பி பார்ம் மாணவி கடத்தி பலாத்காரம்.. குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்.. போலீஸ் விசாரணையில் அம்பலம்!
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் கல்லூரி மாணவி ஒருவர் கடத்தப்பட்டு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார் என்ற குற்றச்சாட்டுகள் போலியானவை என போலீஸார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் பி பார்ம் 2ஆம் ஆண்டு படிக்கும் 19 வயது மாணவி. கடந்த 10ஆம் தேதி தன்னை 4 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்று புதரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்திருந்தார்.
அந்த மாணவியின் செல்போன் எண்ணை வைத்து அவர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இதையடுத்து போலீஸார் மாணவி கடத்தப்பட்டதாக சொல்லப்படும் இடத்தில் கடந்த இரு தினங்களாக ஆய்வு நடத்தினர். அப்போது ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் மாணவி பயணித்த ஆட்டோ டிரைவர் குறித்த தகவல்கள் கிடைத்தன.

விசாரணை
மேலும் அந்த பகுதியில் இருந்த 100க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து அந்த பகுதி ஆட்டோ ஓட்டுநர்கள், உள்ளூர் மக்கள், சக கல்லூரி மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து அந்த ஆட்டோ ஓட்டுநரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் சம்பவம் நடந்ததாக சொல்லப்படும் தினத்தில் தான் ஒரு ஷாப்பிங் மாலில் பயணிகளை இறக்கிவிட்டுவிட்டு பாருக்கு சென்று மது அருந்தியாக தெரிவித்தார்.

பார்
இதையடுத்து ஷாப்பிங் மால், பார் உள்ளிட்ட இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் டிரைவர் சொல்லியது உண்மை என தெரிய வந்தது. இதையடுத்து மீண்டும் சிசிடிவி வீடியோ காட்சிகளை ஆய்வு செய்த போது அந்த மாணவி அவர் இறங்க வேண்டிய இடத்திற்கு அடுத்த ஸ்டாப்பிங்கில் இறங்கி 4 கி.மீ. தூரம் யாம்நாம்பேட்டை நோக்கி நடந்தே சென்றது தெரியவந்தது.

மாணவியிடம் கிடுக்கிபிடி
பின்னர் அங்கிருந்து மற்றொரு ஆட்டோவை எடுத்துக் கொண்டு அன்னோஜிகூடா என்ற இடத்திற்கு சென்று அங்கிருந்து தான் கடத்தப்பட்டதாக தாய்க்கு போன் மூலம் தெரிவித்ததும் தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீஸார் இது போன்ற ஆதாரங்களை திரட்டி மாணவியின் கிடுக்கிபிடி விசாரணை நடத்தினர்.

விளக்கமளிக்க மறுப்பு
அதில் மாணவி கூறியது அனைத்தும் பொய் என்பது தெரியவந்தது. சொந்த காரணங்களுக்காக, தான் வீட்டை விட்டு செல்ல திட்டமிட்டு இது போல் கடத்தல் நாடகத்தை ஆடியதாகவும் கவுரவம் காரணமாக தனது தாய் போலீஸாரிடம் செல்ல மாட்டார் என நினைத்து இது போன்று ஒரு நாடகத்தை நடத்தியதாகவும் தெரிவித்தார். எனினும் அந்த மாணவி கிழிந்த ஆடைகளுடன் மயக்க நிலையில் புதரில் கிடந்தது ஏன் என்பது குறித்து போலீஸார் விளக்கமளிக்க மறுத்துவிட்டனர்.


Click it and Unblock the Notifications
