வேட்பாளருக்கு முன்பே.. காங்கிரசுக்காக களமிறங்கிய திமுக..ஈரோடு கிழக்கில் ஜெயிச்சாகனுமே!அக்னிபரீட்சை
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா கடந்த 4ம் தேதி காலமான நிலையில் பிப்ரவரி 27 ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக கூட்டணியில் மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் கூட்டணிக்காக திமுக உடனே களமிறங்கி பிரசாரத்தை தொடங்கி உள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆளும் அரசு மீது எதிர்ப்பலை இல்லை என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதால் அமைச்சர்கள் முத்துச்சாமி, கேஎன் நேரு உள்ளிட்டவர்கள் பிரசாரத்தை தொடங்கி உள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சராகவும், தமிழக காங்கிரஸ் தலைவராகவும் இருந்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். இவரது மகன் திருமகன் ஈவெரா. இவர் கடந்த 2021ல் திமுக கூட்டணியில் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில் தான் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட திருமகன் ஈவெரா கடந்த 4ம் தேதி திடீரென காலமானார். இதையடுத்து ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காலியானது. அடுத்த 6 மாதத்துக்குள் சட்டசபை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

பிப்ரவரி 27 ல் இடைத்தேர்தல்
இந்நிலையில் உடனடியாக இந்திய தேர்தல் ஆணையம் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை அறிவித்தது. அதன்படி பிப்ரவரி மாதம் 27ம் தேதி ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் 31ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் திமுக போட்டியிடும் என கூறப்பட்டது. ஆனால் கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் இந்த தொகுதி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் வேட்பாளர் யார்?
காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடலாம். இல்லாவிட்டால் அவரது குடும்பத்தில் இருந்து வேறு யாராவது போட்டியிடலாம் என கூறப்படுகிறது. அதேபோல் அதிமுக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட உள்ளது. இதுதவிர ஓ பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், சீமான் ஆகியோரும் வேட்பாளர்களை நிறுத்தலாம் என கூறப்படுகிறது. இதனால் இந்த தொகுதியில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டிய கட்டாயம் திமுகவுக்கு உள்ளது.

திமுகவுக்கு அக்னி பரீட்சை
ஏனென்றால் கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் திமுக ஆட்சி நடக்கும் நிலையில் எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றன. குறிப்பாக தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. மின்கட்டணம், சொத்துவரி, பால் விலை உயர்வு செய்து மக்களை ஏமாற்றி உள்ளது என பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்துள்ளன. இந்த தேர்தலில் திமுக கூட்டணியான காங்கிரஸ் வேட்பாளர் தோற்றால் அது எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக அமையலாம். அதோடு திமுகவுக்கு பின்னடைவாக இருக்கும். இதனால் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் என்பது திமுகவுக்கு அக்னி பரீட்சையாக பார்க்கப்படுகிறது.

திமுக அமைச்சர்கள் பிரசாரம் துவக்கம்
இதனை திமுக மேலிடமும் உணர்ந்துள்ளது. இதனால் தான் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிப்பு வெளியாகாத நிலையில் திமுகவினர் பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், தமிழக வீட்டு வசதி துறை அமைச்சருமான முத்துச்சாமி மற்றும் நகராட்சி துறை அமைச்சர் கேஎன் நேரு ஆகியோர் நிர்வாகிகளுடன் வீடு வீடாக பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். ஈரோடு பெரியார் நகரில் இருந்து ஓட்டு பிரசாரம் தொடங்கி உள்ளது. வரும் நாட்களில் திமுகவின் முக்கிய தலைவர்களும், அமைச்சர்களும் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தற்போதே ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications