அமெரிக்கா, லண்டன் வேண்டவே வேண்டாம்.. துபாய் பக்கம் திரும்பும் இந்திய இளைஞர்கள்.. என்ன காரணம்?
துபாய்: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியர்கள் மேற்குல நாடுகளுக்கே விரும்பி செல்வார்கள். ஆனால், இப்போது நிலைமை மொத்தமாக மாறிவிட்டது. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற மேற்குலக நாடுகளை விடவே, இந்திய இளைஞர்கள் துபாய் செல்லவே அதிகம் விரும்புகிறார்களாம். துபாய் ரியல் எஸ்டேட் மார்கெட்டில் வீடுகளை வாங்கவே இவர்கள் விரும்புகின்றனர். இந்த திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
இத்தனை காலமாகக் கச்சா எண்ணெய்யை மட்டுமே நம்பி இருந்த மத்தியக் கிழக்கு நாடுகள் இப்போது தங்கள் இமேஜ்ஜை மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளனர். சர்வதேச பொருளாதார மையமாக மாறும் முயற்சிகளில் பல மத்தியக் கிழக்கு நாடுகள் இறங்கியுள்ளன. அதில் முன்னணியில் இருக்கும் நகரம் என்றால் அது ஐக்கிய அமீரகத்தின் துபாய் தான்.

துபாய்
கடந்த பல ஆண்டுகளாகவே துபாய் தன்னை ஒரு சர்வதேச மையமாக முன்னிலைப்படுத்துகிறது. இதனால் அங்கு ரியல் எஸ்டேட் மார்கெட்டும் வேகமாக மாறி, பல மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. இப்போது 30களில் உள்ள வசதியான இந்திய ஜென் Z தலைமுறையினரின் கவனம் துபாய் ரியல் எஸ்டேட் சந்தையில் திரும்பியுள்ளது. இந்த வயதில் இருக்கும் இந்தியர்கள் துபாயில் பெரியளவில் முதலீடு செய்கிறார்கள். இந்த தலைமுறையினர் துபாய் ரியல் எஸ்டேட்டை ஆடம்பரப் பொருளாக அல்லாமல், சரியான நிதி மைல்கல்லாகக் கருதுகின்றனர்.
இது தொடர்பாக ஹோம்லி யோர்ஸ் நிறுவனர் அலோக் பிரியதர்ஷி கூறுகையில், "துபாயின் முற்போக்கான குடியுரிமை சீர்திருத்தங்கள், ஜென் Z தலைமுறையினரை ஈர்க்கிறது. கொரோனாவுக்கு பிறகு நாம் வேலை செய்யும் முறையுமே கூட மொத்தமாக மாறியுள்ள நிலையில், பலரது கவனமும் துபாய் பக்கம் திரும்பியுள்ளது" என்றார்.
சட்டங்கள்
நீண்ட கால விசா, எளிமைப்படுத்தப்பட்ட சட்டங்கள் என துபாய் அரசு எடுத்த பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளும் பிளஸ் பாயிண்டாக அமைந்துவிட்டது. இதனால் மேற்குலக நாடுகளைக் காட்டிலும் துபாயில் முதலீடு செய்யவே இவர்கள் விரும்புகிறார்கள். இவர்கள் துபாயை ஒரு பாதுகாப்பான முதலீடாக மட்டுமின்றி, தங்களின் சர்வதேச அங்கீகாரத்திற்கான நுழைவாயிலாகவும் கருதுகிறார்கள்.
பல ஜென் Z இந்திய இளைஞர்களுக்கு, AED 1.5-2 மில்லியன், அதாவது ரூ.3.6 முதல் ரூ.5 கோடி மதிப்பிலான வீடுகளை வாங்கவே ஆர்வம் காட்டுகிறார்களாம். எளிமையான சட்டங்கள், வாடகை வருமானம் ஆகியவை எல்லாம் சேர்ந்து இந்தியர்களை துபாய் அதிகம் ஈர்க்கிறது.
வரி முறை
குறிப்பாக துபாயின் வரி முறையே இந்திய இளைஞர்களை ஈர்க்கும் முக்கிய காரணமாக இருக்கிறது.. அங்குச் சொத்து வரி இல்லை, மூலதன ஆதாய வரி இல்லை, மேலும் எளிமையான ஒழுங்குமுறை செயல்முறைகள் தான் உள்ளன. இவை இந்தியாவின் பல அடுக்கு வரிகள், முத்திரை வரிகள் மற்றும் ஒழுங்குமுறை செயல்முறையில் இருந்து முழுமையாக மாறுபட்டது. இந்த எளிமையான வரி அமைப்பைப் பல இளைஞர்களை ஈர்க்கிறதாம்.
மேலும், அங்கு வாடகை வருமானமும் கணிசமாகவே இருக்கிறது. துபாயில் ஒரு சொத்து வாங்கும்போது 6-8% வரை வாடகை மூலம் வருவாயாகக் கிடைக்கும். இது பெரும்பாலான நாடுகளில் கிடைக்கும் வாடகை வருமானத்தை விட அதிகம். இதுவும் கூட துபாயில் வீடு வாங்க ஜென் Z தலைமுறையினர் முடிவெடுக்க முக்கிய காரணமாக இருக்கிறது.
அதிகரிப்பு
இதுபோன்ற காரணங்களால் இந்திய இளைஞர்களின் கவனம் துபாய் பக்கம் திரும்பியுள்ளது. கடந்தாண்டு தொடக்கத்திலேயே இந்த ஆர்வம் 40% வரை அதிகரித்துள்ளதாக பிரியதர்ஷி கூறினார். வரும் ஆண்டுகளில் இந்த டிரெண்ட் மேலும் அதிகரிக்கவே செய்யுமாம்.. ஐரோப்பா அல்லது அமெரிக்கா நாடுகளை விடவும் துபாயில் இந்தியர்கள் செய்யும் முதலீடு அதிகரிக்கவே செய்யும் எனச் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications