்பத்தினரிடம் கூறிய போது அவர்களும் முதலில் நம்பவில்லை என்றும் தெரிவித்தார். பரிசு விழுந்த செய்தி தற்போது புகைப்படங்களுடன் ஊடகங்களில் செய்தியாகவே வெளியாகியுள்ளது என்பதால் அவர்கள் நம்பியிருக்கின்றனர்.
துபாயில் இருந்து கிளம்புவதற்கு முன்னால் தனது குடும்பத்தினரை துபாய்க்கு சுற்றுலாவுக்கு அழைத்துள்ளார் அஜய். தனக்கு கிடைத்த பரிசு தொகையை கொண்டு முதலில் தனது கிராமத்தில் ஒரு வீடு கட்டப் போவதாக கூறிய அஜய், ஊரிலேயே கட்டுமான நிறுவனம் ஒன்றை அமைத்து தொழில் செய்யப்போவதாக கூறியுள்ளார். அதேபோல், இந்த தொகையில் ஒரு பகுதியை கொண்டு தனது கிராமம் மற்றும் பக்கத்து கிராமங்களின் மேம்பாட்டிற்கு உதவுவேன் என்றும் கூறினார்.












Click it and Unblock the Notifications