செக்-அப் முடிந்து திரும்பும் போது காட்டாற்று வெள்ளம்! 3 கர்ப்பிணிகளுக்காக கடவுளாக வந்த ஆம்புலன்ஸ்
ஈரோடு: அந்தியூரை அடுத்த பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்திருந்த மூன்று கர்ப்பிணிகள் காட்டாற்று வெள்ளத்தால் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாத நிலையில் அவர்களை பாதுகாப்பாக இல்லத்திற்கு அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸ் டிரைவருக்கு பாராட்டுகள் குவிகின்றன. அதே சமயம் பாலம் அமைத்து தருமாறு அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக
குட்டையூர் கிராமத்தைச் சேர்ந்த மூன்று நிறைமாத கர்ப்பிணிப் பெண்கள் வந்திருந்தனர்.

பரிசோதனை முடிந்து அவர்கள் மீண்டும் ஊருக்குத் திரும்பவிருந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையால் வழியில் உள்ள ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அவர்களால் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாத இக்கட்டான சூழல் உருவானது.
இதையடுத்து, ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அவர்கள் மூவரும் வெள்ளத்தைக் கடந்து பாதுகாப்பாக குட்டையூருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆம்புலன்ஸ் வாகனத்தின் பாதி அளவிற்கு வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையிலும், அவர்கள் அனைவரும் பத்திரமாக தங்களது இல்லங்களுக்குக் கொண்டு சேர்க்கப்பட்டனர்.
சுமார் 300 குடும்பங்கள் வசிக்கும் குட்டையூர் பகுதிக்கு முறையான சாலை வசதிகள் இல்லாததால், மழைக் காலங்களில் ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு பேருந்துகளோ, பிற சாதாரண வாகனங்களோ செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
இதனால் அவசரத் தேவைகளுக்காகச் செல்வோர் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருவதால், இந்த ஆற்றில் பாலம் அமைத்துத் தர வேண்டும் என்ற தங்களது நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.



Click it and Unblock the Notifications
