”நானும் ரவுடி தான்” பொதுக்கூட்டத்தில் பொங்கிய தெலங்கானா பாஜக தலைவர் சஞ்சய்!
ஹைதராபாத்: அதிகாரம் இருப்பதால் டிஆர்எஸ் கட்சி நிர்வாகிகள் காவல்துறை துணையுடன் ரவுடியிசத்தில் ஈடுபட்டு வருவதாக தெலங்கானா பாஜக தலைவர் சஞ்சய் குற்றம்சாட்டியுள்ளார்.
Recommended Video
2023ம் ஆண்டு கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி அண்மையில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் ஆபரேஷன் சவுத் இந்தியா என்று சொல்லை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி இருந்தார். இதன்மூலம் தென் இந்தியா மாநிலங்களில் பாஜக ஆட்சியமைக்க தீவிரமாக செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார். இதற்காக பாஜக தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதேபோல் பாஜகவை எதிராக தென் இந்திய மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சியினர் கவனமாக செயல்பட்டு வருகின்றனர். அதேபோல் தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகர் ராவ், தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான மூன்றாவது கூட்டணியை அமைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதனால் தெலங்கானாவில் பாஜக தொண்டர்களின் செயல்பாடுகள் தீவிரமாகி வருகிறது.
அவ்வப்போது டிஆர்எஸ் - பாஜக தொண்டர்களிடையே மோதல் போக்கும் ஏற்படுகிறது. அண்மையில் சுதந்திர தின கொண்டாட்டத்தின் போதும், பாஜக - டிஆர்எஸ் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில் தெலங்கானா மாநிலம், ஜங்கான் பகுதியில் பாஜக சார்பாக பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. அதில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் சஞ்சய் கலந்துகொண்டார்.
அந்த பொதுக்கூட்டத்தில் சஞ்சய் பேசுகையில், தெலங்கானாவின் பல்வேறு பகுதிகளில் டிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் அராஜகமாக குண்டர்களை போல் ரவுடியிசத்தில் ஈடுபடுகிறார்கள். டிஆர்எஸ் கட்சிக்கு தொண்டர்களுக்கு பாஜக தொண்டர்கள் சளைத்தவர்கள் அல்ல. எங்கள் கட்சியின் தாதாக்கள் இருக்கிறார்கள். அவர்கள் மக்கள் நலனுக்காக பணியாற்றுபவர்கள்.
அதிகாரம் இருப்பதால் தான் முதல்வர் சந்திர சேகர் ராவ் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் திருடர்கள் போல் மாநிலத்தின் அனைத்து சொத்துக்களையும் ஆக்கிரமித்து வருகின்றனர். பணபலமும், அதிகாரமும் இருப்பதால் தான் காவல்துறையின் துணையுடன் ரவுடியிசத்தில் ஈடுபடுகிறார்கள். ஆனால் அக்கட்சியிடம் இருந்து ஏழை மக்களை காப்பதற்காக, பாஜக எந்த எல்லைக்கும் செல்லும் என்று தெரிவித்தார்.
அண்மைக் காலமாக தெலங்கானா மாநிலத்தில் பாஜகவின் எழுச்சி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் வரும் சட்டமன்றத் தேர்தல் டிஆர்எஸ் கட்சிக்கு, பாஜக சவாலளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications