''எலக்ஷன் ஸ்பெஷலிஸ்ட்''.. ஈரோடு கிழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு கிடைத்த புதிய அடைமொழி!
ஈரோடு கிழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜி முழுவீச்சில் களப்பணி
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ''எலக்ஷன் ஸ்பெஷலிஸ்ட்'' என்ற புதிய அடைமொழியை சூட்டி அவரை கொண்டாடி வருகின்றனர் காங்கிரஸ் கட்சியினர்.
அந்தளவுக்கு காலை, மாலை என இரண்டு வேளைகளும் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள 3 வார்டுகளுக்கு ஒரு ரவுண்ட் அடித்து தேர்தல் பணிமனைகளில் என்ன வேலை நடக்கிறது என்பதை கண்கூடாக அறிந்துக் கொள்கிறார்.
நேற்றுக் கூட மிக கேசுவலாக பேண்ட் ஷர்ட்டில் 23வது வார்டு தேர்தல் பணிமனைக்கு சென்ற அமைச்சர் செந்தில்பாலாஜி, ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டு அமர்ந்து அங்கிருந்த கட்சிக்காரர்களிடம் தேர்தல் பணி தொடர்பாக பல கேள்விகளை எழுப்பினார்.

ஈரோடு கிழக்கு
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா அண்மையில் மாரடைப்பு காரணமாக காலமானார். இதையடுத்து ஈரோடு கிழக்குத் தொகுதி காலி என அறிவிக்கப்பட்டதுடன் இடைத்தேர்தல் தேதியையும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.

12 அமைச்சர்கள்
ஈரோடு கிழக்கு தொகுதியில் 12 அமைச்சர்களையும், 19 மாவட்டச் செயலாளர்களையும் தேர்தல் பொறுப்பாளர்களாக பணியமர்த்தியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். அந்த வகையில் தேர்தல் பொறுப்பாளர்களில் ஒருவரான அமைச்சர் செந்தில்பாலாஜி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட 17,18, மற்றும் 23வது வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று வார்டுகளிலும் அதிமுக ஆதிக்கம் அதிகம் இருக்கும் நிலையில், அதனை முறியடிக்கும் விதமாக அந்த மூன்று வார்டுகளையும் செந்தில்பாலாஜி வசம் ஒப்படைத்துள்ளார் அமைச்சர் முத்துசாமி.

களப்பணியில் வேகம்
அமைச்சர் செந்தில்பாலாஜியும் வழக்கம் போல் தனது கரூர் டீமை 17,18, மற்றும் 23வது வார்டுகளில் களமிறக்கி தேர்தல் பணிகளை கவனித்து வருகிறார். வாக்காளர்களை எந்த வகையில் எல்லாம் ஓட்டுக் கேட்டு அணுகலாம் என்ற வித்தையை அறிந்து வைத்துள்ள செந்தில்பாலாஜியின் எலெக்ஷன் டீம் லேப்டாப், பிரிண்டர் உடன் 3 வார்டுகளிலும் தனிப்பட்ட முறையில் மினி அலுவலகம் அமைத்து ஒர்க் அவுட் செய்து வருகிறது.

எலெக்ஷன் ஸ்பெஷலிஸ்ட்
தனக்கு தந்துள்ள 3 வார்டுகளிலும் கை சின்னத்துக்கு அதிக ஓட்டுக்கள் பெற்றுக்கொடுக்க செந்தில்பாலாஜி வகுக்கும் வியூகங்களை கண்கூடாக பார்க்கும் காங்கிரஸ் கட்சியினர் ''எலெக்ஷன் ஸ்பெஷலிஸ்ட்'' ஆக இருக்கிறாரே என புதிய அடைமொழி கொடுத்திருப்பதோடு புகழாரமும் சூட்டுகின்றனர்.












Click it and Unblock the Notifications