"இளைஞர்களுக்கு விரைவில் திருமணம் நடக்க" வேம்பு-அரச மரத்திற்கு திருமணம்.. ஈரோடு அருகே வினோத வழிபாடு
ஈரோடு அருகே திருமணம் ஆகாத இளைஞர்களுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று வேம்பு-அரச மரத்திற்கும் ஊர் மக்கள் திருமணம் நடத்தி வைத்துள்ளனர்.
சென்னிமலை: ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே இளைஞர்களுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று அரச மரத்திற்கும் வேம்பு மரத்திற்கும் ஊர் மக்கள் ஒன்றுகூடி விருந்து வைத்து தடபுடலாக திருமணம் நடத்தி வைத்தனர்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே எக்கட்டாம் பாளையம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சிக்கு உள்பட்ட சாணார்பாளையம் என்ற கிராமத்தில் செல்வவிநாயகர் கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு பின்பக்கம் ஒன்றையொன்று ஒட்டி வளர்ந்த வேப்ப மரமும் அரசமுரம் உள்ளது. இந்த அரசமரத்தை சிவனாகவும் வேப்ப மரத்தை பார்வதியாகவும் பாவித்து கிராம மக்கள் வணங்கி வருகின்றனர்.

திருமணம் ஆகாத இளைஞர்களுக்கு
மிகவும் பிரசித்தி பெற்றதாக கோவிலாக இந்தக் கோவில் அப்பகுதியில் அறியப்படுகிறது. இந்தக் கோவிலில், உள்ள வேம்பு மற்றும் அரச மரத்திற்கு திருமணம் செய்து விழா நடத்த அந்த ஊர் பொதுமக்கள் முடிவு செய்தனர். உலக அமைதி மற்றும் ஊரில் திருமணம் ஆகாமல் இருக்கும் இளைஞர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டியும் இந்த வழிபாட்டை கடைப்பிடிப்பதாக ஊர்மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

உண்மையான திருமணம் போன்று
இதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை காலை விநாயகர் பூஜையுடன் திருமண நிகழ்ச்சி தொடங்கியது. வாஸ்து சாந்தி, மகா பூர்ணாகுதி, மகா தீபாராதனை உள்ளிட்ட பூஜைகளும் நடைபெற்றன. அதன்பிறகு மறுநாள் காலை 10 மணிஅளவில் வேப்பமரத்துக்கு தாலி கட்டி திருமணம் நடத்தப்பட்டது. இந்த விழாவில் சாணார்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மக்களும் கலந்து கொண்டனர். உண்மையான திருமணம் போன்று பொதுமக்கள் அட்சதை தூவி வாழ்த்தினார்கள்.

தடபுடலாக நடந்த விருந்து
இந்த விழாவிற்கு வருகை தந்த பொதுமக்கள் அனைவருக்கும் தடல்புடலாக திருமண விருந்தும் நடைபெற்றது. விழாவிற்கு வந்திருந்த மக்கள் மொய் பணமும் கொடுத்தனர். இந்த வினோத திருவிழா குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது, "ஏராளமான இளைஞர்கள் மண வயதை கடந்தும் மணப்பெண் கிடைக்காமல் திருமணம் செய்யாமலே உள்ளனர். எனவே திருமணம் ஆகாமல் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் விரைவில் மணப்பெண் கிடைத்து நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும் உலக அமைதிக்காகவும் இந்த விழா நடைபெற்றது" என்றனர்.

மரங்களுக்கும் திருமணம் செய்து வைத்தால்
கடந்த மாத இறுதியில் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள சிதம்பரபுரம் என்ற கிராமத்தில் முத்தராம்மன் கோவில் வளாகத்தில் ஒரு அரசமரமும் வேப்ப மரத்திற்கும் திருமணம் செய்து வைத்து மக்கள் வழிபாடு நடத்தினர். மரங்களுக்கும் திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்ற ஐதீகம் அந்த கிராமத்து மக்கள் மத்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதன்படி கோவில் வளாகத்தில் இருக்கும் அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் திருமணம் செய்து வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

தாலி கட்டப்பட்டது
உண்மையாக ஒரு திருமணம் நடந்தால் எப்படி நடக்குமோ அதே போன்று வெகு விமர்சையாக இந்த திருமணம் நடைபெற்றது. கோவிலில் இருக்கும் இரு மரங்களுக்கும் மேள தாளங்கள் முழங்க தாலி கட்டும் நிகழ்வு நடைபெற்றது. சிறப்பு பூஜைகளும் அபிஷேக தீபாராதனைகளும் நடத்தப்பட்டு இரு மரங்களுக்கும் மஞ்சளால் ஆன மாங்கல்யம் கட்டப்பட்டது.












Click it and Unblock the Notifications