விராட் கோலி நடந்துகொண்டது சரியில்லை.. போன் போட்டு புகார் சொன்ன அணி வீரர்கள்.. வெளியான பரபர தகவல்
துபாய்: விராட் கோலி கேப்டனாக செயல்பட்ட விதம் சரியில்லை என்று இரண்டு சீனியர் வீரர்கள் பிசிசிஐ அமைப்பிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்ததாகவும், இதன் பிறகுதான் அவர் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகும் முடிவை அறிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்யும்போது அணி மிகவும் ஒற்றுமையாகவும் சிறப்பாகவும் தான் கிளம்பிச் சென்றது. ஆனால் உலக டெஸ்ட் சாம்பியன் பைனல் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி தோல்வி அடைந்த பிறகு எல்லாம் மாறிவிட்டது.
சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதி இன்னிங்ஸில் இந்திய அணி 170 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது தோல்விக்கு காரணம் ஆனது.

சொதப்பல் பேட்டிங்
டெஸ்ட் போட்டிகளில் மிகச்சிறப்பாக ஆடக்கூடிய அணி என்று பெயர் பெற்றது இந்தியா. எனவே இந்த தொடரில் இந்திய அணி தான் சாம்பியன் பட்டம் வெல்லும் என்பது பெரும்பாலானோர் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் அணி வீரர்கள், அதிலும் குறிப்பாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மிக மிக சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக நியூசிலாந்து அணி
கோப்பையை வென்றது.

பேட்டியில் விளாசித் தள்ளிய விராட் கோலி
போட்டி முடிந்த பிறகு நிகழ்ச்சியில் பேசிய கேப்டன் விராட் கோலி இந்திய பேட்ஸ்மேன்களை கடுமையாக சாடினார். பந்துவீச்சாளர்கள் மீது நாம் நெருக்கடியை அதிகரிக்கவேண்டும். விக்கெட் விழுந்து விடக்கூடாது என்பதற்காக மெல்ல மெல்ல ஆடிக்கொண்டிருந்தால், பந்துவீச்சாளர்களுக்கு உற்சாகம் பிறந்துவிடும். சரியான இடத்தில் பந்தை தொடர்ந்து வீசிக்கொண்டு இருப்பார்கள். கடைசியில் ரன்களும் சேராது விக்கெட்டும் விழுந்துவிடும் என்று சுட்டிக்காட்டினார் விராட் கோலி. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் புஜாரா அதிகமான பந்துகளை எதிர்கொண்டு குறைந்த ரன்களை சேகரித்ததை விராட்கோலி இப்படி குத்திக் காட்டி பேசினார் என்று அப்போது கூறப்பட்டது. மேலும் சிறப்பாக ஆடாத அஜிங்கிய ரஹானேவை டிரெஸ்ஸிங் ரூமில் வைத்து கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது.

போன் போட்டு சொன்ன வீரர்கள்
இந்த நிலையில்தான் புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இரு வீரர்களும் பிசிசிஐ செயலாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடந்தவை பற்றி கூறி தங்களை விராட்கோலி நடத்திய விதம் சரியில்லை என்று குற்றம்சாட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மேலும் சில வீரர்களிடம் விராட் கோலி கேப்டன்ஷிப் பற்றி பிசிசிஐ அமைப்பு சார்பில் ரகசியமாக சர்வே எடுக்கப்பட்டுள்ளது. அதில் கணிசமான வீரர்கள் விராட் கோலி தங்களை மரியாதையாக நடத்தவில்லை என்று குற்றம்சாட்டியதாக தெரிகிறது. இந்த நிலையில்தான் விராட் கோலி கேப்டன் பொறுப்பை துறப்பது நல்லது என்று அழுத்தம் தரப்பட்டது. அதை புரிந்துகொண்டு 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்து விட்டதாக பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது. 50 ஓவர் கிரிக்கெட் அணிக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விரைவில் விடுவிக்கப்படுவார் அதற்கான நடவடிக்கைகளை பிசிசிஐ எடுக்கும் என்றும் அந்த நாளிதழ் தெரிவிக்கிறது.
Recommended Video

விராட் கோலி ரசிகர்கள்
விளையாட்டில் ஆக்ரோஷம் காட்டக் கூடியவர் விராட்கோலி. அதே நேரம் மைதானத்துக்கு வெளியே அவர் சொந்த பகையை எடுத்துச் செல்வது கிடையாது. எதுவாக இருந்தாலும் அணி வெற்றிக்காக ஆக்ரோஷம் காட்டுவார். அவ்வளவுதான். இதற்காக பெரிய அளவில் லாபி செய்யப்பட்டு அவருக்கு தொல்லை கொடுப்பது சரி கிடையாது என்கிறார்கள் விராட் கோலி ரசிகர்கள். அதேநேரம் ஆவேசம் என்பது ஒரு கட்டுக்குள் இருக்க வேண்டும். அவமரியாதை செய்யும் அளவுக்கு செல்லக்கூடாது என்பது பிற சீனியர் வீரர்கள் ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

அஸ்வின் அல்ல
விராட் கோலி கேப்டன்ஷிப்புக்கு எதிராக கலக குரல் எழுப்பியது சீனியர் வீரர் அஸ்வின் என்று, ஒரு வதந்தி இரு நாட்களாக சுற்றி வந்தது. ஆனால், பின்னணியில், புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் இருப்பது இப்போது அம்பலமாகியுள்ளது. புஜாரா, ரஹானா ஆகிய இருவரில், ரஹானே வெகு நாட்களாகவே சரியாக ஆடுவதில்லை. எளிதான பந்துகளுக்கும் அவுட்டாகி நடையை கட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications