மொத்தமா வெளியே வரப் போகுது.. 4 பெரிய சிக்கல்கள்.. கையை பிசைந்த அதிமுக! கவனிக்கும் திமுக.. அப்போ பாஜக
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் 4 விஷயங்கள் அதிகம் கவனம் பெற்றுள்ளன. இந்த ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு மிகப்பெரிய டீஸராக பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பதவி ஏற்று ஒன்றரை வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இந்த நிலையில்தான் ஸ்டாலின் ஆட்சி முதல் அக்னி பரீட்சையை எதிர்கொள்கிறது. ஆட்சிக்கு வந்தபின் உள்ளாட்சி இடைத்தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களை சந்தித்து அதில் திமுக பிரம்மாண்ட வெற்றியும் பெற்றது.
தற்போது சட்டசபை தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆளும் கட்சி மீது மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது? அவர்களுக்கு ஆட்சி பிடித்து இருக்கிறதா? இல்லையா? என்பதை உணர்த்தும் தேர்தலாக இந்த இடைத்தேர்தல் உருவெடுக்க உள்ளது.

ஈரோடு
சட்டமன்ற உறுப்பினர் திருமகன் இயற்கை எய்திய நிலையில்,ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27-ம் தேதி நடைப்பெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடக்கும் என்று இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் பீவர் தொடங்கி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்தவர் ஈவெரா திருமகன். இவர் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஆவார். உடல்நிலை மோசமான நிலையில் ஈவெரா திருமகன் கடந்த ஜனவரி 4ம் தேதி மரணம் அடைந்ததார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார். இதையடுத்தே ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்தல் காரணமாக தமிழ்நாடு அரசியலில் 4 சிக்கல்கள் ஏற்பட்டு உள்ளன.

சிக்கல் 1
இந்த தொகுதியில் திமுக என்ன செய்ய போகிறது என்ற கேள்வி உள்ளது. கடந்த முறை நடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பாக ஈவெரா திருமகன் போட்டியிட்டு வென்றார். நியாயப்படி பார்த்தால் இங்கே காங்கிரஸ்தான் போட்டியிட வேண்டும். ஈவிகேஎஸ் இளங்கோவன் இங்கே போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. அல்லது இளங்கோவன் குடும்பத்தில் இருந்தே ஒருவர் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது. இளங்கோவன் அல்லது குடும்ப உறுப்பினர்கள் போட்டியிடும் பட்சத்தில் திமுக இந்த இடத்தை காங்கிரஸுக்கே கொடுக்கும். ஆனால் அவர்கள் போட்டியிடாத பட்சத்தில் திமுக காங்கிரசை களமிறக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் ஈரோடு கிழக்கு போன்ற கொங்கு மண்டல தொகுதியை இழக்க திமுகவும் விரும்பாது. இதில் காங்கிரசின் முடிவு எப்படி இருக்கும் என்பதை திமுகவும் கண்காணித்து வருகிறது.

சிக்கல் 2
இந்த தேர்தலில் அதிமுகவில் என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதாவது அதிமுகவில் எடப்பாடி - ஓபிஎஸ் மீண்டும் சேர்ந்து தேர்தலை சந்திப்பார்களா? அல்லது எடப்பாடிக்கு சாதகமாக தீர்ப்பு வந்து அவர் சார்பில் வேட்பாளர் களமிறங்குவாரா? அல்லது ஓ பன்னீர்செல்வத்திற்கு சாதகமாக தீர்ப்பு வந்து எடப்பாடி இறங்கி போக வேண்டிய நிலை ஏற்படுமா? அல்லது ஓபிஎஸ் - எடப்பாடி மோதலால் சின்னம் முடங்க வேண்டிய நிலை ஏற்படுமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அதிமுகவின் தீவிர உட்கட்சி மோதலால் நிலைமை இதைவிட மோசமாகும் வாய்ப்புகளும் கூட உள்ளன. அதிமுக என்ன செய்யும் என்ற கேள்வி உள்ளது.

சிக்கல் 3
கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இருந்தது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக கூட்டணிக்கு பாமக ஆதரவு இருந்தது. ஈரோடு கிழக்கில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் யுவராஜா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. பாமக ஆதரவு இருந்த காரணத்தால் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் மட்டுமின்றி வன்னியர்கள் ஆதரவு கிடைத்தது . இதனால்தான் யுவராஜா இரண்டாம் இடம் பிடிக்க முடிந்தது. 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் யுவராஜா தோல்வி அடைந்தார். ஆனால் இப்போது பாமக கூட்டணி இல்லை. 2011 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக இங்கே போட்டியிட்டது. அதன் மூலம் தேமுதிக வேட்பாளர் சந்திரகுமார் இங்கே வென்றார். அந்த தேமுதிகவும் அதிமுக கூட்டணியில் இல்லை என்ற நிலையில் அதிமுக என்ன செய்யும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாஜக தனித்து போட்டியிடுமா?
அதேபோல் பாஜக தனித்து போட்டியிடுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனென்றால் பாஜக கொங்கில் தன்னை கிங் என்று கூறி வருகிறது. லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டம் பார்க்கும் விதமாக பாஜக இங்கே தனித்து களமிறங்க யோசிக்கலாம். இங்கே எடுக்கும் வாக்கு சதவிகிதம் பாஜகவிற்கு லோக்சபா தேர்தலின் போது உதவும். ஒரு 7-8 சதவிகிதம் வாக்குகளை பெறுகிறார்கள் என்றால் லோக்சபா தேர்தலில் அதை சுட்டிக்காட்டி அதிக இடங்களை கூட்டணி கட்சிகளிடம் இருந்து பெற முடியும். இதனால் பாஜக தனித்து போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மொத்தமா வெளியே வரப் போகுது
மொத்தத்தில் இந்த இடைத்தேர்தல் காரணமாக தமிழ்நாடு அரசியல் நிலவரம் என்ன என்று மொத்தமாக வெளியே தெரிய போகிறது. அதாவது திமுக - காங்கிரஸ் கூட்டணி எப்படி இருக்கும்? அதிமுக உட்கட்சி மோதல் என்ன ஆகும் என்று தெரிந்துவிடும். அதிமுகவில் வரும் தேர்தல்களில் என்ன நடக்கும் என்றும் தெரிந்துவிடும். பாஜகவின் அரசியல் நிலைப்பாடு குறித்தும் தெரிந்துவிடும். இந்த ஒற்றை இடைத்தேர்தல் தமிழ்நாடு அரசியலில் நிலவும் ஏகப்பட்ட புதிர்களுக்கு விடை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications