ஈரோட்டில் ஒரே நாள் இரவில் 5 கடைகளில் கொள்ளையர்கள் கைவரிசை! பட்டாசுகளை ஆற அமர செலக்ட் செய்து கொள்ளை!
ஈரோடு: ஈரோடு மாவட்டம் கொல்லம்பாளையத்தில் ஒரே இரவில் 5 பட்டாசு கடைகளைக் குறிவைத்த கொள்ளையர்கள் அங்கிருந்து 10 லட்சம் மதிப்பிலான நவீன ரக பேன்சி பட்டாசுகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியில், கரூர் பிரதான சாலையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் அனுமதியுடன் புதிதாக பத்துக்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் திறக்கப்பட்டு, கடந்த இரண்டு நாட்களாக பட்டாசு விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், அப்பகுதியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள பட்டாசு கடைகளை நோட்டமிட்ட மர்ம கொள்ளையர்கள், நேற்று ஒரே இரவில் 5 பட்டாசு கடைகளை குறிவைத்து அடுத்தடுத்து புகுந்து லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, இந்த ஆண்டு புதிதாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நவீன ரக பேன்சி பட்டாசுகள் மற்றும் பிரபல நிறுவனங்களின் பிராண்டட் பட்டாசுகளை மட்டும் தேர்வு செய்து கொள்ளையர்கள் எடுத்துச் சென்றிருப்பது பட்டாசு கடை உரிமையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், கொள்ளையர்கள் கடைகளுக்குள் புகுந்து அங்கிருந்த பட்டாசுகளை அவசர அவசரமாக அள்ளிச் செல்லாமல், ஒவ்வொரு ரகமாகப் பார்த்து தங்களுக்குத் தேவையான விலையுயர்ந்த பேன்சி பட்டாசுகளைப் பொறுமையாகத் தேர்வு செய்து எடுத்துச் செல்லும் பரபரப்பான காட்சிகள், அந்தந்த பட்டாசு கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளன.
இந்த சிசிடிவி காட்சிகளில், நள்ளிரவு நேரத்தில் கடைகளுக்குள் நுழையும் மர்ம நபர்கள், பட்டாசு பெட்டிகளை ஒவ்வொன்றாகப் பார்த்து தங்களுக்குத் தேவையான பட்டாசுகளைத் தேர்வு செய்து எடுத்துச் செல்லும் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
கொள்ளையடிக்கப்பட்ட பட்டாசுகளை ஒரே நேரத்தில் அதிக அளவில் எடுத்துச் செல்ல வாகனம் ஏதேனும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் பட்டாசு கடை உரிமையாளர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
ஒரே இரவில் ஐந்து கடைகளில் கொள்ளையடிக்கப்பட்ட பட்டாசுகளின் மொத்த மதிப்பு 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என பட்டாசு கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பட்டாசு கடை உரிமையாளர்கள் அளித்த புகார்களின் பேரில், ஈரோடு தாலுகா காவல் நிலையம் மற்றும் சூரம்பட்டி காவல் நிலைய போலீஸார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
சம்பந்தப்பட்ட கடைகளில் பதிவாகியுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார், அவர்கள் எத்தனை பேர், கொள்ளையடிக்கப்பட்ட பட்டாசுகளை எங்கு எடுத்துச் சென்றனர் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு நடைமுறைகள் மற்றும் சிரமங்களுக்கு இடையே அரசின் அனுமதி பெற்று பட்டாசு கடைகளைத் திறந்து வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளுக்கு, விற்பனை தொடங்கிய சில நாட்களிலேயே ஒரே இரவில் ஐந்து கடைகளில் கொள்ளை நடைபெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள பரபரப்பான காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்களை விரைவில் அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட பட்டாசு கடை உரிமையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.



Click it and Unblock the Notifications
